அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

பொருளாதார பிரச்சினையும் தீர்வும் 12/09/2008

2007ம் ஆண்டு நான்காவது காலாண்டில் ஆரம்பித்தது இந்த பிரச்சினை. முதலில் (Real Estate because of Subprime loans) வீட்டு கட்டுமான துறை மற்றும் Mortgage வங்கியில் தான் ஆரம்பித்தது. அடுத்து நிதி மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதோடு நிற்காத இந்த புற்றுநோய் இப்போது மிக வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. Circuit City,  At&T, Sony,  Siemens, Citigroup, WaMu என பட்டியல் நீளுகிறது. பாதிப்பே வராது என்று நினைத்த Energy Sector-ம் (Chesapeake Energy)  அடி வாங்க ஆரம்பித்து விட்டது.

முதலில் அனைவரும் இதை ஒரு துறை சார்ந்த சறுக்கலாகத் தான் பார்த்தனர். அதனால தான் இது 7-8 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதும் வரும் வீழ்ச்சி என்றனர். அதன் பிறகு இது வேர்விட்ட போது தான் தெரிந்தது அது பெரிய ஆலமரம் என்று. கிட்ட தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு, இப்போ தான் அமெரிக்கா, தாங்கள் நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருப்பதாக ஒத்துக் கொண்டது, பலத்த காயத்துடன்.

இது அனைத்துக்கும் ஒரே காரணம் மக்களின் ஆசை தான். ”ஆசையே அழிவிற்ககு காரணம்” என புத்தர் ஆசையை ஒழிக்க ஆசை பட்டாலும். ஆசை தான் முன்னேற்றத்திற்கு அடிகோல் என்பது என் எண்ணம். ஆனால் மக்கள் கொண்டது பேராசை. அதன் பலன் தான் இந்த பீதி மற்றும் வீழ்ச்சி. 

உதாரணத்துக்கு, 2006 Jun-ல் எங்கள் ஊரில் ஒரு செண்ட் விவசாய நிலம் ரூ.2.5 ஆயிரம், அதே இடம் இப்போ ”ஒரு செண்ட் ரூ.23 ஆயிரம்” என்று ஏறிவிட்டது, இரண்டு வருடத்தில் அதன் விலை கிட்டதட்ட 10 மடங்கு. என்னதான் உருண்டு புரண்டு வேலை செய்தாலும் ஒரு ஏக்கரில் 30-40 நெல் மூட்டைக்கு மேல் விளையாது. பின்னர் எதனால் இந்த விலை? 

மதுரை நகரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் இடங்களை செண்ட் 5-10 லட்சத்திற்கு விற்று விட்டு அதே விலையில் அதிக நிலம் வாங்க ஆசைப்படுவது தான். நகரில் இருக்கும் நிலத்தை விற்பதற்கு வலை விரிப்பதில் இருந்து கிராமத்திலிருக்கும் நிலத்தை வாங்க தூண்டில் போடுவது வரைக்கும் (பாழாய்ப் போன) புரோக்கர்களின் பங்கு அளப்பரிது. காரணம் பேராசை. ரெண்டு (நாலு?) கமிஷன் கிடைக்குமே. அதே வேலையை தான் அமெரிக்காவில் Speculative Traders  செய்தனர். 

இவையாவும் நடந்து முடிந்து போன விசயங்கள், அதன் பலனாக நடந்து கொண்டிருப்பது ஆட்குறைப்பு மற்றும் திவால். காரணம் வாடிக்கையாளர்களுக்கு(மக்களுக்கு) உறுதியளித்த லாபத்தை கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இது தான் ஆயுதம். இதுவரை 533,000 பேர் வேலை இழந்துள்ளனர் அமெரிக்காவில் மட்டும். இது சரியான தீர்வா? என்னை பொருத்த வரையில் இது ஒரு மட்டமான தீர்வு தான்.

உதாரணத்துக்கு வேலையிழந்த ஒருவர் தன் வண்டி/வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போகலாம், அதனால் அவர் வீட்டை/வண்டியை இழக்க வேண்டியிருக்கும், அதனால் அவருக்கு கடன் கொடுத்த வங்கி பாதிக்கப்படும், அது வங்கி ஊழியர்களை பாதிக்கும், அப்படியே படிப்படியாக சங்கிலித் தொடர் போல் எல்லோரையும் பாதிக்கும். இதைத் தான் RIPPLE EFFECT  என்பார்கள். 

பிறகு என்ன தான் தீர்வு? நஷ்டத்தை பகிர்ந்து கொள்வது தான் எனக்குத் தெரிந்த சுமூகமான தீர்வு. ஊழியர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வரை பகிர்ந்து கொண்டால் இதை சமாளிக்க முடியும். இதையே தான் “பகிர்ந்துண்டால் பசி தீரும்.. தானாய் தின்றால் வீணாப் போகும்”  என்று பழமொழியாக எங்க ஊரில் சொல்வாங்க. 

உதாரணத்துக்கு 30% பட்ஜெட் குறைப்பு என்றால், ஆட்களைக் குறைக்காமல், சம்பளத்தை குறைக்கலாம். அதாவது 100% ஊதியம் வாங்கிய ஊழியர் 70% ஒத்துக் கொள்ளலாம். இங்கு நஷ்டம் பரவலாக்க படுகிறது. நீங்கள் கேட்பது புரிகிறது, இந்த 70% வைத்து கொண்டு, வீட்டு/கார் கடன் கட்டி குடும்ப வாழ்க்கை வாழ்வதெப்படி, நான் முன்னர் சொன்ன மாதிரி நஷ்டம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். வங்கிக் கடன் வட்டி குறைக்கப் பட்டு விட்ட்து. பெட்ரோல் விலையும் குறைந்து விட்டது, ரூ.50லட்சத்துக்கு விலை சொன்ன வீடு, ரூ.30லட்சத்துக்கும் கீழே வந்துவிட்டதே. $50க்கு விற்ற சிட்டி பேங்கின் பங்கு இப்போ $8 தானே, மற்ற விலைகளும் பரவலாக குறைய தொடங்கியுள்ளன. அதிர்ஷ்ட வசமாக சில நிறுவனங்கள் இதை கடைபிடிக்க தொடங்கியிருப்பது வரவேற்கதக்கது.

குறைந்தது ஆறு மாதத்திற்கான செலவு தொகையை சேமித்து வைத்துக் கொள்ளவும், ஆபத்தான காலங்களில் உதவலாம்.

Situation Song for Relaxation. 



0 பின்னூட்டங்கள்: