அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

கேளுங்கள் தரப்படும் 12/23/2008



பத்திரிக்கை படிக்கும் ஆரம்பித்த காலங்களில் சிறுகதை, நகைச்சுவை, சினிமா செய்திகள், சுட சுட அன்றாட செய்திகள் இருந்தாலும். நான் விரும்பி படிக்க ஆரம்பித்தது கேள்வி-பதில் பகுதி தான். இந்த ஒரு பகுதியில் தான் கேள்வி கேட்பவர் மற்றும் பதில் கூறுபவரின் திறமையை ஒருசேர காணமுடியும். 

முதன்முதலில் படிக்க ஆரம்பித்தது தினத்தந்தியின் குருவியார் பதில்கள் தான். நிறைய நக்கல்..கொஞ்சம் தகவல்; நிறைய லொள்ளு.. கொஞ்சம் கண்ணியம் என முழுக்க முழுக்க சினிமா சம்பந்தபட்ட செய்திகளை கொண்டிருக்கும் கெள்வி-பதில் பகுதி அது. இன்றும் ரிலாக்ஸாக இருக்க குருவியாரின் பதில்களை படிக்கலாம். நான் கடைசியாக படிக்கும்போது (மச்சான்) நமீதாவின் சம்பந்தபட்ட செய்திகள் அதிகமாக இருந்தது. தவிர ஆண்டியார் பாடுகிறார், சாணக்கியன் சொல் மற்றும் கன்னித்தீவு பகுதிகளையும் தவற விடுவதில்லை

குமுதம் வார இதழில் அரசு பதில்களில் அரசியல் மற்றும் சினிமா செய்திகள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும், கொஞ்சமா விளையாட்டு சம்பந்த பட்ட செய்திகளும். பதில்கள் அனைத்தும் ரத்தின சுருக்கமாககும், அன்றைய சூழ்நிலைகளை ஒட்டியதாகவும் இருப்பது அதன் சிறப்பு. இந்த வாரம் அரசின் இந்த கீழ்க்கண்ட கேள்வி பதில் தான் இந்த பதிவுக்கு மூல காரணம்.
கேள்வி கேட்பது, பதில் சொல்வது இந்த இரண்டைப் பற்றி உங்கள் அபிப்ராயம்?
பதில் சொல்வதைக் காட்டிலும் கேள்வி கேட்பதுதான் மனித குலத்தை மேலும் முன்னேற்றிச் செல்லும் என்று படித்திருக்கிறேன்.

ஆனந்த விகடன் வார இதழில் மதன்/சுஜாதா பதில்கள். இவர்களது பதிலும் கிட்ட தட்ட அரசின் பதில் போல சினிமா, விளையாட்டு அரசியல் சம்பந்த பட்டதாக இருந்தாலும், இவர்களது தனிச்சிறப்பு அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த பதில்களே; அதையும் சாமானியர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்குவதே. இலக்கியவாதி சுஜாதவின் "கற்றதும் பெற்றதும்" நூலும். கார்ட்டூனிஸ்ட் மதனின் "வந்தார்கள்.. வென்றார்கள்.. சென்றார்கள்" நூலும் இதற்கு சான்று. 

தினமலரின் வாரமலர் அந்துமணி பதில்கள், சமூக மற்றும் அரசியல் சம்பந்த பட்ட பதில்களை இங்கே அதிகமாக காணமுடியும். அந்துமணியின் பதில்களில் பெண்ணியவாதமும் அறிவுரைகளும் (புத்தி சொல்றாராம்) நிறைந்து இருக்கும், இருந்தும் "அந்த" மாதிரி சர்வே சம்பந்த பட்ட பதில்களை மாதம் ஒருமுறை படிக்க முடியும்.

 வசந்தம் என்று ஒரு இலவச இணைப்பு வாரந்தோறும் ஞாயிறன்று தினகரன் இதழுடன் வந்தது. அந்நாளில் "கேளுங்கள் தரப்படும்" எனும் தலைப்பில் "சின்னராஜு" என்பவர் இலக்கியம், சமூக, அரசியல், சினிமா, விளையாட்டு என பலதரப்பட்ட செய்திகளை இவரது கேள்வி-பதில் பகுதியில் அள்ளி தெளித்திருப்பார். கால சுழலினால் இப்போது என்னால் இந்த இதழை என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றாலும் எனது தமிழார்வத்திற்கு(தலைப்பிற்கும்) இவரும் ஒரு காரணம். கேள்வி பதில் என இல்லாமல், கதை, கட்டுரை என இவரது பங்கு "வசந்தம்" முழுவதும் வசந்தம் வீசச் செய்யும். துரதிர்ஷ்டவசமாக இவரை பற்றி எனக்கு வேறெந்த தகவலும் தெரியாது. தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொண்டால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பத்திரிக்கைகள் சில சமயங்களில் தாங்களே கேள்விகளை எழுதிவிடுவதாக கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக கேள்வியும் நானே பதிலும் நானே என எழுதி வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி மட்டுமே. தான் சொல்ல விரும்பும் செய்தியை கடிதமாக வெளியிட்ட இவர், அதிக மக்களை விரைவாக சென்றடைய கண்டறிந்த வழிதான் இந்த கேள்வி பதில் பகுதி. இவரது பதில்களிலே என்றென்றும் மறக்கமுடியாதது சர்க்காரியா கமிஷன் முன் "கனிமொழி யார்?" என்ற கேள்விக்கு இவரது புத்திசாலித்தன்மான பதில் தான்.  கேள்வி கேட்டவனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் கேனையனாக்கிய பதில் அது. பதில் இது தான், "கனிமொழி எனது துணைவியார் ராஜாத்தி அம்மையாரின் புதல்வி". இப்படி பதிலளித்த அதே கருணாநிதி தான் "தினகரன் கொலை சம்பந்தபட்ட கேள்விக்கு".. "நீதாண்டா கொலைகாரன்" என்று பதிலளித்து "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்று நிரூபித்தார். 

 தமிழக்த்தில் வெளிவரும் பத்திரிக்கைகள் "கேள்வி-பதில்" என்றொரு பகுதியை கண்டிப்பாக இடம் பெறும்படி பார்த்துக் கொண்டன. மாத்ரூபூதமும், நாராயண ரெட்டியும் உடலுறவு மற்றும் பாலியல் சம்பந்தபட்ட பதில்களை பார்த்துக் கொண்டனர்.

தொலைகாட்சிகள் இதற்கு விதி விலக்கு; கேள்வி-பதில் சம்பந்த பட்ட நிகழ்ச்சி என்று ஒன்றே கிடையாது. ஏதாவது ஒரு பண்டிகை/விடுமுறை நாளில் அன்றைய பிரபல சினிமா சம்பந்தபட்ட பிரமுகத்தை அவர் காலையில் ஆய் போவதிலிருந்து இரவு கொட்டாவி விட்டு தூங்குவது வரைக்கும் "பிரபலத்துடன் ஒரு நாள்" எனவும் "பேட்டி" என்ற பெயரில், "அந்த நடிகையை/நடிகரை கட்டிபிடிக்கும் போது என்ன/எப்படி உணர்ந்தீர்கள்?" என்ற சமூக விழிப்புணர்வை ஏறப்டுத்த கூடிய கேள்விகளும்(அசிங்கங்களும்) அரங்கேறின. 

 இந்த மாதிரி நிகழ்ச்சிகள், சினிமா சம்பந்தபட்டவர்கள் எல்லாருமே "டுபுக்குகள்" என்ற எண்ணத்த ஏற்படுத்த தவறவில்லை. ஆனால் அதுவல்ல உண்மை, உதாரணத்திற்கு, நடிகை கஸ்தூரி மிகச்சிறந்த அறிவாளி, மிஸ். சென்னை பட்டம் பெற்றவர். "கோன் பனேகா குரோர்பதி"  நிகழ்ச்சிக்கு கேள்விகளை தயார் செய்யும் பிரிவில் பணிபுரிந்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவரது தம்பி ஆசியாவிலேயே கணிதத்தில் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தார். இவரை போல த்ரிஷா, விவேக், கமலஹாசன் மற்றும் அனைத்து கவிஞர்களும் திறமைசாலிகள் தான், இவர்களிடமாவது ஓரவளவு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கிறார்களா? அதுவும் இல்லை. யார் மட்டமான கேள்வி கேட்பது என ஒரு மறைமுக போட்டியே நடைபெறுகிறது தொலைக்காட்சிகளுக்கிடையே. 

 ஆனால் அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு தொலைக்காட்சிகள் இந்த மாதிரி தவறுகளை அதிகம் செய்வதில்லை. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில், காதல் மன்னன் ஜெமினி கணேசன், இயக்குனர் பாலா, கவிஞர் வைரமுத்து மற்றும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஆகியோர்களின் பேட்டியை கேட்கும்/காணும் வாய்ப்பு கிடைத்தது. 

 உதாரணமாக கவிஞரிடம் நிருபர் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டார் "தனிமனித துதி பாடி, பாட்டெழுதிகிறேர்களே, இது ஆரோக்கியமான விசயமா?". அதற்கு அந்த வெள்ளாடை வேந்தர் ," ஒரு பிரபலம் சொல்வதை கேட்க பலர் இருக்கிறார்கள் எனில், அவரது குணநலன்களை உயர்த்தி சொல்லலாம், அது கேட்கும் சாமானியனுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்" என்று பொருள்பட பதிலளித்தார். விடை பெறும் போது, கேள்வி கேட்டவரை பாராட்டவும் செய்தார்.

 அதேபோல, கமலிடம் ஒருவர், "மும்பை எக்ஸ்பிரஸ் - நஷ்டத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?" என்றார். "நஷ்டம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? நாம் இழந்த எதை திரும்ப பெறமுடியாதோ அது தான் நஷ்டம், அந்த வகையில் நேரத்தை மட்டுமே இழந்தேன் அதிலும் சில விசயங்களை கற்றுக்கொண்டேன்" என்றார் முத்தாய்பாக. 

 தற்போது உள்ளூர் தொலைக்காட்சிகளில், விஜய் தொலைக்காட்சி இதற்கு கொஞ்சம் விதி விலக்காக உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர்கள் தான் "புதிரா? புனிதமா?" என மாத்ரூபூததை வைத்து பாலியல் கேள்வி-பதில் நிகழ்ச்சியை வழங்கினார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் நிறைய எழுத்தாளர்களை இப்போது காண முடிவது மனதுக்கு இதமளிக்கிறது, இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக தோணுகிறது.


6 பின்னூட்டங்கள்:

Anonymous said...
சுஜாதா, மதன் பத்தில்கள் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
உங்க ஊரிலை 'சிரித்திரன்சுந்தர்' பத்தில்கள் நல்லா இருக்கும் 'சுடர் ஒளியில்' 'பித்தன்' பதில்களும் சுவையாக இருக்கும்

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//சுஜாதா, மதன் பத்தில்கள் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும்//
மிகச்சரியே...

கவின்,
வருகைக்கு நன்றி!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//உங்க ஊரிலை 'சிரித்திரன்சுந்தர்' பத்தில்கள் நல்லா இருக்கும் 'சுடர் ஒளியில்' 'பித்தன்' பதில்களும் சுவையாக இருக்கும்//
மேலதிக தகவலுக்கு நன்றி கவின்!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
Naanum arasu, madan, sujatha ivargalin rasigan... Lollum irukkum adhe nerathula sindikkavum vaikkum.. adhuvum arasu nadigaigal poto poto oru ili ilipaare... he he!!! :)

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
adhuvum arasu nadigaigal poto poto oru ili ilipaare... he he!!!
//
ஜனரஞ்சகமாம்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------