அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மீட்டிங்கிலிருந்து தப்பிக்க முத்தான பத்து வழிகள் 2/24/2009

ரிசஷன் வந்தாலும் வந்துச்சு, ஆளாலுக்கு மீட்டிங் போட்டு தாக்குறாக. ரெண்டு மூனு மெயில் அனுப்பி பேசி முடிக்க வேண்டிய சின்ன வேலையா இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, தலைக்கு மேலே தொங்கும் கத்தியிலிருந்து தப்பி ஒப்பேத்திக்கிறோம்.

இதுக்கிடையில இந்த மீட்டிங் என்னை கூப்பிடல உன்ன கூப்பிடல என உப்புப் பெறாத பாலிட்டிக்ஸ் வேறு. மொத்த எட்டுமணி நேர வேலையில் அஞ்சாறு மணி நேரம் மீட்டிங்கிலேயே கழிக்கும் என்னை போன்ற அப்பாவிகள் படும் துன்பம் சொல்லி மாளாது. இந்த மொக்கையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்கையில் (அப்பப்போ இதெல்லாம் செய்வேன்) தோன்றியது தான் இந்த பதிவு. ஒகே ஸ்டார்ட் மூசிக்.

1. தூக்கம் வந்தால், கண்ணை மட்டும் திறந்து வைத்து கொண்டு தூங்க முயற்சி செய்யலாம், இல்லையேல், கண்ணை மூடி, கீழே குனிந்து, நோட்பேடில் சீரியஸாக எதாவது கிறுக்கலாம், நெற்றியில் கைவைத்து கண்ணை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைப்பது உசிதம்.

2. தூக்கமும் வரல, மொக்கையும் தாள முடியலேன்னா, கூச்சமே படாம “Excuse Me” என மெதுவா கூவி வெளிநடப்பு செய்துட்டு, மீட்டிங் முடியுறதுக்கு ஒரு அஞ்சு பத்து நிமிசதுக்கு முன்னாடி லேசா வயித்த தடவிய படியே இருக்கையில் அமர்ந்து கொள்ளாலாம், இதற்கு வசனம் தேவையில்லை

3. அப்பப்போ அவ்வை ஷண்முகியை பார்த்துட்டு மேலே வானத்த பார்க்கும் டெல்லி கணேஷ் மாதிரி, மேலே ஒரு தடவை பார்த்துட்டு, எல்லார் முகத்தையும் ( கொஞ்ச சிரிச்ச முகத்தோட) பார்த்து ஆக்டிவ் அட்டெண்டன்ஸ் போடலாம். ஆர்வக்கோளாரினால் ரொம்ப அளவுக்கதிமா சிரிச்சு, ஏற்கனவே தூக்கத்துலிருக்கும் சில் ஆன்மாவை எழுப்பி, சாபத்துக்குள்ளாகாதீர். 

4. வெறுமனே பார்த்து சிரித்து கொண்டிருந்தால் போதாது, அப்பப்போ தெளிவா பேசணும், கேள்வி கேக்கணும். ரொம்ப கஷ்டபடாமல் சுருக்கமாக I agree என்று ஆரம்பித்து, ஒருவர் பேசிய அதே வாக்கியத்தை திரும்ப பேசலாம், இதை அவருக்கும் உங்களுக்கும் ஒரு சுமூக உறவு ஏற்படுத்து ஒரு வெள்ளை கொடியாக பயன்படுத்தலாம். பரீட்சையில் கேள்வியையே பதிலாக பக்கமா பக்கமா எழுதுற மாதிரி ரொம்ப சுலமான விசயம் தான், ஒரு தடவை பழகிட்டா பின்ன விடவே மனசு வராது.

5. மீட்டிங்கில் இருப்பவர் எதிர்கட்சியை சார்ந்தவர் எனில், I disagree with you  என்று ஆரம்பித்து உங்களுக்கு தோன்றுவதை (மொக்கை போட சொல்லியா தரணும்) பேசலாம், இடையிடையே Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துக் கொண்டால், நீங்கள் டெக்னிக்கலில் பெரிய "கை" என்ற விளம்பரம் ஃபிரியா கிடைக்க வாய்ப்பு உண்டு, பிசினஸ் மக்கள் இருக்கும் போது இவ்வார்த்தைகளை பயன்படுத்தினால், மக்கள் வாயில் ஈ ஆடாமல் கேட்பதற்கான சாத்தியக்கூறு அதிகம், சமீபத்தில் பிரச்னையாக இருக்கும் சில வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளுவது புத்திசாலித்தனம்.

6. சில சமயம் மீட்டிங்கில் எல்லாரும் சீரியஸாக எதாவது எழுதுவார்கள் ( அல்லது முயற்சிப்பார்கள்), உங்களுக்கு எழுத எதுமே கிடைக்க்வில்லை ( கவனிச்சிருந்தா தானே கிடைக்கும்) எனில் சமீபத்தில் கேட்டு முனுமுனுக்கும் எதாவது ஒரு பாட்டின் வரியை ஆங்கிலத்தில் எழுதலாம். அதையே வலைப்பதிவில் ஏற்றி ஒரு பதிவின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

7. சில சமயங்களில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு மேலே சில மொக்கசாமிங்க மொக்க போட்டு தாக்கிகிட்டு இருப்பார்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மொபைல் போனில் மீட்டிங் முடியும் நேரத்திற்கு ( 5-7 கழித்து) அலாரம் செட் பண்ணி வைத்து கொள்ளலாம், அலாரம் அடித்தவுடன் உடனே எடுத்து மிகவும் சீரியஸாக.. “Yeah, I am in meeting now, Its kind of getting delay,  I will be able to finish that data issue after coming out of meeting, sorry for the inconvenience caused” னு பரபரப்பா பேசி, எல்லாரையும் ஒரு தடவை கொஞ்சம் வெறிச்சு பார்த்துட்டு.. “I think, We are good now, Shall we wind it up now?”  ஒரு கேள்வியையும் அப்பாவியா கேட்டுட்டா கைமேல் பலன் கிடைக்கும்.  மீட்டிங்க்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வார்த்தைகளை முன்ன பின்ன போட்டு சமாளிக்க உங்களுக்கு சொல்லியா தரணும்.

8. வெள்ளம் வருவதற்கு முன்னே அணை போடனுங்கிற மாதிரி, இந்த மாதிரி மீட்டிங்கை எல்லாம் முளையிலே கிள்ளி எறிய ஒரு வசதியுள்ளது. உங்க MS Outlook calendarல் Lunch, T Time, Timesheet Submission/Approval, Status document preparation இது போன்ற வழக்கமான வேலைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது நம்ம ரொம்ப ”பிஸ்ஸ்ஸீ”னு ஃபிலிம் காட்ட உதவும், அதையும் மீறி மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டா, பல வேளைகளுக்கிடையே இந்த மீட்டிங் அட்ட்ண்ட் பண்றேன் சொல்லி, இருக்கிற கொஞ்ச நெஞ்ச இமேஜை உயர்த்தி கொள்ள்லாம், ஆர்வக்கோளாறில் bloggingக்கு தனியே நேரம் ஒதுக்கி, உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணினால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.

9. சில சமயங்களின் நாம் பேசுவது சிலருக்கு புரியாது, நமக்கே பல சமயம் புரியாதுங்கிறது வேறு விசயம். அந்த மாதிரி சமயங்களில், பக்கத்துல இருக்குற போர்டில் உஙகளுக்கு தெரிஞ்ச எல்லா ஷேப்பையும் ( வட்டம், சதுரம், செவ்வகம், நீள்சதுரம், நீள்வட்டம், முக்கோணம்) வரைந்து அதுக்குள்ள சில ஆங்கில வார்த்தையை எழுதி, உங்களுக்கு தெரிந்த Conjuctions words எல்லாம் பயன்படுத்தி மிச்சத்தை ஒப்பேத்தலாம். பேசி முடிச்ச பிறகு, ”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this”  என ஒரு பிட்டை போட்டு, நக்கலா லேசா முன்முறுவல் செய்தால், யாருக்கு தான் தன்னை கேனையன் ஒத்துக்க மனசு வரும் சொல்லுங்க, எவனாவது கேள்வி கேப்பான்?

10. அப்படியும் ராகு காலத்துல பிறந்த சில பிசாசுங்க எதாவது புத்திசாலிதனமா கேள்வி கேட்டுச்சுன்னா ஒன்னும் பயப்பட்த்தேவையில்லை. கேள்வி கேட்ட ஆள், உங்களுக்கு வேண்டிய ஆள் எனில், “Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum”  ஆரம்பிச்சாலே அந்த ஆள் உச்சி குளிர்ந்து பேச்சு மூச்சு இல்லாம உக்காந்துடுவான், அப்புறமென்ன வழக்கமான மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான். கேள்வி கேட்ட ஆள் நமக்கு வேண்டாத ஆள் எனில் , நக்கலா ஒரு தடவ சிரிச்சுட்டு, “It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.

11. மீட்டிங் அரேஞ்ச் பண்றவங்ககிட்ட TeleConference நம்பர் அடம்பிடிச்சு வாங்கி, டயல் பண்ணி அட்டெண்டஸ் போட்டுட்டு, ”மியூட்”ல போட்டுட்டு உங்க வேலைய (எதாவது இருந்தா) பாக்க வேண்டியதுதான். ஆனா இதுல அப்பப்போ ஆக்டிவ் அட்டெண்டஸ் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம், நீங்க அமைதியா இருந்தா தூங்கிட்டதா நெனச்சுக்குவாங்க – பாம்பின் கால் பாம்பறியும் தானே, ஸோ கேர்ஃபுல்.

12. இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்.. நம்ம தான் கேடினா, நமக்கு மேல ரெண்டு மூனு கேடிங்க இருப்பானுவ. அவிங்க எல்லாம் எப்படி சமாளிக்கிறாய்ங்கனு பாத்து பழகலாம், ஜஸ்ட் கட் காபி பேஸ்ட் பண்ற மாதிரி தான், மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்து தரணுமா என்ன? ஆனா, நீங்க காப்பி அடிக்கிற/பழகிற விசயம் அவிங்களுக்கு தெரியாம பாத்துக்கனும், அதனால அவுக இல்லாத மீட்டிங்கா பாத்து உங்க “தனி”திறமைய தைரியமாக காண்பிங்க.

ப்பூ இதென்ன பெரிய வித்தை.. நாங்கெல்லாம்....” என ஆரம்பிக்கிறவங்க உங்க வித்தையெல்லாம் இங்கே கொட்டிவிட்டுட்டு போங்க, என்னை மாதிரி சில அப்பாவிகளுக்கு பயனுள்ளதா இருக்கும்.

என்னாடா இது 10 வழின்னு சொல்லிடு அதிகமா இருக்குன்னு கிளர்ச்சியடைய வேண்டாம், மண்டைய போட்டு குடையவேண்டாம், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். வழக்கம்போல கூட ரெண்டு ரன்னு எக்ஸ்ட்”ராவா” அடிச்சுட்டேன் ஆர்வகோளாறு மிகுதியில், அவ்ளோ தான் மேட்டர். அப்போ நான் வர்ட்டா.

பி.கு 1:  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு

பி.கு 2:  நான் எழுதினதுலேயே ரொம்ப்ப்ப்ப ந்நநீநீளமான பதிவு இது தான்.

எதிரெதிர் துருவங்கள் 2/22/2009

என்ன? எதோ பேசனும்’னு வரச் சொல்லிட்டு அமைதியா இருக்க?

ஏன் நான் அமைதியா இருந்து நீ பாத்தது இல்லியா? இல்ல என்னோட அமைதி உனக்கு பிடிக்கலியா?

இல்லே எப்பவும் வந்தவுடனே கோவை சரளா மாதிரி வள வள’னு சரளமா பேசிகிட்டு இருப்பே.. இன்னைக்கு என்ன இவ்ளோ அமைதின்னு.. கேக்க...

ஒனக்கு நான் கோவை சரளாவா.. நேத்து என்னவோ நேட்டலி போட்மேனு’னு சொன்ன.. 

இல்ல, காமெடியா பேசுவ அப்டினு சொல்ல வந்தேன்..

அதான் சொல்லிட்டியே.. இன்னும் என்ன வந்தேன்.. போனேன்.. நின்னேன்’னு கத சொல்ற..

சரி நீ கோபமா இருக்க போல..

(இ)தோடா.. கண்டுபிடிச்சுடுச்சு கொரங்கு, ஒரு நாயா பொறந்திருந்தாலும், பேவ்லோவ் ஒன்ன வச்சு conditioned reflex கண்டு பிடிச்சுருப்பாரு.. நீதான் கொரங்காச்சே. அதுவும் மனுச கொரங்கா பொறந்து தொலச்சுட்ட..நாயே..நாயே..

ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு.. 

ஒனக்கு கொலஸ்ட்ரால் அதிகம்தான்டா... இவ்ளோ திட்டுறேன், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, ஆடாம..அசையாம் நிக்குறியே.. வெக்கமாயில்ல?

சரி விடு என்ன பிரச்னை இப்போ? என் கோபம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.

இது தான் பிரச்னையே.. எதாவது வாக்குவாதம் வந்தா, உடனே பம்முறியே ஏன்?

ஏன்னா ( ”தேவா என் ஃபிரண்ட்” ஸ்டைலில் படிக்கவும்) நீ என் காதலி.. நீ தோக்குறது எனக்கு பிடிக்காது செல்லம்.

மண்ணாங்கட்டி.. நல்லா வருது வாயில... நான் கோபத்துல இருக்கும் போது கொஞ்சல்ஸ் பண்ணா கெட்ட கோபம் வரும். ஆமா

சரி.. சரி.. கோவிச்சுக்காத செல்லம்..

மறுபடியும் பாருடா சேட்டைய.... எனக்கு சுத்தமா பிடிக்கல,, என்னையே நீ சுத்தி வர்றது.. நான் நினைக்கிறது (கேக்குறதுக்கு முன்னாடியே)  வாங்கி குடுக்கிறது... கேக்குற கேள்விக்கெல்லாம் கேனையன் மாதிரி தெளிவா/நேரடியா பதில் சொல்றது..மொத்ததுல நான் எதிர்பாத்த மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ஒரு த்ரில் இல்ல.. சேலஞ்ச் இல்ல.. சரி விடு.. இவ்வளவு ஏன் ஒரு பொய்யாவது உருப்படியா சொல்ல தெரியுதா உனக்கு.?You are such a SQUARE. I dont like this and you.

Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh (always)

நான் இவ்ளோ சீரியஸா பேசுறேன்,  நீ என்னடானா எதுகை மோனை வச்சு கவுஜ சொல்லி காமெடி பண்ற.

நீ தானே சேலஞ்ச் பண்ண சொன்ன

நீ சொல்லி திருந்திற ஜென்மம் இல்லடா..இப்படி கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேரு..காதல் இல்லாடா.. .அய்யோ..படுத்துறானே

கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.

அய்யோ ராமா... இந்த கொடுமைய நான் எங்க கொண்டு போய் தொலப்பேன்??. அய்யோ என்ன விட்டுடேன்... என்னை விட்டுடு.. ஒனக்கும் எனக்கும் ஒத்து வராது.. புரிஞ்சுக்கோ..

நீ சொன்னா சரிதான்.. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்..

(கிழிஞ்சது போ).. கொஞ்ச நாளைக்கு மெயில் SMS அனுப்பி தொல்ல பண்ணாம இரு.  Good Bye..

பாத்தியா... நம்ம பேசி முடிக்கும் போது, கோபமா இருந்தாலும் Good Bye சொல்லாம, Bye சொல்லுவியே..

அய்யோ என் அறிவு கொழுந்தே... ஆள விடு சாமீ.. நான் வர்ரேன்....ஸ்ஸ்ஸ்ஸ் போயிட்டு வர்ரேன்( இல்லேன்னா இத வச்சு ஒரு ஜிகா பைட்டுக்கு டயலாக் பேசுவான்)

வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு.. ச்சே..இனிமேல் இறங்கி போகவே கூடாது. ஏறி தான் போகனும் ( இப்போ திருப்பதியாயிட்டான்)

கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, மம்மி வச்ச பேர மாத்தி... (நன்றி: சுந்தரபுருஷன்)  புதுசா ஒரு ஐ.டி கிரியேட் பண்ணி, ORKUT, FRENSTER,  FACEBOOK, HI5, BLOGGER, WORDPRESS என எல்லாத்துலேயும் ஒரு வெட்டி புரஃபைல் உருவாக்கி.. ஒரு நாயகன் உதயமாகிறான் ( தாவணிகனவுகள் )  பாடலின் பேக்ரவுண்ட் மியுசிக் இல்லாமல் புது நாயகனாக பருவமாறி, உருவமாறி.. ஒரு கிளியை பிடிச்சுட்டான்..

நீங்க ரொம்ப கோபபடுறீங்க...

அது என் கூட பொறந்தது.. சும்மா சும்மா கேள்வி கேட்டு தொன தொனக்காத சரியா.. நேத்து நான் வர சொன்னே நீ ஏன் வரல?.. ஒனக்கெல்லாம் ரொம்பதாண்டி திமிரு...என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுல??

உங்களை தான் நெனச்சுகிட்டு இருந்தேன்.. (லைலா மாதிரி லூசாட்டம் சிரிச்சுகிட்டே)

நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. ஏண்டி வரலேன்னு கேட்டா.. பைத்தியாமாதிரி சிரிக்காம பதில் சொல்லுடி.

அத சொல்ல தான் போன் பண்ணேன்.. நேத்து தாய்மாமா பையனுக்கு பொண்ணு பொறந்துச்சு.. அதான் வர முடியல ஹாஸ்பிடல்ல இருந்ததுனால... போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..ஸாரி பா.

(ஓ.. நீயும் வரலியா.... ).. பையங்கிற.. பொண்ணுங்கிற... என்னடி உளர்ற??

யேய்.. இல்லபா.. தாயமாமா இருக்காருல.. அவரோட பையனுக்கு குழந்தை பொறந்திருக்கு. அது பொண்ணு’னு சொல்ல வந்தேன்.

அய்யோ.. உன் கோனார் நோட்ஸ் உரையெல்லாம்.. கொஞ்சம் கம்மி பண்ணுமா.. நாளைக்காவது நான் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ல வந்துடு.. லேட் பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா, சொல்லிட்டேன்

மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.

பி.கு 1: ”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்” என்பன போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றன :)

பி.கு 2: இது என்னுடைய 50வது பதிவு 

தெரியுமா சேதி?.. 2/16/2009

போன வாரம் அடிச்ச புயலே இன்னும் அடங்கல அதுக்குள்ள இன்னொரு புயல். நம்மளும் எத்தனை இடியைத்தான் தாங்குறது. இப்போ என்ன ஆச்சா?, நல்ல கேக்குறாங்கய்யா டீட்டெய்லு.  போன சேதியாவது நிச்சயதார்த்தம் பத்தி, இந்த சேதி அதுக்கு மேல, கல்யாணம் பத்தி, அதுவும் ரகசியம் கல்யாணம், அதுவும் வெல் பிளான்டு ரகசிய கல்யாணம். யாருக்கும் தெரிவிக்காம கரெக்டா “காதலர் தினம்” அன்று கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வேற யாரு, நம்ம மெக்ஸிகோ புயல் தான். “Frida" புகழ் “Salma Hayek” தான் அவர்.

அதே அமெரிக்க நண்பர் தான் மறுபடியும் மெயில் அனுப்பி தகவல் தந்தார். என்னத்த சொல்றது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? இவரை பற்றி தெரிந்து கொண்டதே ஒரு சுவாரஸ்யமான விசயம் தான். வழக்கம் போல படங்களை பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது, அந்த அமெரிக்க நண்பரின் பேச்சு சல்மாவின் பக்கம் திரும்பியது. நான் யாரு சல்மா?’னு தெரியாம கேட்டு புட்டேன். மனுசன் என்ன ஒரு புள்ள பூச்சிய பாக்குற் மாதிரி பாத்துட்டு, வாழ்க்கையில் பாதிய இழந்துட்ட, மிச்சத்த இழக்கிறதுக்கு முன்னாடி போய் “Frida"  படம் பாருன்னு அறிவுறுத்தி அனுப்பிச்சார். 

படம் பார்த்த ரெண்டு மூனு நாளுக்கு எங்க பாத்தாலும் சல்மா தான் என் கண்ணுக்கு தெரிந்தார். படத்த ஒரு ரெண்டு மூனு தடவ பாத்து DVDஐ தேய் தேய்னு தேச்சுபுட்டேன். ஸ்பானிஷ் வாசனை கலந்த வசனத்திலும்,ஸல்ஸா நடனத்திலும், நடிப்பிலும் பின்னி பெடல் எடுத்திருந்தா,  இந்த படம் ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது. இவரே நடித்து தயாரித்துமிருந்தார். இந்த படத்தில் நடித்ததறகாக சிறந்த நடிகைக்கான ஆஸகார் விருதுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார்.

அதுக்கு அப்புற்ம் அவரோட நடிப்பில் மிரண்டு போய்,  தொடர்ந்து அவரது படங்களை தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தேன் Desperado , Once Upon a Time in Mexico (இது Desperado வின் இரண்டாம் பாகம்). இந்த இரண்டு படங்களும் டிபிக்கல் தமிழ் படம் மாதிரி தான், நாயகன் Antonio Banderas ( The Mask of Zorro படத்தின் கதாநாயாகன்), கதையில் நாயகிக்கு முக்கியத்துவமில்லாத போதும், சதையில் இருந்தது.  

அடுத்தபடியாக After the Sunset , Lonely Hearts - உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட இந்த படத்தில் வில்லிவேடம் இவருக்கு, கொடூரத்தனத்தை இந்த அளவுக்கு கேசுவலாக நடித்து பார்த்ததில்ல. அருமையான நடிப்பு. 

அடுத்து Bandidas -இந்த படத்தை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி இன்னொரு சைடு ரீல் ஒன்னு ஓட்டியாகனும். திருப்பதி’னா லட்டு , திருப்பாசேத்தி’னா அருவா, மதுரை’னா வெட்டு’ இதெல்லாம் எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி Salma பத்தி பேசுனா,Penélope Cruz பத்தி பேசியே ஆகணும், இல்லேன்னா தெய்வகுத்தம் ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல. இவுக ரெண்டு பேரும் நெருங்கிய தோழியர், மலேசியாவின் இரட்டை கோபுரம் மாதிரி ( அமெரிக்கவுல இருந்தததான் இடிச்சுபுட்டாக’ல).

இவர் ஸ்பெயினில் பிறந்தவர், ரெண்டு பேருக்கும் ஸ்பானிஷ்தான் தாய்மொழி. இதை தவிர பல ஒற்றுமைகள் உண்டு இவர்களுக்கிடையே. Volver தான் நான் பார்த்த முதல் படம், படம் செம சூப்பர், மூன்று தலைமுறை பெண்கள் சம்பந்தபட்ட கதை. கதை சொல்ல பட்ட விதம் மிக மிக அருமையாக இருந்தது, முழுக்க முழுக்க பெண்களே நடித்திருந்த இந்த படத்தில் கடைசி அரைமணி நேரத்தில் நடக்கும் மொத்த கதை சுருக்கம் அருமை. இதே இயக்குனரின் (Pedro Almodóvar) முந்தைய படமான ¡Átame!  வும் பார்த்தேன், ஆனால் அது Volver  ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

இவரது நடிப்பில் மயங்கி ( உண்மை தானுங்க) , இவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது Bandidas. இவுக ரெண்டு பேரும் நடித்த சும்மா காமெடிப்படம், ஆனா நான் ஒன்ன எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். மத்தபடி படம் , இன்னொரு தமிழ் படம் மாதிரி தான் இருந்தது.

Bandidas கொஞ்சம் என்னை ஏமாற்றினாலும் அதற்கு அடுத்து நான் பார்த்த Captain Corelli's Mandolin, என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செயதது. இந்த படம் கிட்டதட்ட “இயற்கை” படம் மாதிரி தான். படம் முழுக்க தன்னுடைய நடிப்பை அள்ளி இரைச்சிருந்தார் Penélope .


இன்னொரு சேதி தெரியுமா? இன்னொரு இளஞ்சிட்டு (அப்டி தான் இதுவரைக்கு நெனச்சு கிட்டு இருந்தேன்) Feb 11ந்தேதி தன்னோட பிறந்த நாளை கொண்டாடிச்சு. இவர் நடித்த Friends என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் மிக பிரபலம். சில குடும்ப பிரச்னையால் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்த புயல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தனது கலைப்பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்திலிருக்கும் இவரையும், இவரது வயதையும் கண்டு பிடித்து தருவோருக்கு, இவர் கையெழுத்திடாத போட்டோ ஒன்று, ஒரு டாலர் வீதம் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கபடும்.

பி.கு : உருப்படியா இன்னும் வேகண்டா இருக்கிறது என்னோட தலைவி மட்டும் தான். (Touchwood பண்ணிக்கிறேன் )

நான் சந்திக்க விரும்பும் நபர் 2/15/2009

பில்கேட்ஸின் தொழில் வித்தைகளையும், வெற்றியையும் விலாவரியாக விவரிக்கும் நம்மில் பெரும்பாலோனோர், தனது பக்கத்து தெருவிலோ, ஊரிலோ அதே போன்றொரு சாதனையை நிகழ்த்தி வருபர்களை கண்டு கொள்வதே இல்லை என்பது கசப்பான உண்மை மேலும் “குண்டூசி விக்கிரவெனல்லாம் தொழிலதிபராம்” என்று கவுண்டமணி ஸ்டைலில் கிண்டல் வேறு. 

கரகாட்டகாரன் படத்தில் தவக்களை ”பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்” என்று கூவிக்கொண்டே அந்த தகர டப்பா வண்டியை சுற்றி வரும் நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. கிராமத்திலிப்பவர்கள் இதுபோன்ற ஒரு வியாபாரியை வாரத்தில் ஒரு நாளாவது சந்திப்பர். எனக்கு இன்னைக்கு வரையிலும் அந்த பழைய பொருட்களை என்ன செய்வார்கள்? என்று தெரியாது, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கேட்கவேண்டும். 

அதே போல மதுரை அலங்காநல்லூரை ஒட்டியுள்ள பாலமேடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இதே தொழிலை செய்து வந்தனர். பாலமேடு அலங்காநல்லூரை ஒட்டியிருந்தாலும், முல்லை பெரியாறு கால்வாய்க்கு வடக்கே (மேலே) இருப்பதால், பெரியாறு கால்வாயால் எந்த பயனும் இல்லை. சாத்தையாறு அணை அருகில் இருந்தாலும் அதனாலும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யகூடிய வானம் பார்த்த பூமி.

இப்படி பட்ட சூழலில் இந்த இன மக்கள் 90ன் ஆரம்பத்தில் ”பேரீச்ம்பழம் விற்பது போன்ற தொழிலை விட்டு” சிறிய அளவில் பால்பண்ணை தொழிலை ஆரம்பித்தனர். முதலில் ஒரு சிறு அளவில் தொடங்கப்பட்ட இந்த பால்பண்ணை கூட்டுறவாக விரிவடைந்து பாலமேடு அல்லாது அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களுக்கும் பால் விநியோகம் செய்யபட்டது. அதனின் அடுத்த கட்டமாக கூட்டுறவு பால்பண்ணை பக்கத்து ஊர்களுக்கும் விரிவடைந்தது. 2000ம் வாக்கில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி, ஒரு திரையரங்கு மற்றும் மதுரை மாநகரின் பால் தேவையையே (50% மேலிருக்கும் என்பது என் யூகம்) நிறைவு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.  அரசரடி, குரு தியேட்டர் வழியாக பயணம் செய்பவர்கள் “பத்திரகாளியம்மன் பால்பண்ணை” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை கண்டிப்பாக பார்த்திருக்க முடியும். இது ஒரு அசுர வளர்ச்சியே.

இந்த தொழில் உத்தியை பற்றியோ, வெற்றியை பற்றியோ இதுவரை கட்டுரை எதுவும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை.

தூரத்தில் இருக்கும் நிலவை பார்த்து ஏங்கும்/வர்ணிக்கும் நாம் பக்கத்திலிருக்கும் அகல் விளக்கின் அருமையை உணராமல் இருப்பது வருந்ததக்க விச்யமே. அன்னை தெரசாவை பற்றி பக்கம் கட்டுரை எழுத தெரியும் ஆனா தன் சொந்த தாயாரின் விருப்பு/வெறுப்புகளை பற்றி அற்வே தெரியாது. இதே போன்று பல உதாரணங்களை சொல்லலாம். 

ஜனவரி மாதம் முதல் வாரம் எனது பிறந்த நாளை முன்னிட்டு “Slumdog Millionaire" படம் பார்த்துவிட்டு, என்னுடைய சக ஊழியரின் வீட்டுக்கு போய் விடுமுறையை களித்தேன். அங்கே ”தென்றல்” என்றொரு இதழ் சாப்பாடு மேஜையின் மேல் இருந்தது, வழக்கம் போல சாப்பாடை மேய்வதை விட்டு புத்தகத்தை மேய, அதில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பேட்டி இருந்தது எனது ஆர்வத்தை இன்னும் அதிகபடுத்தியது, சக பதிவராச்சே. இருந்தாலும் சூழ்நிலை கருதி என்னால் நுனிப்புல் மட்டுமே மேய முடிந்தது. 

நான் விரும்பி படிக்கும் வலைதளங்கள் பல இருந்தாலும் எனக்கு மிகவும் கவர்ந்த வலைப்பதிவு தலைப்புகள்/பெயர்கள் மூன்றே மூன்று. 

1. எண்ணங்கள் ( பத்ரி சேஷாத்ரி ) 
2. தனி
மையின் இசை (அய்யனார்) 
3. பிச்சைபாத்திரம் (சுரேஷ்கண்ணன்)

எண்ணங்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களை விவரிக்கும் பத்ரியை, எனக்கு ஒரு சக பதிவராகத்தான் தெரியும் இந்த தென்றல் இதழின் பேட்டியை படிப்பதற்கு முன். 

அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டில் கிழக்குபதிப்பகத்தை தொடங்கி அதை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு முன் cricinfo.com என்ற தளத்தையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார்.

எதோ ஒரு படத்தில் விவேக் இரட்டை வேடத்தில் வருவார், அதில் தமிழை வளர்க்க எளிமையான வழியை மிக அழகாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருபபார், “தமிழை வளக்க ரொம்ப எல்லாம் கஷ்டபட வேண்டாம்டா,  ஏட்டுல இருக்கிற தமிழை கம்ப்யூட்டர்ல ஏத்துடா, அதுக்கப்புறம் அதுவா வளந்துடும்” என்று பொருள்படும்படி ஒரு நகைச்சுவை காட்சி. நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், ஆழமான கருத்து அது. 

அதே கருத்தை செயலில் காட்டி இன்று பெரும்பாலான (ஆதாரம்: இட்லிவடை) பதிவர்கள் தமிழில் பதிவிட (இந்த பதிவு உட்பட)  NHM Writer மென்பொருளை உருவாக்கி ராமருக்கு அணில் உதவியது போல தமிழ் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதொரு காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார். ஏட்டில்/மனதில் மட்டுமே இருந்த தமிழ் இன்று இணையத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு இவர் மட்டுமே ஒரு காரணம் என்று சொல்லவில்லை இவ்ரும் ஒரு முக்கிய காரணம்.

பேட்டி முழுவதும் வியாபித்திருந்த, தமிழின் மீதும் தமிழ் படைப்புகளின் மீதும் இவர் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையுடைய கருத்துகளை கண்டு மெய்சிலிர்த்து போனேன்.  நசிந்து போய் கிடந்த பதிப்பகத்துறையில் கால்பதித்து வெற்றி பெற்றதோடு,  தமிழில் பல்துறைகளிலும் பல படைப்புகள் உருவாக முனைப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். நிறைய இளம் எழுத்தாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். உருவாக்க காத்துக் கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த புத்தகக்கண்காட்சியின் வெற்றியில் இவரின் பங்கும் முக்கியமானது என்றால் அது மிகையல்ல.

பெயருக்கு முன்னே ஒரு பட்டம் இல்லாமல்,  தமிழ் என் மூச்சு, என் பேச்சு என வெற்று கூச்சல் எதுவுமில்லாமல், தாய் மொழியான தமிழ்வளர்ச்சிக்கு மட்டுமன்றி அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த சில நல்லகாரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.


எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க!! 2/12/2009

இன்னைக்கு இதமான காற்றுடன் கூடிய நல்ல வெதுவெதுப்பான வானிலை, ஃபெப்ரவரி மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது மிக அரிது, ரசித்து கொண்டே அலுவலகம் வரும்போது மணி பத்தாகி அஞ்சு நிமிசம் ஆச்சு. பத்துமணிக்கு ஒரு மீட்டிங் வேற, லேட்டானது ஆச்சு, இன்னும் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு வந்திருக்கிற ஈ-மெயில் எல்லாத்தையும் கொஞ்சம் ஒரு பார்வை பாக்க, வழக்கத்திற்கு மாறாக சக அலுவலரிடமிருந்து ஒரு ஈ-மெயில், “Sorry…”  என்ற சப்ஜெக்ட் உடன். 

இந்த சக ஊழியர் ஒரு அமெரிக்கர், மனுசன் செம நக்கல்+ஜாலி பேர்வழி, ஜிம்மில் தான் பழக்கம். ஹாலிவுட் படங்களை பார்க்க ஆரம்பித்த புதிதில் படங்கள் பற்றி நிறைய விவாதிப்போம். எனக்கு படங்களை பற்றிய நிறைய கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துள்ளார். 

போன வாரம் Jillian Michaels  ( NBC தொலைக்காட்சியில் "The Biggest Loser" என்றொரு உடற்பயிற்சி நிகழ்ச்சியை நடத்தி வருபவர்)போஸ்டரை உடற்பயிற்சி வகுப்பில் மாட்டி வைத்து, செம கலாட்டா பண்ணிகிட்டிருந்தார். அந்த உரையாடலின் ஒரு பகுதி. 
You girls should look like this.
Remove that poster immediately.
Give me one good reason, Why should I remove that? She looks pretty. If you girls want, you can paste Arnold photo, I won’t mind.
We can’t give any explanation, Remove it.  That’s it. PERIOD. 
கடைசியில் பெண் தான் ஜெயித்தார் என்பதை சொல்லவும் வேணுமா? இந்த வார Entertainment Weekly’ல் கூட இவர் சம்பந்தபட்ட செய்தி வந்தது.அதை 
இன்னும் நான் படிக்கல.

பொண்ணுங்கள பத்தி பேசுனா, தான் இருக்கிற இடத்தை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிச்சுடுவார். அவருக்கு கருப்பு கூந்தல், கருப்பு கண் விழி கொண்ட பெண்களை ரொம்ப பிடிக்குமாம்,அவரோட அப்பாவுக்கும் அதே டேஸ்டாம். எனக்கும் தான் என்பதை இங்கே தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன், Salma Hayek மற்றும் Penélope Cruz ரெண்ண்டு பேரும் அந்த லிஸ்டில் அடங்குவர்.

நான் விரும்பி ரசிக்கும் கதாநாயகிகளில் ஒருவரான Mandy Moore பற்றிய செய்தி அது. 24 வயசாகும் இவருக்கு திருமண நிச்சயம் ஆகிவிட்டதை பற்றியது தான் அந்த கடிதம். மனுசன் என்னை விட ரொம்ப வருத்தப்பட்டிருப்பார் போல, அதான் நானும் வருத்தபடனும்’னு வேண்டி விரும்பி எனக்கு அனுப்பி வச்சிருக்கார்.

தமிழில் மூனுஷாவும், ரீமாசென்னும் ஒரு சாயலில் ஒரே மாதிரி இருப்பர். மூனுஷாவுக்கு இயறகையிலே கர்லிங் ஹேர், கில்லி படத்தில் அப்படி போடு பாடலில் கருப்பு உடையில் சுருள் முடியுடன் ஆடும் காட்சியில் ரீமாசென்னை நினைவுபடுத்துவார். அதுபோல இவரும் Julia Stiles'ம் ஒரு சாயலில் ஒரே மாதிரியாக இருப்பதாக எனக்கு ஒரு தோன்றுகிறது. 

Saved! படத்தில் Jena முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மதபற்று கலந்த திமிரு கதாபாத்திரத்தில் நடித்த Mandy Moore கதாபாத்திரம் தான் எனக்கு பிடித்திருந்த்து. அதன் பிறகு The Princess Diaries, License to Wed, A Walk to remember (இதில் நடித்ததற்காக விருதுகளும் பெற்றுள்ளார்) என பார்த்து தள்ளியாச்சு. Because I said so படத்தில் சின்ன பையன் நாரசமா கேக்கும் கேள்விக்கு ஆச்சர்யம் கலந்த வெக்கத்துடன் விழிகளை அகல விரித்து “Whhhaaattttt...” என முழுங்கி கேக்கும் அந்த முக பாவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, மிக அருமையான காட்சி அது, ’யூடிஃப்’ல் பலமுறை தேடியும் கிடைக்கவில்லை. படமும் நல்ல காமெடி கலந்த காதல் படம் தான்.

செய்தி தொடர்பான சுட்டி இங்கே 

செய்தியை படிச்சுட்டு, ம்ம்ம்.. என பெருமூச்சு விட்டு, ”எனக்கில்லை எனக்கில்லை” என தருமி புலம்பின மாதிரி மனசுக்குள்ளே புலம்பி, “எங்கிருந்தாலும் வாழ்க.. வாழ்க” என மனசார வாழ்த்திட்டு, மீட்டிங்’க்கு போனேன் விரைவாக. பொலம்பிக்கிட்டு இருந்தாலும் பொழப்ப பாக்கணும்’ல, என்ன நாஞ்சொல்றது?


டும்...டும்...டும்... 2/11/2009


அப்பா - ஒரு தற்பெருமை பிடிச்சவர். தற்பெருமைனா.. உங்க வீட்டு, எங்க வீட்டு தற்பெருமை இல்ல. உலக மகா தற்பெருமை. சில பெருசுக வாயைத் திறந்தா ”நாங்க எல்லாம் அந்த காலத்துல” என் ஆரம்பிச்சு வூடு கட்டி அடிக்கும், அதே போல, மாட்டுற எல்லார் கிட்டேயும் “கிரேக்க மொழியை பற்றியும் கிரேக்க கலாச்சாரத்தை பற்றியும்” கிறுகிறுக்க வைக்கிற அளவுக்கு அடிக்கடி சொல்லி கிச்சு கிச்சு மூட்டுகிறார். தனது வாரிசுகளுக்கு கிரேக்க குடும்பத்தில் தான் சம்பந்தம் பண்ணுவேன் என்று ரெண்டு காலில் நிற்பவர்.

குடும்பம் - பாரம்பரியமிக்க கிரேக்க குடும்பம். கதாநாயகிக்கு ஒரு அம்மா ( ரொம்ப அதிசயம் பாரு), ஒரு தங்கை, ஒரு தம்பி. 1986ல் விஜயகாந்த் நடிக்க இளையராஜா இசையில் வெளிவந்த தழுவாத கைகள் படத்தில் “குடும்பத்தை உருவாக்க சொன்னா, ஒரு கிராமத்தை உருவாக்கி தந்தார் எங்கப்பா” என்ற பாடலை தங்களுக்காக பாடியதை போல ஒரு கிராமத்தை உருவாக்கி வைத்திருக்கும் உறவின கூட்டம். 

கதாநாயகி - முப்பதை தாண்டிய, நல்ல சதைப்பற்றுள்ள, பார்வைக்கு கண்ணாடி துணை தேடும், ”Mid-life Crisis"ல் அடி எடுத்து வைக்கவுள்ள ஒரு பேரிளம்பெண். 

கதாநாயகன் - ஆசிரியர் வேலைபாக்கும் அமெரிக்கர். சொந்தமாக ஒரே அப்பா, அம்மா. டைனிங் டேபிலில் இருக்கும் சாப்பாட்டை கூட “எச்சூஸ் மீ” சொல்லி, பரிமாறும் Privacy குடும்பம். 

காதல் - கதாநாயகிக்கு பையன் மேல் முதல் பார்வையில் காதல்,  இப்போ இருக்கிற மாதிரியே இருந்தா பாட்டி ஆனாலும் ”கல்யாணம்” என்ற வார்த்தையை கூட கேக்க முடியாது என்பதை உணர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார்.  தோற்ற மாற்றத்திற்கு பிறகு இவளை பார்க்கும் பையனும் ஒரே பார்வையில் விழுந்துடுறான். காதல் விசயத்தில் ரொம்ப சிரத்தை எடுத்துக்கல இயக்குநர், காமெடியில் கலக்கி எடுத்துள்ளனர்.
கதை - மேலே சொன்ன விசயங்களை வச்சு யூகிச்சு இருப்பீங்க.. அந்த பையனும் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடக்குதுங்கிறது தான் கதை. குடும்ப சூழல் தெரிஞ்சு எங்காவது ஓடிபோலாம என நாயகி கேக்க, அப்படி எதுவும் பண்ண வேணாம் உங்க குடும்ப முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க்லாம் என அறிவுறுத்தி, அவர்களின் விருப்பபடியே மதம் மாறி, வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன்.

கதைகளம் - "Wind City" சிகாகோ.

அழிச்சாட்டியம்/அட்டூழியம்/கலாய்ச்சல்
பொண்ணோட தம்பி, நாயகனுக்கு கிரேக்க மொழியில் கெட்ட வார்த்தையை சொல்லி கொடுத்து மாட்டிவிடுதல், வீம்பு பிடிக்கும் அப்பாவை அவர் வழியிலேயே போய் மடக்குதல்,  ஆம்பள குடும்பத்துக்கு”தலை”யா இருக்கலாம், ஆனா நம்ம தான் கழுத்து, நம்ம இல்லாம அவுகனால் ஒன்னும் ”ஆட்ட” முடியாது என குடும்பதலைவி விடும் ரவுசு, பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை கூட்டம், பல நாள்பட்ட சோஃபாவின் பாலித்தீன் கவரை கூட பிரிக்காமலிருப்பது, சீக்கு வந்த கோழி ரெக்கைய விரிக்கிற மாதிரி கையை பக்கவாட்டில் நீட்டி, ஆட்டி நடனமாடும் ஒரு கூட்டம். ரெண்டு பேர விருந்துக்கு வரச்சொல்லிட்டு ஒரு ஊரே வூடு கட்டி வெட்டுதல் என அதகளம் பண்ணியிருக்கார்கள் படமுழுதும்.

மாமியாருக்கும் மருமகனும் இடையே ஒரு உரையாடல்:
உங்களுக்கு பசிக்குதா?
இல்ல..
சரி உங்களுக்கு சாப்பிட எதாவது யார் பண்றேன்.

நம்மூரில் திருஷ்டி கழிச்சுட்டு, திருஷ்டி மேல தான் துப்புவார்கள், ஆனா இங்க மனுசன் மேலே துப்புறாங்க.

இந்த நகைச்சுவை படத்திலும் ஒரு செம ஷார்ப் வசனம் “Don't Let your past dictate who you are. But let it be part of who you will become

பி.கு: இந்த படத்தை பரிந்துரைத்த GILS'க்கு எனது நன்றிகள் பல.

ஜெனீஃபர்...மாயா...நயன்தாரா... 2/09/2009

நேத்து தானே ஒரு பதிவு போட்டோம் இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சு இன்னொரு பதிவு போடலாம் என இருந்தேன். ஆனா நான் பாத்த ஒரு பாட்டு அந்த கொள்கையை ( முதல்ல இந்த வார்த்தைய தடை பண்ணனும், ”புரட்சி”, ”தளபதி” மாதிரி ”கொள்கை”யையும் பாடாய் படுத்துறானுக ) உடைத்தெரிந்து விட்டது.  அது என்ன பாட்டு என்ன என்பதை அப்புறம் பாப்போம், அதுக்கு முன்னே ஒரு சின்ன கொசுவத்தி சுருள்.

பொதுவா என்னுடைய ஆசிரியைகள் மீது எனக்கு ஒரு அபரிமிதமான ஒரு அன்பு உண்டு. நானும் ஏதோ கொஞ்சம் நல்லா படிச்சதுனால, அவங்களும் என் மேல பாசமா இருந்தாங்க, இது கல்லூரி வரையும் தொடர்ந்தது. பிடிக்காத சில ஆசிரியைகளும் இருந்தாங்க, நல்ல விசயத்தை பேசும் போது சில “சின்ன” விசயங்களை மறப்பது நல்லது தானே. ஸோ இக்னோர் தெம்.

அப்படிபட்ட ஆசிரியகளுக்கு ”ஒரு குடை, ஒரு கூலிங்கிளாஸ், ஒரு நல்ல பாலிஸ்டர் புடவை” என ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார் பாரதிராஜா, நம்ம ஜெனீபர் டீச்சர் மூலமாக, ரேகாவும் கனகச்சிதமாக செய்திருந்தார். இன்னைக்கும் ”அடி ஆத்தாடீடீ......” என ஜானகி பாடுவதை கேட்டால் மனம் ஒருபக்கம் ஒருக்களித்து கவனிக்க ஆரம்பித்துவிடும், அவ்வள்வு ஒர் ஈர்ப்பு. இந்த படத்தின் மூலம் ஒரு முழு நேர வில்லனை முதன்முறையாக கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. இவ்வளவு இருந்தும் எனக்கு பிடித்தது அந்த ஒருதலை காதலை, உருகி உருகி காதலிக்கும்,  மாமா.. மாமா என மருகும் அந்த ரஞ்சனியின் நடிப்பு தான். சரி விசயத்துக்கு வருவோம்.

”நீங்கள் கேட்ட பாடல்” நிகழ்ச்சியின் போது “லக முக்கிய கேள்வி”யான உங்களுக்கு பிடித்த நடிகர்/நடிகை யார்? என்ற கேள்விக்குறிய பதிலை முடிந்த அளவுக்கு யூகிக்க பார்ப்பேன். பொதுவாக ஆசிரியராக பணிபுரியும் இளம்பெண்கள் “ஜோதிகாவை” பிடித்த நடிகையாக கூறுவர். ஜெனீபர் டீச்சர் ஏற்படுத்தியளவுக்கு இல்லையென்றாலும், அதற்கு இணையாக இந்த காலத்து டீச்சர்க்குறிய ஒரு தனியடையாளத்தை ஏற்படுத்தியது ஜோதிகாவின் நடிப்பும் அந்த மாயாவின் பாத்திர படைப்பும் என்றால் அது மிகையல்ல.

சரி இப்போவாவது மேட்டருக்கு வருவோம், இந்த பதிவுக்கு காரணமா இருந்தது, ஏகன் படத்தில் வரும் “கிச்சு..கிச்சு.. யாய்..யாய்” என்ற பாடல் தான். படத்தை நான் இன்னும் பாக்ல ( என்னது? தப்பிச்சுட்டேனா?? ). நயன் இப்படத்தில் ஒரு ஆசிரியாராக நடித்திருப்பதாக செவிவழி செய்தி. பாடலின் ஆரம்பம் வகுப்பறையில் செம அலப்பறையாக தொடங்கி, கற்பனையில் விரிகிறது, ஆடையில் குறைகிறது. இதுக்கு முன்னே பானுபிரியா நடிக்க I love you Teacher என்றொரு படம் வந்து அந்த பணிக்குறிய மொத்த இமேஜையும் டேமேஜ் செயத்து. அதை தொடர்ந்து நயனும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் போல.. ம்ம்ம் பணம் பத்தும் செய்யும், பாவம் நயன் என்ன செய்வார்.

பி.கு 1: இப்பதிவு நான் ஒரு முற்போக்குவாதி என்று படம் காட்டுவதற்கல்ல, அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அழி ரப்பர் வச்சு இப்பவே அழிச்சுடுங்கோ ( என்ன அழிச்சாச்சா?). நானும் ஒரு ரவுடி தான் என்பதை இங்கு கூவிக்கொ....ச்சே. கூறிக்கொள்கிறேன்

பி.கு 2 : ஒரு கூட்டம் கொலவெறியோட கேட்டுகிட்டதுனால.. நயன்தாரா படம் “முழு மனதுடன்” இங்கே இணைக்கபட்டுள்ளது :)


அயல்நாட்டு மருமகள் 2/08/2009


இஸ்ரேலில் உள்ள மோனா மற்றும் சிரியாவில் பிரபல தொலைகாட்சி நகைச்சுவை நடிகர் டால்லல் திருமணத்தில் இரு நாடுகள் செய்யும் குளறுபடிகளை மிக உணர்வுபூர்வமாக விளக்குகிறது The Syrian Bride. கதையின் போக்கையின் யூகிக்க முடிந்தாலும், கடைசி அரைமணி நேரத்திற்கு நம்மையும் கல்யாண கூட்டத்தோடு சேர்ந்து கவலைப்பட வைத்துவிடுகிறார்கள்.

மணப்பெண் அலங்கரிப்பில் தொடங்குகிறது அமைதியாக கதை,  மணப்பெண் மணமகனை நேரில் பார்த்தது இல்லை,  கல்யாணத்திற்கே மணப்பெண் மட்டும் தனியாக செல்லவேண்டும், உறவினர்/குடும்பத்தினர் யாரும் வர முடியாது. எப்படி இருக்கும் ஒரு பெண்ணுக்கு? உணர்வுகளை கச்சிதமாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தார் மோனாவாக நடித்த Clara. "Do not upset bride on her wedding" என்றொரு மிகப்பிரபலமான அடைமொழி வாக்கியம் உண்டு, ஆனால் இந்த பெண்ணுக்கோ மணநாளே ஒரு போராட்டமாக அமைந்துவிடுகிறது.

இந்த படத்தில் முக்கியமாக எனக்கு பிடித்தது கதாபாத்திரங்களை கையாண்ட விதம். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவமிருந்தது. கல்யாணத்தை படம் பிடிக்கவரும் வீடியோகிராபர் மற்றும் குடியேற்ற துறையில் பணியாற்றும் பெண் உள்பட அனைவரையும் கதையின் ஓட்டத்தினுடே பயணம் செய்த வைத்தவிதம் மிக அருமை. 

அடுத்தபடியாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்,  மோனாவின் தந்தை சிரியாவிற்கு ஆதரவான அரசியல் கொள்கை உடையவர். அவரது மகனே ரஷ்ய பெண்ணை மணந்தவர். குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் அக்கா கதாபாத்திரம். 

அரசு அதிகாரிகளின் குளறுபடிகளால் தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என கலவரப்படும் சகோதரி பாசத்தை, அரசியல் காரணங்களுக்காக தங்கையின் திருமண வைபவத்தில் தந்தையின் பங்கேற்பை தடைசெய்யாமலிருக்க செய்யும் போராட்டத்தை,  கண்முன் இருக்கும் கணவனிடம் பேச எதுவுமில்லாமல் கண்காணா இடத்திலிருக்கும் சகோதரனை தொடர்பு கொள்ளும் பாசத்தை, தந்தை-மகனுக்கிடையே உள்ள மனக்கசப்பை கையாள்தல், கணவனின் கையாளாகத தனத்தினால் தனது படிப்பை தொடரமுடியாம வருந்தி நிற்கும் ஒரு அபலை பெண்ணின் நிலையை என பன்முக நடிப்பை பக்காவாக செய்திருந்தார் அக்காவாக நடித்த Hiam Abbass.

இந்த படத்தை பார்க்கும் போது, இதே போல கத்தியின்றி ரத்தமின்றி போரின் கொடூரத்தை நகைச்சுவையோடு பறைசாற்றும் The Life is Beautiful படம் ஞாபகத்தில் வந்து போனது. நம்ம இளைய தளபதி, இந்த படத்தை தமிழ் நாட்டு மக்களும் பார்த்து ரசிப்பதற்கு வாயிலாக இந்த படததின் முதல் பாதியை வரிக்கு வரி இடம்பெயர்த்து ”யூத்” என்ற படத்தை எடுத்தனர்.

இன்னொரு முக்கிய அம்சம் குரவை சத்தம். சந்தோசத்தை வெளிப்படுத்த மக்கள் குரவை இடுகின்றனர். இது நமது தமிழ்நாட்டு மக்களுக்கேயுரிய கலாசாரம் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். வளைகுடா நாட்டிலும் இந்த பழக்கமிருப்பது ஆச்சர்யத்தை வரவழைத்தது.


இயற்கையை ஜெயிக்க முடியுமா? 2/03/2009


இன்று அலுவலகத்துக்கு போகும் போது நான் கேட்ட பாடலின் ஒரு வரி தான் இந்த பதிவுக்கு காரணம்
நீரோட்டம் இருந்தா,
ஏரோட்டம் நடக்கும்;
ஏரோட்டம் இருந்தா தேரோடும்.
என ஜானகியின் கொஞ்சும் குழந்தை வாய்ஸில் புதுப் பாட்டு என்ற படத்துக்காக இசைஞானியின் இசையில் பாடிய ”இந்த பூமியே எங்க சாமியம்மா” என ஆரம்பிக்கும் அந்த பாட்டுதான்.

நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எங்க ஊர்ல இருந்து ஒரு அரை மைல் தூரத்துல இருக்குற ஒரு கிணத்துல இருந்து இடுப்புல ஒன்னு தலையில ஒன்னு’னு தண்ணி கொண்டு வருவாங்க பெண்மக்கள். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு எங்க அம்மா தண்ணிக்கு போகும் போது நானும் வருவேன்’னு அடம்பிடிச்சு அழுது தூக்கிகிட்டு போக சொல்வேன் ( பொறந்ததுல இருந்தே அப்டி தான்.. ) , போகும் போது பரவாயில்ல இடுப்புல என்னை தூக்கி வச்சுகிட்டு காலி குடத்தை கையில் பிடிச்சுக்குவாங்க. ஆனா வரும்போது தான் பிரச்னையே, என்னை நடக்க சொல்லுவாங்க, முடியாதுன்னே அடம்பண்ணி (கொடுமக்கார பயபுள்ள, இப்போவாவது நம்புங்கப்பா நான் கொடுமைகாரன் தான்...)அழுவேன். அடம்பிடிச்சு காலை கட்டிபிடிச்சு அழுதுகிட்டே தர தர’னு தரையோடு இழுத்துகிட்டே/அழுதுகிட்டே வருவேன், குடத்துல இருந்து சிந்துன தண்ணிய விட என் கண்ணுல இருந்து சிந்துன கண்ணீர் அதிகமாயிருக்கும். 

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு வருசம் கழிச்சு ஒரு 90 வாக்குல ஒரு அடி பம்ப் போட்டாங்க, ஊரே திரண்டு நின்னு வேடிக்க பாத்துச்சு. மொத்தமுள்ள 400 பேருக்கும் ஒரே அடி பம்ப் தான். நீங்க நிறைய பேப்பர்ல படிச்சு இருப்பீங்க.. குழாயடி சண்டைய பத்தி. ஆனா அப்படி ஒரு தகராறு எங்க ஊர்ல நடந்ததே இல்ல.. ( இனியும் அப்டியே தொடரணும்’னு தான் ஆசை). எங்களோட மனமகிழ் மன்றமே அந்த குழாயடிக்கு பக்கத்துல இருந்த தெரு விளக்குதான். படிக்குறேன் சொல்லிட்டு எதாவது ஒரு புத்தகத்த எடுத்து காலங்காத்தால ஒரு டைம் குறிச்சு “படிச்சு”ட்டு வருவோம். அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்.. ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

இருந்த ஒரே அடிபம்பிலேயும் தண்ணீர் பற்றாகுறை வந்தது இல்ல. அது ஒரு வரபிரசாதமா தான் இருந்தது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு தேவையில்லாத ஒரு இடத்துல இன்னொரு குழாயும் போட்டாய்ங்க.. ஆனா அங்க தண்ணி நல்லா இல்லாததுனால ( முன்னமே தெரியும்.. சும்மா கடனுக்கு/கணக்குக்கு போட்டது தானே ) குடிக்கிறது தவிர மத்த எல்லாத்துக்கும் ரொம்ப நல்லாவே பயன்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் ஆசை யாரை விட்டது, ஊருக்கு ஒரு த்ண்ணி தொட்டி இல்லை என ஒரு வெட்டி கூட்டம் புலம்ப ஆரம்பிச்சது, அதன் பலனா 2000 வாக்கில் ஒரு தண்ணீர் தொட்டியும் ஒரு 4 பொது குழாயும் போடப்ட்டது. 

அங்க பிடிச்சது தான் வினை, அதுவரைக்கும் சித்திரையில் கூட தண்ணீர் பஞ்சத்தை பாக்காத ஊரு, தண்ணீர் பஞ்சத்த பார்க்க ஆரம்பிச்சது. அரை மைல் நடந்து போய் தண்ணீர் பிடித்து வரும் போது இல்லாத தண்ணீர் பஞ்சம், ஒரு அடி பம்ப் குழாய் இருந்த போது வராத தண்ணீர் பஞ்சம். நாலு குழாய் இருந்த போது எட்டி பார்க்க ஆரம்பிச்சது. இத்தனைக்கு ஜனத்தொகையில் பெரிய மாற்றமெல்லாம் இல்ல. மிஞ்சி போனா இப்போ ஒரு 500 பேர் இருப்பாஙக. ஆனா தண்ணீர் போதவில்லை. 

காரணம் என்னான்னா திறந்த உடனே தண்ணீ வருதா மக்கள் அதன் அருமை தெரியாம, சும்மா புகுந்து விளையாடி இருக்காய்ங்க.. குழாயை திறந்து தண்ணீர் வரலேன்னா, திரும்ப மூடுறதுல்ல, அப்படியே மூடினாலும் சரிவர மூடாததுனால, நிறைய தண்ணீர் வீணா போய்கிட்டு இருந்திருக்கு. 

என்னோட சொந்தகார பயபுள்ள தான் இதுக்கு இன்சார்ஜ், என்னாடா மாப்புள, ”தண்ணீ ஒழுங்கா திறந்து விட மாட்டுறியாம்ல, மக்க தண்ணீ இல்லே’னு சொல்றாய்ங்க” என ஒரு தடவை போட்டு வாங்கும் போது, மனுசன் புலம்பி தள்ளிட்டான். குடிக்கிறதுக்கு பயன்படுற தண்ணிய குளிக்க, மாடு குளிப்பாட்ட, ஹோஸ் போட்டு தோட்டத்துக்கு பாய்ச்ச என மக்கள் ரொம்ப அழிச்சாட்டியம் பண்றாய்ங்கடா.. அப்புறம் எப்படி தண்ணி பத்தும் என்றான். அவன் பேச்சிலும் ஒரு உண்மை இருந்தது.

ஆரம்பத்துல அடி பம்புல் இருந்து க்‌ஷ்டபட்டு தண்ணி எடுத்து வந்ததுனால அதனோட அருமை தெரிஞ்சது. அதை ஒரு செல்வம் மாதிரி பயன்படுத்தினாங்க. சில சமயம் ஆர்வகோளாறுல குடிக்கிற தண்ணிய எடுத்து ஆட்டு மாட்டுக்கு வச்சுட்டு ”வாங்கி கட்டி”யிருக்கேன். கொஞ்சம் கூட வீணாக்கமா பயன்படுத்தியிருக்கோம்.

சமீபத்தில் இதனோட உச்சகட்டமா நாலு குழாய் போதவில்லே’னு, மக்கள் அவங்க வீட்டுக்கொரு குழாய் என ”தனி” யாக அமைத்து கொள்ள ஆரம்பித்தனர். எங்க அப்பாவும் எங்கிட்ட ஒரு ரெண்டு மூனு தடவ ஓதி பாத்தார், நான் காது குடுத்து கேக்கல, அவருக்கு தெரியாதா என்ன? என்னை எப்படி கவுக்கனும்’னு. செண்டிமெண்டா பேசி கவுத்து, எங்க வீட்டுக்கும் “தனி” குழாய் இழுத்தாச்சு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வீட்டுக்கு போன் பண்ணும் போதெல்லாம், “அம்மா கிட்ட பேசனும் குடுப்பா”  என்றால், ”தண்ணீ பிடிக்க போய்ட்டாடா” என்பார். ”அதான் வீட்டுலேயே குழாய் இருக்கே, பின்னே எங்க போனாங்க’னு விசாரிச்சா.. சரிவர கரண்ட் வராத்துனால, தண்ணிதொட்டியில் தண்ணி நிரப்ப முடியவில்லையாம்.. அதனால ”நோ வாட்டர்”.. அப்போ மறுபடியும் அந்த பழைய அடி பம்ப் குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள் நம்ம மின்வெட்டார் புண்ணியத்துல. 

இயற்கையை ஜெயிக்க முடியுமா சொல்லுங்க?