அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் தீர்மானங்களும் 12/31/2008

சமீபத்தில் வேலை முடிந்து ஆழ்வார்பேட்டையிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வரும்போது, பல்லாவரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த பேச்சாளர் ஒருவர், “ஈராக் போரைக் கண்டித்து, புஷ்ஷை எதிர்த்து” ஆக்ரோஷமாக பேசி தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். மேடையில் இருந்ததில் ஐந்தில் ஒரு பங்குதான் மேடை முன் அமர்ந்து அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தனர். மேடையில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

புஷ்ஷை எதிர்த்து, மன்மோகன்சிங் தீர்மானம் நிறைவேற்றினால் கூட அதை அவர் கண்டுக்க மாட்டார். அவ்வளவு ஏன் ”ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவர் பேச்ச அவரே கேக்க மாட்டார்” அப்படிப்பட்ட மனுசன் புஷ். இவ்வளவு இருந்தும்/தெரிந்தும் அந்த மனிதர், தொண்டை நரம்புகள் புடைக்க அனல் தெரிக்க பேசி காமெடி பண்ணிக்கொண்டிருந்தார். ”தீர்மானம்” என்றவுடனே எனக்கு ஏனோ அந்த பேச்சாளர் நினைவில் வந்து போகிறார்.

என் நண்பர் ஒருவரிடம், இந்த வருடம் உங்களுடைய தீர்மானம்(Resolution) என்ன? என்று கேட்க, அவரோ, “இனிமேல் எந்த தீர்மானமும் எடுக்க கூடாது என தீர்மானம் எடுக்கப் போறேன்” என்றார் நக்கலாக. அப்படி இல்லாம எதாவது ஒரு தீர்மானம் எடுத்து, அதை நிறைவேற்ற முயற்சி செய்றது நம்ம வழக்கம்.


இந்த வருடத்திற்கான என்னுடைய தீர்மானங்கள்:

1. நாளுக்கு ஒருவரை சிரிக்க (சிரிப்பாய் சிரிக்க அல்ல) வைக்கோனும்
2. வாரத்திற்கு ஒரு பதிவாவது (மொக்கையாவது) போடோனும்
3. மாதத்திற்கு ஒரு புத்தகம் (கத பொஸ்தகம் அல்ல) படிக்கோனும்.
4. வருடத்திற்கு நண்பர்களின் எண்ணிக்கையை ஒரு மடங்கு அதிகரிக்கோனும்.



Last but not least
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக பரிசோதனை செய்து கொள்ளளுங்கள்( இது பெண்களுக்கு ). ஆண்கள் தமது குடும்பத்திலுள்ள பெண்களை இந்த பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துங்கள்.(புத்தி சொல்றாராம்)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஞானப் பல் தந்த தொல்லை 12/29/2008

பஞ்சாயத்து போர்டுகாரங்க பாதி காசுக்கு வாங்கி போட்ட பழைய ட்யூப் லைட் மயங்கி மயங்கி எரியிற மாதிரி கீழ்த்தாடையில யாரோ ஆணி( தேவையுள்ள ஆணியா? தேவையில்லாத ஆணியானு கேக்கபிடாது ஆமா)... வச்சு லேசா குத்துற மாதிரி ஒரு உணர்வு. ஒரு சிறு அமைதிக்கு பின் மறுபடியும் திடீர் வெளிச்சம் போல சுரீர் வலி அதுக்கு மேல தூங்க முடியல.. பாழாப்போன பல் வலி தான்.

அர்த்த(மில்லா)ராத்திரி மூனு மணி ஆச்சு. எங்க ஊர் கல்லு ரோட்டுல 20கி.மீ வேகத்துல போற டிராக்டர்லேயே(இதுல போன பெரும்பாலான நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடியே சுகபிரசவம் ஆகியிருக்கு) அடிச்சு போட்ட மாதிரி தூங்குற ஆளு, இந்த பல்வலியில் பத்து நிமிசம் கூட கண் அசர முடியல. என்னா வலி.. என்னா வலி.

நேத்திக்கே நம..நம-னு (நமீதா..நமீதா-னு படிச்சா உங்கள் கண்ணுக்கு ஆயுள் கெட்டியா(க்)கும்) லேசா அரிச்சுது/வலிச்சுது, நம்ம தான் வார்னிங்(Warning) மெசேஜ்ஜை மதிக்கிறதே இல்லியே. எர்ரர்(Error) வந்தா மட்டும் தான் எழுந்து என்னானு பாக்குறது, அப்படியே பழகி போச்சு. பொறுத்து பாத்தேன், வலி குறையிற மாதிரி தெரியல.. சரி இது வார்னிங் இல்ல, எர்ரர் தான் புரிய ஆரம்பிச்சுது.

சரி ஆனது ஆச்சுனு என்னோட முதன்மை/குடும்ப மருத்துவருக்கு போன் போட்டேன்.

”என்னா தம்பி இந்த நேரத்துல, அங்க மணி மூனுக்கு மேல இருக்குமே!”

”ஆமாம்மா, எனக்கு பல் வலிக்குது, அதான்”

”எந்த பல்லு? எங்க வலிக்குது? ”

”கடைவாய் பல்லு தான். ஆரம்பிக்குறது என்னவே ஈறுலதான் ஆனா அது அக்ரிவேட்டாகி கன்னம், காது-னு போய் சில சமயம் கண்ணு வரைக்கும் வலிக்குது”

”அது ஒன்னுமில்ல ஞானப் பல் முளைக்குமா இருக்கும்பா அதான், சுடு தண்ணியில உப்பு போட்டு வாய் கொப்பளிச்சுட்டு, வலிக்கிற இட்த்துல கிராம்பு இருந்தா வை, சரியா போய்டும்”

சொன்னபடியே கிராம்பை வச்சுட்டு படுத்தேன், எப்போ தூங்கினேனு தெரியாது.

ஆனைக்கு அப்புறம் பல்ல ஒழுங்கா மெயிண்டெய்ன் பண்றது அகில உலகத்திலேயும் இந்த ஆளவந்தான் ஒருத்தன் தானே. அப்படியிருக்கையில் அவனுக்கு எப்படி பல் வலியெல்லாம் என பயந்தே போனேன். எல்லாம் இந்த ஞானப் பல்லின் மாயம்/தொல்லை தான்

நீங்கள் கணக்கில் சிங்கமா? 12/28/2008


நீங்கள் கணக்கில் சிங்கமா? (எத்தனை நாளைக்கு தான் புலியையே கூப்பிடுறது), அஞ்சாம் வாய்ப்பாடு நல்லா தெரியுமா? உங்களை தான் தேடிகிட்டு இருக்கார் இங்கே ஒருத்தர். அய்யோ பாவம் அவர், ரெண்டு பேருக்கு இடையில் மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறார். அவருக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன் உங்களுக்கு புண்ணியமா போகும்.

Vantage Point - திருப்புமுனை 12/28/2008


ஸ்பெயினில் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபரை கொலை செய்யும் முயற்சியை பலரின் பார்வையில் பல கோணங்களில் (Rashômon  பாணியில்) விவரிப்பதே இந்த Vantage Point. அதிரடி இசை, விறுவிறுப்பான திருப்பங்கள் என வேகத்தில் இப்படம் கில்லி தான். இதில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அமெரிக்க அதிபரை உத்தமாராக/நல்லவராக காட்டியிருப்பதும் தான்.

இந்த படத்தைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போது Rashômon , Akira, The Seven Samurai என பதிவின் நீளம் அதிகரிக்க. Rashômon சார்ந்த எனது கருத்துக்களை தனி பதிவாக போட வேண்டியாதாகிவிட்டது. 

James Bond பெயரின் வெற்றியின் பாதிப்போ என்னமோ அதே உச்சரிப்புடன் “Jason Bourne” வந்தது, இப்போ “Thomas Barnes”. Dennis Quaid, ஆக்ரோஷமான, அதிபருக்காக தன்னுயிரையும் விடத்துணிந்த விசுவாசமுள்ள பாதுகாவலர் வேடம். இதற்கு முன் இவர் நடித்த Smart People கதாபாத்திரத்திற்கு நேரெதிர்.
 
பல்வேறு கோணங்களில் கதை பயணித்தாலும் ஒவ்வொன்றிலுல் இருக்கும் திருப்பங்கள் மெச்சக்கூடியவை. Thomas Barnes-ன் விசுவாசம், அதிபரின் வரவேற்பு, குண்டு வெடிப்பு என முதல் காட்சியிலேயெ மொத்த கதையும் தெரிந்து விட்டாலும், சிறிதும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பை கூட்டி நிறைய திருப்பங்களுடன் கதையை நகர்த்தி மன்னிக்கவும் விரட்டியிருப்பது சிறப்பு. 

அப்போ அது நிஜ அதிபர் இல்லையா? மேடையில பாம் இருக்கிறத எப்படி கண்டு பிடிச்சார்? TV Screen ல அப்படி என்னத்த பாத்துட்டு அதிர்ச்சியானர்? அப்போ அவன் கொள்ளைக் கூட்டத்த சார்ந்தவனில்லையா? சுட்டது யாரு? இவனையும் ஏமாத்திட்டாளா? எங்கேயிருந்து சுட்டாங்க?, அதிபர் நல்லவரா? என கேள்விகளை எழுப்பி உடனுக்குடன் பதிலையும் தந்திருப்பது அருமை.

பொதுவாக கதை நகரும் போது நமக்குள் ஒரு கற்பனை சக்தி விரிய ஆரம்பிக்கும். இது இப்படி தான் முடியும், இவனோட குணாதிசயம் இப்படி தான் இருக்கும் என ஒரு முடிவுக்கு வருவோம், அதிலும் ஒரு 90% சரியாகவே இருக்கும் 90% படங்களில். இப்படத்தின் வேகத்திற்கு ஈடாக என் கற்பனை குதிரை அந்த அளவு வேகத்தில் ஓடவில்லை. இருந்தாலும் என்னாயிருக்கும்? இப்படியிருக்குமோ?.. அப்படியிருக்குமோ? என்ற எண்ணங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சுவதும் வெற்றி தானே.

மும்பை தீவிரவாத தாக்குதலின் போது தொலைக்காட்சி ஊடகங்கள் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தீவிரவாதிகளுக்கு தெரியப் படுத்தி தங்களது தீராத அ***பை தீர்த்துக் கொண்டன. இங்கு மட்டுமல்ல, ஊடகங்கள் எல்லா இடங்களிலும் இப்படியே தான் என நிரூபிக்கும்படி, Thomas Barnes தனது சக பாதுகாவலரிடம் தெரிவிக்கும் செய்திகளை ஒட்டு கேட்டு செய்தியாக்கி காசாக்கி கரியாக்கி கொண்டிருக்கும் ஒரு ஊடக கூட்டம் இப்ப்டத்தில்.

இது மாதிரியான ஆக்‌ஷன் படங்களில் சின்னதா காதல்/செண்டிமெண்ட் இருக்கும். இதிலும் கதையின் ஓட்டத்தையும் போக்கயையும் பாதிக்காமல் ஒரு குழந்தையின் தவிப்பையும் தாயின் பாசத்தையும் அழகாக சேர்த்திருப்பர். ஒரு சாதாரண சுற்றுலாவாசியாக வரும் Forest Whitaker-ன் நடிப்பு அபாரம். குழந்தையிடம் காட்டும் பாசம், குண்டு வெடிப்பை கண்டு அதிர்ச்சி, Noriega பின் தொடர்ந்து துரத்தல் என மிக இயல்பாக நடித்திருந்தார். 
இவ்வளவு நல்ல படத்திலும் சிறு ஓட்டையாக, Noriega வை போலீஸ் தெரு வீதிகளில் துரத்தும் போது, எதிரே சீருடையணிந்த காவல்ர்கள் “தேமே”-னு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து/கடந்து செல்வது செம காமெடியாக் இருந்தது.

மணிரத்னம் படம் மாதிரி மொத்த பட வசனங்களையும் டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம். இருந்தாலும், எனக்கு பிடித்த ஒரு “ந்ச்” வசனம். கொலைச் சம்பவத்தை பார்த்து அதிர்ந்து அதிபரிடம் “We have to REACT strong” என்று ஒருவர் தூண்ட அதற்கு பொறுமையாக “No. We have to  BE strong” என்பார் அதிபர். Vantage Point has many Turning Points.

நிகழ் கதைகள்... I 12/26/2008

இடம்: வேதியியல் ஆய்வுக் கூடம்
தோற்றம்: விரிவுரையாளர்(யோக)வள்ளி, பேராசிரியர் (டுபுக்கு)ராமன் மற்றும் மாணவர்கள்
மாணவர்கள்
அறக்க பறக்க தேர்வு எழுதிக் கொண்டிருக் கின்றனர். ராமன் மாணவர்களை வெண் மேகத்தை வெறித்து பார்க்கும் விவசாயி போல முறைத்து பார்த்துக் கொண்டு ரவுண்ட்ஸ் வருகிறார். அவ்வப்போது அவரது பார்வை வள்ளியையும் ரவுண்ட்ஸ் வருகிறது.

என்ன ராசா? முருகா? என்னபா இது?” பேப்பர்களுக்கிடையே இருக்கும் பிட் பேப்பரை எடுத்து காட்டி கேட்டார் முருகனிடம்.

யோகவள்ளிக்கு முன்; யோகவள்ளிக்கு பின் என அவரது இரு அவதாரங்களை புரிந்தரியாத முருகன், “அது ஒன்னுமில்ல சார், கெமிக்கல் ஈக்குவேசன்ஸ் எல்லாத்தையும் தனியா ஒரு பேப்பரில எழுதிப் பார்த்தேன்

அப்படியா தம்பி” என்று அமைதியுடன் திரும்பினார், யோகவள்ளிக்கு பின் ராமன்.

ஆஹா இந்த லூச ஏமாத்தியாச்சு மனசுக்குள் முருகன்

(யோகவள்ளி குரலில்) யோகவள்ளியிடம்.. ”வள்ளி.. வள்ளி.. இங்க பாரு வள்ளி, குடிக்கவே இங்க தண்ணியில்லயாம்.. முருகனுக்கு கொப்பளிக்க பன்னீர் கேக்குதாம்

என்ன சொல்றீங்க ராமன்

அவன் அவன்.. எக்ஸாம் கொஸ்டின்ஸ்க்கே பதில் எழுத நேரம் கிடைக்காம அல்லாடிகிட்டு இருக்கான்”, மேலும் முருகனை காட்டி, “இங்கே ஒரு அதிபுத்திசாலி தனியா எல்லா ஈக்குவேசனையும் எழுதிப் பார்த்தேன்னு எங்கிட்டேயே பொய் சொல்லுது

சிலம்பாட்டம் பார்த்து அக்னிபார்வைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி போல முருகன் விழி பிதுங்கி, ”மாப்பு.. வச்சுட்டாண்டா ஆப்பு” என்று வார்த்தையை மென்னு முழுங்கி நின்னான் வள்ளி முன்னே.



பின்குறிப்பு 1 : நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வேதியியல் கூடத்தில் பெண் ஆசிரியர்கள் கிடையாது.
பின்குறிப்பு 2 : என் பெயர் முருகன் அல்ல.

பல கோணங்களில் ஒரே கதை - Rashômon 12/26/2008



சமீபத்தில் 1950ல் புகழ் பெற்ற இயக்குனர் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படமான் ரோஸேமான்.  கமலின் விருமாண்டி படமும் இதே திரைக்கதை நுட்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே.  அதேபோல் ஆயுத எழுத்து, Vantage Point இதே வழி தான். 

காட்டுவழியே மனைவியுடன் பயணம் செய்யும் சாமுராயை, காட்டுக் கொள்ளையன் கொலை செய்து விடுகிறான். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், சாமுராய், அவனது மனைவி, காட்டுக்கொள்ளையன், மறைந்து இருந்து பார்த்த மரவெட்டி மற்றும் விசயம் தெரிந்து மண்டபத்தில் மழைக்கு ஒதுக்கும் ஒரு நபர் என ஒவ்வொருவரின் பார்வையிலும் கதை விரிகிறது. இறந்த சாமுராய்க்கு அவனது ஆவியை துணைக்கு அழைக்கிறார்கள் சம்பவத்தை விவரிக்க. முழுக்க முழுக்க இயற்கை ஒளியில் அடர்ந்த காட்டில் எடுக்கப்பட்ட அற்புதமான படம்.

ஒரே கதையை அஞ்சு தடவ பார்த்தாலும் கொஞ்சம் கூட அலுப்பு தட்டவில்லை. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விசயம் என்னவெனில் உண்மையில் நடந்தது என்னவென்று யாருக்கும் (நமக்கும்) தெரியாமல் போவது தான்.  சாட்சிகள் ஒவ்வொருவரும் நேரில் பார்த்த் சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் விவரிப்பதை தான் Rashômon  effect என பின்னாளில் நீதி மன்றங்களில் குறிப்பிட் ஆரம்பித்த்னர் அந்த அள்வுக்கு மிகப்பெரிய வெற்றியயும்/பாதிப்பையும் அரை நுற்றாண்டுக்கு முன்னரே ஏற்படுத்தி கொடுத்த படம்.

இந்த மாதிரி படங்களில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஒரே அலைவரிசையில் இருப்பது மிக அவசியமான ஒன்று.  அந்த வகையில் Akira Kurosawa-வின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Kazuo Miyagawa காட்டுக் கொள்ளையனின் குரூரத்தையும், சாமுராய் மனைவியின் அழகையும், சண்டையையும், ஆரம்ப/இறுதி மழைக் காட்சியையும் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருப்பார். Akira -வை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றமுதல் படம்.

இங்கு குறிப்ப்டபடவேண்டிய இருவர் காட்டுகொள்ளையனாக நடித்த Toshirô Mifune மற்றும் மரவெட்டியாக நடித்த Takashi Shimura,  இவ்விருவரும் Akira-வின் ஆஸ்தான நடிகர்கள்.  இவ்விருவரும் நடிக்க Akira இயக்கிய The Seven Samurai இன்றும் பல பலகலைகழகங்களில் மேலாண்மை சார்ந்த பாடமாக இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். 

மூன்றரை மணி நேரம் ஓடும் இந்த கருப்பு வெள்ளை படம் - The Seven Samurai எனக்குள் ஏற்படுத்திய அதிர்வு மிக அதிபயங்கரமானது. Akira-வின் இந்த படமும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதங்களில் மொழிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறது.  Akira-வின் இன்னொரு முக்கிய அம்சம் மழை சம்பந்தபட்ட காட்சிகள், மழை என்றால் அடித்து பெய்யும் அடைமழை தான், தூறல் மழைக்கெல்லாம் இவரின் படத்தில் இடமில்லை.


Cinema Paradiso - டூரிங் கொட்டாய் 12/24/2008


மிகப்பெரிய திரைப்பட இயக்குநர் Salvatore, தனது பால்ய காலத்தில் உற்ற துணையாக இருந்த ஒரு ஆத்மாவின் (Alfredo)  இறுதி சடங்கில் கலந்து கொள்ள வரும் போது, தனது ஆரம்ப கால நினைவுகளை அசை போடுவது தான் இந்த Cinema Paradiso. தலை வாழை இழை போட்டு அறுசுவை உணவை அனுபவித்து உண்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்த பொக்கிஷம். திடுக்கிடும் திருப்பங்கள் எதுமில்லாமல், ஆற அமர, ரசித்து ருசித்து அனுபவித்து பார்க்க கூடிய திரைக்கதை.

இப்படத்தை மூன்று பாகங்களாக/பருவங்களாக பிரிக்கலாம், இளமைக்கால Salvatore-ன் அனுபவங்கள், வாலிப பருவ காதல் மற்றும் Alfredo -வின் இறுதி சடங்கிற்கு வரும் Salvatore.  முதல் மற்றும் மூன்றாம் பாகம் மிக அருமை. இரண்டாம் பாகம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை, இப்பாகம் நிறைய வெட்டப்பட்டிருக்க வேண்டும் 155 நிமிடம் ஓடக் கூடிய படத்தில் நான் பார்த்து 123 நிமிடங்கள் தான்.

ஊரில் இருக்கும் ஒரே தியேட்டரில் மக்கள் அனைவருக்கும் படத்தை திரையிடுவதற்கு முன்னே பாதிரியார் ஆபாச காட்சிகளை தணிக்கை செய்கிறார். முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளை வெட்ட சொல்கிறார். தணிக்கை செய்வதை மறைந்து இருந்து பார்க்கும் சிறுவன் Salvatore, ஆர்வ மிகுதியில் அந்த காட்சிகள் அனைத்தையும் பார்க்க ஆபரேட்டர் Alfredo நட்பை நாடுகிறான். முதலில் தர மறுக்கும் Alfredo, சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், திறமையையும் கண்டு அவனை தன்னுடன் வைத்துக் கொள்கிறார். 

அனைத்து தரப்பு(சாதி/மத வேறு பாடின்றி) கூடும் இடங்கள் திரைஅரங்கமும்(பொழுதுபோக்கு இடங்கள்), பள்ளிக்கூடம்மும் தான். அப்படிபட்ட திரைஅரங்கம் (Cinema Paradiso) இக்கதையின் களம். அதில் பல்வேறுபட்ட சமூக கதாபாத்திரங்கள், உதாரணத்திற்கு பால்கனியிலிருந்து கீழிருப்பவர்கள் மேல் எச்சில் துப்பும் ஒருவர்; திரையரங்கிலேயே காதல் வளர்த்து கல்யாணம் செய்து கொள்ளும் தம்பதியினர்; படம் போட்டவுடனே தூங்கிவிடும் நபர்; வசன்ங்களை கதாபாத்திரங்களோடு கூட சேர்த்து உச்சரிக்கும் பெரியவர்; முன்சீட்டில் அமர்ந்து விசில் அடிக்கும் சிறுவர்கள் கூட்டம்; கடமை மறந்து பட்த்தை ரசித்துப் பார்க்கும் காவலர்கள் என நாம் அன்றாடம் சந்தித்த நபர்கள் நிறைந்திருப்பதால் படத்தின் கதையோட்டத்தோடு ஒன்றிப்போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 

சிறுவன் Salvatore,  Alfredo கூடவே இருக்க பல குறும்புத்தனமான வேலைகளை செய்கிறான். அவனின் ஆர்வத்தை அறிந்து தனது வேலையை அவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். கூடவே இது ஒரு முட்டாள்கள் செய்யக் கூடிய வேலை என்று பழிக்கிறார். விடுமுறை எதுவும் கிடையாது, வெயில்/மழை/பனி என எந்த காலங்களிலும் இங்கேயே தனியாளாக அடைந்து கிடக்கணும். ஒரே படத்தை 100 தடவை பார்க்கணும், பெரிய அலுப்பைத் தரக்க்கூடிய வேலை என்று சலிக்கிறார். இருப்பினும் படம் பார்ப்பவர்கள் க்க்கும் கைதட்டி ரசிக்கும் போது அந்த சந்தோசத்துக்கு நான் தான் காரணம் என்று நினைத்து மகிழ்ந்து கொள்வேன் என்று அந்த வேலையின்பால் அவருக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருப்பார்.

துரதிரஷ்டவசமா ஃபிலிம் சுருள் தீப்பிடித்துக்கொள்ள எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே ஓடிவர, Salvatore மட்டும் உள்ளே செல்கிறான் (தீயணைப்பு வீர்ர்களைப் போல) Alfredo –வை காப்பாற்ற, அவ்னால் Alfredo-வின் உயிரை ம்ட்டுமே காப்பாற்ற முடிகிறது. கண் பார்வை இழந்து மெய்ப்புலம் அறைகூவலர் ஆகிறார் Alfredo. சிறுவனின் நடிப்பு பிரமாதம்.

தீப்பிடித்த திரையரங்கை ஊர்பெரியவர் பராமரித்து, மறுபடியும் திறக்கிறார். Alfredo  கண்களை இழந்ததால், Salvatore ஆபரேட்டர் ஆகிறான் சிறுவயதிலேயே. தனக்கு Alfredo சொல்லிக்கொடுத்ததை வைத்து வேலையை திறமையாக செய்கிறான். அவ்வப்போது முத்தக்காட்சிகளும் இடம்பெறுகிறது.

தன்னை போல இவனும் அந்த சின்ன கிராமத்தில் இருந்து மங்கி விடாமல், வெளியே சென்று வெளிச்சம் பெற, கண்டிப்புடன் 
“நீ பேசுவதை நான் கேட்க கூடாது;
உன்னை பற்றி மற்றவர் பேசுவதை நான் கேட்க வேண்டும்”  என அறிவுறுத்தி, இனிமேல் இந்த கிராமத்திற்கு வரவே கூடாது நான் இறந்தாலும், இது தான் எனது கடைசி ஆசை என்கிறார். இந்த காட்சியை செல்லுலாய்டில் மிக நேர்த்தியாக நெய்திருந்தார் இயக்குனர் Giuseppe Tornatore. 

இறுதிசடங்கில் கலந்து கொள்ளும் சிதிலமடைந்த அந்த திரையரங்கையும், ஊர்மக்களையும் பார்க்கும் அந்த காட்சி மிக உணர்ச்சிகரமானது.

இறுதி சடங்கிற்கு பிறகு, Alfredo விட்டு சென்ற நினைவுப்பொருளை Salvatore-விடம் கொடுக்கிறார் அவரது மனைவி. அது ஒரு படச்சுருள், தணிக்கை செய்யப்பட்ட அனைத்து முத்தக்காட்சிகளையும் கொண்ட படச்சுருள், சிறுவனாக இருந்த போது தரமறுத்த வெட்டபட்ட படச்சுருள். இதய கனத்தோடு இனிதே நிறைவடைந்தது படம் இந்த காட்சியோடு. 

நடுத்தெருவில் பிள்ளையை போட்டு அடித்தல், பக்கத்து வீட்டுப் பெண் அடிப்பதை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தல்; கண்களாலே காதலித்தல் என பாரதிராஜாவின் கிராமத்து அற்புதங்களும் உண்டு.

இதில் திரையரங்கம் மற்றும் அது சார்ந்த காட்சிகள் 2001ல் Jim Carrey நடித்த The Majestic  படத்தை நினைவு படுத்தியது. இரண்டிலும் படத்தின் பெயரும் திரையரங்கத்தின் பெயரும் ஒன்றே. இதுவும் பார்க்க்கூடிய நல்ல படமே. சேரன் எடுப்பதாகக் கூறிய ”டூரிங் டாக்கீஸ்” கதையும் இதே ஆபரேட்டர்/சிறுவன் சம்பந்த பட்ட்து தான்.

என்னை போல டூரிங் கொட்டாயில் இளமையை கழித்த அனைவரும் கண்டிப்பாக பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான படம்.

கேளுங்கள் தரப்படும் 12/23/2008



பத்திரிக்கை படிக்கும் ஆரம்பித்த காலங்களில் சிறுகதை, நகைச்சுவை, சினிமா செய்திகள், சுட சுட அன்றாட செய்திகள் இருந்தாலும். நான் விரும்பி படிக்க ஆரம்பித்தது கேள்வி-பதில் பகுதி தான். இந்த ஒரு பகுதியில் தான் கேள்வி கேட்பவர் மற்றும் பதில் கூறுபவரின் திறமையை ஒருசேர காணமுடியும். 

முதன்முதலில் படிக்க ஆரம்பித்தது தினத்தந்தியின் குருவியார் பதில்கள் தான். நிறைய நக்கல்..கொஞ்சம் தகவல்; நிறைய லொள்ளு.. கொஞ்சம் கண்ணியம் என முழுக்க முழுக்க சினிமா சம்பந்தபட்ட செய்திகளை கொண்டிருக்கும் கெள்வி-பதில் பகுதி அது. இன்றும் ரிலாக்ஸாக இருக்க குருவியாரின் பதில்களை படிக்கலாம். நான் கடைசியாக படிக்கும்போது (மச்சான்) நமீதாவின் சம்பந்தபட்ட செய்திகள் அதிகமாக இருந்தது. தவிர ஆண்டியார் பாடுகிறார், சாணக்கியன் சொல் மற்றும் கன்னித்தீவு பகுதிகளையும் தவற விடுவதில்லை

குமுதம் வார இதழில் அரசு பதில்களில் அரசியல் மற்றும் சினிமா செய்திகள் அதிகம் ஆக்கிரமித்திருக்கும், கொஞ்சமா விளையாட்டு சம்பந்த பட்ட செய்திகளும். பதில்கள் அனைத்தும் ரத்தின சுருக்கமாககும், அன்றைய சூழ்நிலைகளை ஒட்டியதாகவும் இருப்பது அதன் சிறப்பு. இந்த வாரம் அரசின் இந்த கீழ்க்கண்ட கேள்வி பதில் தான் இந்த பதிவுக்கு மூல காரணம்.
கேள்வி கேட்பது, பதில் சொல்வது இந்த இரண்டைப் பற்றி உங்கள் அபிப்ராயம்?
பதில் சொல்வதைக் காட்டிலும் கேள்வி கேட்பதுதான் மனித குலத்தை மேலும் முன்னேற்றிச் செல்லும் என்று படித்திருக்கிறேன்.

ஆனந்த விகடன் வார இதழில் மதன்/சுஜாதா பதில்கள். இவர்களது பதிலும் கிட்ட தட்ட அரசின் பதில் போல சினிமா, விளையாட்டு அரசியல் சம்பந்த பட்டதாக இருந்தாலும், இவர்களது தனிச்சிறப்பு அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த பதில்களே; அதையும் சாமானியர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்குவதே. இலக்கியவாதி சுஜாதவின் "கற்றதும் பெற்றதும்" நூலும். கார்ட்டூனிஸ்ட் மதனின் "வந்தார்கள்.. வென்றார்கள்.. சென்றார்கள்" நூலும் இதற்கு சான்று. 

தினமலரின் வாரமலர் அந்துமணி பதில்கள், சமூக மற்றும் அரசியல் சம்பந்த பட்ட பதில்களை இங்கே அதிகமாக காணமுடியும். அந்துமணியின் பதில்களில் பெண்ணியவாதமும் அறிவுரைகளும் (புத்தி சொல்றாராம்) நிறைந்து இருக்கும், இருந்தும் "அந்த" மாதிரி சர்வே சம்பந்த பட்ட பதில்களை மாதம் ஒருமுறை படிக்க முடியும்.

 வசந்தம் என்று ஒரு இலவச இணைப்பு வாரந்தோறும் ஞாயிறன்று தினகரன் இதழுடன் வந்தது. அந்நாளில் "கேளுங்கள் தரப்படும்" எனும் தலைப்பில் "சின்னராஜு" என்பவர் இலக்கியம், சமூக, அரசியல், சினிமா, விளையாட்டு என பலதரப்பட்ட செய்திகளை இவரது கேள்வி-பதில் பகுதியில் அள்ளி தெளித்திருப்பார். கால சுழலினால் இப்போது என்னால் இந்த இதழை என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றாலும் எனது தமிழார்வத்திற்கு(தலைப்பிற்கும்) இவரும் ஒரு காரணம். கேள்வி பதில் என இல்லாமல், கதை, கட்டுரை என இவரது பங்கு "வசந்தம்" முழுவதும் வசந்தம் வீசச் செய்யும். துரதிர்ஷ்டவசமாக இவரை பற்றி எனக்கு வேறெந்த தகவலும் தெரியாது. தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொண்டால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பத்திரிக்கைகள் சில சமயங்களில் தாங்களே கேள்விகளை எழுதிவிடுவதாக கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக கேள்வியும் நானே பதிலும் நானே என எழுதி வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி மட்டுமே. தான் சொல்ல விரும்பும் செய்தியை கடிதமாக வெளியிட்ட இவர், அதிக மக்களை விரைவாக சென்றடைய கண்டறிந்த வழிதான் இந்த கேள்வி பதில் பகுதி. இவரது பதில்களிலே என்றென்றும் மறக்கமுடியாதது சர்க்காரியா கமிஷன் முன் "கனிமொழி யார்?" என்ற கேள்விக்கு இவரது புத்திசாலித்தன்மான பதில் தான்.  கேள்வி கேட்டவனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் கேனையனாக்கிய பதில் அது. பதில் இது தான், "கனிமொழி எனது துணைவியார் ராஜாத்தி அம்மையாரின் புதல்வி". இப்படி பதிலளித்த அதே கருணாநிதி தான் "தினகரன் கொலை சம்பந்தபட்ட கேள்விக்கு".. "நீதாண்டா கொலைகாரன்" என்று பதிலளித்து "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்று நிரூபித்தார். 

 தமிழக்த்தில் வெளிவரும் பத்திரிக்கைகள் "கேள்வி-பதில்" என்றொரு பகுதியை கண்டிப்பாக இடம் பெறும்படி பார்த்துக் கொண்டன. மாத்ரூபூதமும், நாராயண ரெட்டியும் உடலுறவு மற்றும் பாலியல் சம்பந்தபட்ட பதில்களை பார்த்துக் கொண்டனர்.

தொலைகாட்சிகள் இதற்கு விதி விலக்கு; கேள்வி-பதில் சம்பந்த பட்ட நிகழ்ச்சி என்று ஒன்றே கிடையாது. ஏதாவது ஒரு பண்டிகை/விடுமுறை நாளில் அன்றைய பிரபல சினிமா சம்பந்தபட்ட பிரமுகத்தை அவர் காலையில் ஆய் போவதிலிருந்து இரவு கொட்டாவி விட்டு தூங்குவது வரைக்கும் "பிரபலத்துடன் ஒரு நாள்" எனவும் "பேட்டி" என்ற பெயரில், "அந்த நடிகையை/நடிகரை கட்டிபிடிக்கும் போது என்ன/எப்படி உணர்ந்தீர்கள்?" என்ற சமூக விழிப்புணர்வை ஏறப்டுத்த கூடிய கேள்விகளும்(அசிங்கங்களும்) அரங்கேறின. 

 இந்த மாதிரி நிகழ்ச்சிகள், சினிமா சம்பந்தபட்டவர்கள் எல்லாருமே "டுபுக்குகள்" என்ற எண்ணத்த ஏற்படுத்த தவறவில்லை. ஆனால் அதுவல்ல உண்மை, உதாரணத்திற்கு, நடிகை கஸ்தூரி மிகச்சிறந்த அறிவாளி, மிஸ். சென்னை பட்டம் பெற்றவர். "கோன் பனேகா குரோர்பதி"  நிகழ்ச்சிக்கு கேள்விகளை தயார் செய்யும் பிரிவில் பணிபுரிந்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவரது தம்பி ஆசியாவிலேயே கணிதத்தில் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்தார். இவரை போல த்ரிஷா, விவேக், கமலஹாசன் மற்றும் அனைத்து கவிஞர்களும் திறமைசாலிகள் தான், இவர்களிடமாவது ஓரவளவு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கிறார்களா? அதுவும் இல்லை. யார் மட்டமான கேள்வி கேட்பது என ஒரு மறைமுக போட்டியே நடைபெறுகிறது தொலைக்காட்சிகளுக்கிடையே. 

 ஆனால் அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு தொலைக்காட்சிகள் இந்த மாதிரி தவறுகளை அதிகம் செய்வதில்லை. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில், காதல் மன்னன் ஜெமினி கணேசன், இயக்குனர் பாலா, கவிஞர் வைரமுத்து மற்றும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஆகியோர்களின் பேட்டியை கேட்கும்/காணும் வாய்ப்பு கிடைத்தது. 

 உதாரணமாக கவிஞரிடம் நிருபர் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டார் "தனிமனித துதி பாடி, பாட்டெழுதிகிறேர்களே, இது ஆரோக்கியமான விசயமா?". அதற்கு அந்த வெள்ளாடை வேந்தர் ," ஒரு பிரபலம் சொல்வதை கேட்க பலர் இருக்கிறார்கள் எனில், அவரது குணநலன்களை உயர்த்தி சொல்லலாம், அது கேட்கும் சாமானியனுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்" என்று பொருள்பட பதிலளித்தார். விடை பெறும் போது, கேள்வி கேட்டவரை பாராட்டவும் செய்தார்.

 அதேபோல, கமலிடம் ஒருவர், "மும்பை எக்ஸ்பிரஸ் - நஷ்டத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?" என்றார். "நஷ்டம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? நாம் இழந்த எதை திரும்ப பெறமுடியாதோ அது தான் நஷ்டம், அந்த வகையில் நேரத்தை மட்டுமே இழந்தேன் அதிலும் சில விசயங்களை கற்றுக்கொண்டேன்" என்றார் முத்தாய்பாக. 

 தற்போது உள்ளூர் தொலைக்காட்சிகளில், விஜய் தொலைக்காட்சி இதற்கு கொஞ்சம் விதி விலக்காக உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர்கள் தான் "புதிரா? புனிதமா?" என மாத்ரூபூததை வைத்து பாலியல் கேள்வி-பதில் நிகழ்ச்சியை வழங்கினார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் நிறைய எழுத்தாளர்களை இப்போது காண முடிவது மனதுக்கு இதமளிக்கிறது, இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக தோணுகிறது.


லாஜிக் இல்லா மேஜிக் 12/22/2008


படம் பூரா தீ தான். கால், கை, முகம், பைக் என எல்லாம் தீ. ஆனா சட்டை, பேண்ட் மட்டும் அப்படியே தீப்பிடிக்காம அப்படியே இருக்கு. செங்குத்தா இருக்கும் கட்டிட்த்துல பைக் ஓட்டுறார். ஆத்து தண்ணி மேல பைக் ஓட்டுறார், வழக்கமான சூப்பர் மேன் கதை தான், அப்படியே போனா போகுதுன்னு பொதுநலத்தையும் பாத்துகிறார், Eva Mendes-ஐ லவ்வவும் செய்கிறார் இந்த Ghost Rider. 

மோட்டார் சைக்கிள் சாகச வீர்ர் Nicolas Cage, தன் தந்தையை காப்பற்ற தனது ஆவியை(SOUL) ஒரு சாத்தானிடம் ஒப்படைக்கிறார், இதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குவது தான் Ghost Rider. 

Eva Mendes செதுக்கி வச்ச சிலை மாதிரி அம்சமா இருக்கிறார். இடது கன்னத்துல மச்சம் வேற, சொல்லவும் வேணுமா என்ன. காதிலிருந்து தொடங்கும் கீழ் தாடை முக்கோண வடிவில் இருப்பதை வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கலாம். சின்ன வயசு Eva Mendes நல்ல ஒற்றுமை, அவளுக்கும் அதே மாதிரி ஒரு மச்சத்தை ஒட்ட வச்சிருப்பது அசத்தல்.

சௌந்தர்யா சுல்தானை முடிச்சுட்டு சும்மா இருந்தா இந்த படத்த ரஜினியை வச்சு எடுக்கலாம். தீயை டால்ஃபின் வடிவத்துல எரிய விடலாம். Ghost Rider பண்ற சாகசத்துல பாதியை ரஜினி எப்பவோ பண்ணிட்டார். அப்படி ஒரு 100% மசாலா படம். படம் முழுவதும் அனல் தெரிக்குது. இந்த டிசம்பர் மாத குளிர்லேயும் என் உடம்பு பூரா சூடாகிடுச்சுனா பார்த்துக்கங்கோ (அதுக்கு Eva Mendes காரணமல்ல என்பதை கனிவுடன் தெரியபடுத்திக் கொள்கிறேன்).

ரோட்டுல Eva Mendes-ஐ சேஸ் செய்யும் காட்சி அருமை. ஆனா, ஃபுட் பால் கிரவுண்ட்ல ஹெலிகாஃப்டர்களுக்கு/டிரக்குகளுக்கு மேல பறக்கும் காட்சி காதுல ஒரு கூடை ப்ப்பூ, இருந்தாலும் ரஜினியை கற்பனை பண்ணி பார்த்த்துனால ரொம்ப சுவாரசியமா இருந்த்தது

குடுத்த காசுக்கு குறை இல்லாம ரெண்டு மணி நேரமும் வேகமா போகுது. லாஜிக் இல்லா மேஜிக்கிற்கு Ghost Rider பார்க்கலாம்.


அன்பென்ற மழையிலே... 12/22/2008


தமிழ் சினிமாவில் பெண்களுக் கென்று (கதாநாயகி) அறிமுக/ தனிபாடல் அமைவது அரிது. எனக்கு தெரிந்த வரையில் 1991ல் பிரம்மா படத்தில் S.ஜானகி குஷ்பூ-விற்காக பாடிய “இவளொரு இளங்குருவி; எழுந்து ஆடும் மலர்க்கொடி” பாடலில் ஆரம்பித்தது. அதன் பின் 1992ல் வெளிவந்து சக்கை போடு போட்ட ரோஜாவில் “சின்ன சின்ன ஆசை” பாடல், A.R ரஹ்மானின் அறிமுக இசையில் மின்மினி பாடிய, இந்த பாடலின் வெற்றி இது மாதிரி பாடல் வர ஒரு பிள்ளையார் சுழியாய் அமைந்தது எனபது என் எண்ணம். கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி எவ்வளவு பிரபலமோ அதே அளவு பிரபலத்தை இந்த பாடலும் 
அடைந்தது.

இதைத் தொடர்ந்து 1994ல் வெளிவந்த ”மே மாதம்” திரைப்படத்திலும் இயற்கை அழகில் லயித்து தனது விருப்பங்களை/அனுபவங்களை கதையின் நாயகி பாடும் “மார்கழிப் பூவே” தனிப்பாடல் இன்றும் பலரது விருப்பபட்டியலில் தனியிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். அதே ஆண்டு வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெற்றி பெற்ற ”சீவலப்பேரி பாண்டி” படத்தில் வரும் “ஒயிலா பாடும் பாட்டுல”
"அடி சந்தோச கூத்தாடு, என் சங்கீத சாப்பாடு
ஏய்..மழையே மழையே மேகததை எடுத்து தாவணி நீ போடு;
இந்த காடே என் வீடு என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம், அது ரெண்டும் என் பாடு
மழை வந்தாலென்ன்ன, இடி வந்தாலென்ன நீ துணிஞ்சு விளையாடு"
அந்த அளவுக்கு பிரபலமடையவில்லை என்றாலும், எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை திரும்பக் கேட்க வைக்க்கூடிய அருமையான பாடல்.

பின்னர் 1995 ல் வெளிவந்த ஆசை, பிரகாஷ்ராஜ், அஜித் ( இந்த படத்திற்கு பிறகு “ஆசை” நாயகன் என்றழைக்கப்பட்டார்) மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது இந்த படம். இப்படத்தில் இடம்பெற்ற “புல்வெளி புல்வெளி” ( இந்த பாடலுக்கான ட்யூனை இங்கிலாந்து பாடகர் Rod Stewart-ன் Maggie May-யிலிருந்து கொஞ்சம் உருவியிருப்பார் நம்ம 
தேனிசை தென்றல்).
“வானம் திறந்திருக்கு பாருங்கள்;
என்னை வானில் ஏற்றிவிட வாருங்கள்”
சித்ராவின் குயிலோசையினாலும் அருமையான காட்சி படுத்தலினாலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

1996ல் வெளி வந்த இந்தியன் “அக்கடானு நாங்க உடை போட்டா” (ஸ்வர்ணலதா) இந்த பாடலுக்கு நடனமாட்டேன் என்று கமல் அடம்பிடித்ததால் தான் ஷங்கருக்கும் கமலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி, அதனால் படமும் தாமதமாகி வெளிவந்தது. அதற்கு அடுத்து K.பாலுவின் தாயரிப்பில் தீபாவளிக்கு( பொங்கல்?)பாஞ்சாலங்குறிச்சி (சீமான் இயக்கத்தில்) மற்றும் சேனாதிபதி வெளிவந்தது, அதில் பாஞ்சாலங்குறிச்சி மட்டுமே வெற்றிபெற்றது, இதில் தேனிசை தென்றலின் இசையில் அதே ஸ்வர்ணலதா ஒரு பெண் தன் காதலனின் மீது கொண்டுள்ள ஆசைகளை ஏக்கத்தோடு மனதை வருடும்படி பாடிய ”ஆச வச்சேன்” மெல்லிசை பாடலும்.
மாரளவு தண்ணியில, மஞ்ச தேச்சு நான் குளிக்க, மறைஞ்சு இருந்து நீயும் பாக்க ஆச வச்சேன்;
பசுவ போல மெல்ல வந்து, கொசுவத்தையும் நீ இழுத்து, குசும்பு பண்ண 
வேணும்னு ஆச வச்சேன்;
உள்ளூர் சந்தையில, எல்லாரும் பாக்கையில, கண்டாங்கி வாங்கி தர ஆச வச்சேன்;
குத்தாத முள்ளு குத்தி, குதி காலு வலிக்குதுனு, மடி மேல கால போட ஆச 
வச்சேன்;
அத்தனையும் பொய்யாச்சே ராசா, இப்போ ஒத்தையில் நிக்குதிந்த ரோசா

அதன்பின் 1997ல் வெளிவந்த AVM-மின் வெள்ளி விழா ஆண்டு படமான, மின்சாரக் கனவில் எனது அபிமான பாடகி அனுராதா ஸ்ரீராம் அறிமுகமான “அன்பென்ற மழையிலே” பாடலும் நல்ல வெற்றி பெற்றது, அனுராதா ஸ்ரீராமுக்கும் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

பின்னர் 1999ல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த “பூவெல்லாம் கேட்டுப்பார்”, நட்சத்திர ஜோடி சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம், மற்றும் ஜோதிகாவுக்கு முதலில் வெளியான படம்( வாலியில் அறிமுகமாகி இருந்தாலும் “பூவெல்லாம் கேட்டுப்பார்” முதலில் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.) இதில் ஜோதிகா சுத்தி சுத்தி இடுப்பை குலுக்கி ஆடும் குழந்தைத்தனமான நடனம், “பூவ.. பூவ.. பூவே” பாடலுக்கு மேலும் அழகு சேர்த்தது.
”பூவே.. சிறு பூவே.;
உனைப்போல் வாழ்ந்த்திடும் வாழ்க்கை வேண்டுமே;
நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி;
நீ ராணி என்றும் எனக்கு நல்ல தோழி;”
அதே ஆண்டில் பரத்வாஜின் இசையில் அமர்க்களம் படத்தில் ஷாலினி தன் சொந்தக் குரலில் “சொந்தக் குரலில் பாட” என்ற பாடலை பாடியிருப்பார்.

அறிமுக இயக்குனர்/இசையமைப்பாளர் கவுதம்/ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் 2000ல் வெளிவந்த மின்னலே படத்தில் இடம்பெற்ற “வசீகரா” பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு வசீகரமான பாடல் வரிகளும் துணையாக இருந்தது சிறப்பு.அடைமழை வரும் அதில் நனைவோமே,
”குளிர் காய்ச்சலோடு சினேகம்,
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்;
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்,
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே தான் எதிர்பார்க்கும்.
எங்கேயும் போகாமல், தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்.”
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமத்த பாடல்கள் பெரும்பாலும் தமிழ் வரிகளை கொண்டிருக்கும். ”ஒம்ஹ ஸியா.. ஒயி லா லா”, “மெஹோ.. மெஹோ” போன்ற மொழி புரியாத ஆரம்ப ஹம்மிங் அவரின் தனித்திறமை.

பின்னர் 2001 ஆனந்தம் படத்தில் “ஒற்றை நாணயம்” பாடல் ஸ்னேகா விற்கு ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது, ஆனாலும் அதே ஆண்டில் கவர்ச்சி மலை மும்தாஜ் நடித்த “மலே மலே” கன்னா பின்னாவென பிரபலம் அடைந்தது..

2002ல் ப்ரியதர்ஷனின் “லேசா லேசா” ( இந்த படத்தின் ஒரிஜினல் பெயர் “கண்மணி நீ வர காத்திருந்தேன்”, ஆனால் ”லேசா லேசா” பாடல் பதிவிற்கு பின், பாடலின் outcome நன்றாக அமைந்திருந்ததால் பாடலின் ஆரம்ப வரிகளையே படத்திற்கும் வைத்து விட்டார்கள்), த்ரிஷாவின் இந்த அறிமுகபாடலை எனது அபிமான பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார்.

2003ல் D.Imman இசையில் வெளிவந்த விசில் படத்தில் அனிதா சந்திரசேகர் பாடி, ”தெத்துப்பல் அழகி” ( Who advised her to remove that teeth? ) ஷெரின் நடித்த “அழகிய அசுரா” கிட்ட தட்ட “வசீகரா” பாடல் ஏறபடுத்திய பாதிப்பை ஏற்படுத்தியது.
”உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுன மச்சம் சொல்லும்;
என்னை சேர்பவன் யாரோ அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று”
என அருமையான வரிகள் கொண்ட பாடல். இந்த பாடல் வெற்றியை “திருடா திருடி” படத்தின் “மன்மத ராசா” பாடலின் வெற்றி பாதித்து விட்டது. ஆனால் எனக்கு இன்றும் “ஆஹா கூசுது முத்தம் முத்தம்” என்ற சாயா சிங்கின் அறிமுக பாடல் தான் பிடித்துள்ளது, அதற்கு காரணம் அனுராதா ஸ்ரீராமின் குரல் தான்.

2004ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான கில்லியில் த்ரிஷாவின் அறிமுகப்பாடல் ( விஜய் இதுக்கு எப்படி ஒத்துகிட்டார்னு தெரியல) ஷா..லா.. ஷா..லா.. மற்றும் பு.கோ.ச. படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் “மலர்களே.. மலர்களே” (
ஆடைகள் சுமை தானே அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்;
யாரேனும் பார்ப்பார்கள் என்ற கவலை ஏதுமின்றி கழிப்பேன்,
குழந்தையென மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிறதே;
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டு என் உள்ளம் சொல்கிறதே,
அழைக்கிற குரலுக்கு வந்து விடுவேன்;
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே,
இங்கு விடுதலைக்கிணை என்று ஏதுமில்லையே;
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி.
பாடலாசிரியர் தாமரை என்று நினைக்கிறேன். அருமையான வரிகள்)
அபர்ணாவின் தனிப்பாடலும், “அப்படி போடு” பாடல் கொடுத்த அதிர்வில் அமுங்கி போயின. இதே போல “ரன்” படத்தில் “மின்சாரம் என் மீது பாய்கின்றதே” பாடலும் அருமையான பாடலே ஆனால் ”காதல் பிசாசு” பாடலால் பிரபலமடையாமல் போய்விட்ட்து.

இந்த பாடல்கள் அனைத்துமே பெண்கள் பாடி நடித்து, பெண்களை அதிகம் கவர்ந்த பாடல்கள். கொஞ்சம் வித்தியாசமாக, பெண்களுக்கு மிகவும் பிடித்த, ஆண் பாடி நடித்த பாடல் இங்கே.





இன்னொரு மிகப்பிரபலமான பாடலும் உள்ளது. மிகப்பிரபலமான ஆண் பாடகர் பாட, இரண்டு பெண் ஜாம்பவானிகள் நடித்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்த பாடல். தெரிந்தவர்கள் பின்னூட்ட்த்தில் தெரிவிக்கலாம்.

முருகனும்... நானும்... 12/19/2008



ஆக்க பிரம்மா; காக்க விஷ்ணு; அழிக்க சிவா என மும்மூர்த்திகளும், கல்விக்கு சரஸ்வதி; செல்வத்துக்கு லட்சுமி; வீரத்துக்கு காளி என முப்பெருந்தேவிகள் இருந்தாலும், பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் அவர் தான் இஷ்ட தெய்வம் என்பதில் இருவேறு இருக்க முடியாது. எனக்கும் தமிழ்க் கடவுள் முருகன் தான் இஷ்ட தெய்வம்.

வரலாற்றின் அடிப்படையில் அவரது படைவீடுகளை கீழ்க்கண்டவாறு வரிசைபடுத்தலாம்
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்சோலை

இந்த அறுபடை வீடுகளில் சுவாமி மலை மற்றும் திருத்தணி தவிர மற்ற அனைத்து தளங்களையும் தரிசித்து விட்டாயிற்று. இங்கு குறிப்பிட்த்தக்க இன்னுமொரு முக்கிய அம்சம், நான் பிறந்த மதுரை மாவட்டம் மட்டும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட (இரண்டு: திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை) படைவீடுகளை கொண்டது.

இது தவிர, மயிலை, கந்த கோட்டம், மருதமலை என குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என அவருக்கு எல்லா மலைகளிலும் ஒரு கோயில் இருக்கும்.

மக்கள் திலகத்தை உயிர் மூச்சாக நினைக்கும் “(நரி)குறவர்கள்” , தங்கள் இனத்தை சேர்ந்த வள்ளியை மணந்த்தால், முருகனுக்கென ஒரு தனியிடத்தை நெஞ்சங்களில் ஒதுக்கியுள்ளனர். இந்த புராணத்தை அடிப்படையாக கொண்ட “ஸ்ரீவள்ளி திருமணம்”  என்ற மேடை நாடகம் இன்றளவும் தமிழக கிராமப் புறங்களில் மிகப்பிரபலம். நாடகத்திற்கு நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்து, நாடகம் முடிந்த பல நாட்கள் வரை பின் அவர்களின் ( முக்கியமாக வள்ளி, நாரதர், ஆர்மோனிய வாத்தியர் ) நடிப்பை/இசையை அக்கம் பக்கம் உள்ள அனைத்து ஊர்ப் பெரியவர்கள் விமர்சிப்பதை கேட்கலாம்.

இந்தியத் திருநாட்டின் தேசிய பறவையை வாகனமாகக் கொண்ட எம்பெருமான் தமிழ்க்கடவுள் முருகனுக்கு எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்டவை தான், வாகனத்தில் இருந்து படைவீடுகள் வரை. பெயர்களும் அப்படியே: சரவணன், ஆறுமுகன், கந்தன், கடம்பன், சுப்ரமணியன், கார்த்திகேயன், குமரன், குகன், வேலன், தண்டாயுதபாணி, செந்தில், சண்முகன் என பல பெயர்களில் மக்களால் விரும்பி அழைக்கப்படுகிறார்.

எல்லா விசயங்களிலும் நம்ம தமிழர்களுடன் சுத்தமா ஒத்து போகாத கேரள மக்கள், இந்த ஒரு விசயத்தில் மட்டும் விதி விலக்கு. பெரும்பாலான கேரள மக்களுக்கு பழனி முருகன் தான் இஷ்ட தெய்வம் கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பனை ஒப்பிடும் போது. என்ன காரணம் என்று விசாரித்து பார்க்கையில் நம்ம முருகன் மேற்கு (கேரளா) நோக்கி அருள்பாலிக்கிறார். ஆனால் ஐயப்பன் கிழக்கு (தமிழகம்) நோக்கி அருள்பாலிக்கிறார். இது ஒரு காரணமாக சொல்லப் படுகிறது. 

தமிழகம் தவிர்த்து பார்க்கும் போது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் முருகனுக்கு வழிபாட்டு தளங்கள் உண்டு. 

2002 தைப்பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரை சென்ற அனுபவத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஓசோன் படலத்தை முழுவதுமாக நுகர்ந்த ஒரு மறக்க முடியாத பயணம்/அனுபவம் அது. கடவுள் நம்பிக்கைக்காக இல்லையென்றாலும் உடல் நலத்துக்காகவாவது இந்த மாதிரி ஒரு பாதயாத்திரை மேற்கொள்வது சால சிறந்தது.  ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனக்கந்த வாய்ப்பு கிட்டவில்லை

சிங்கப்பூரில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை கிடையாது, ஆனால் மலேசியாவில் உண்டு. 2005 ஆம் ஆண்டு தைபூசத்திற்கு சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சாரை சாரையாக சென்ற மக்கள் கூட்ட்த்தை பார்த்த நண்பர் “எங்க இருந்தாங்க இவ்வளவு மக்களும்?” என்றார் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன். உண்மை தான் தீடீரென பொங்கிய கடல் போல அவ்வள்வு மக்கள் எப்படி அந்த சின்ன நாட்டிலிருந்து(ஊரிலிருந்து) வந்தார்கள் என்று எனக்கும் ஆச்சர்யம் தான்.

அதே 2005 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியா சென்றிருந்த போது, பத்து குகை முருகன் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்த்து. அப்போது வானுயர்ந்த முருகன் சிலை கட்டப்பட்ட நிலையில் இருந்த்த்து; திறக்கப்பட வில்லை. 140 அடி கொண்ட உலகிலேயெ மிகப்பெரிய வள்ளி மணவாளன் சிலையை 2006ம் ஆண்டு ஞாயிறு ஜனவரி 29 அன்று திறந்தார்கள். மறுபடியும் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

முருகன் எனக்கு இஷ்ட தெய்வம் என்று சொல்லும் போது, உடனே என்னை வந்தடையும் கேள்வி “நக்கலான” கேள்வி. ”அவருக்கு ரெண்டு பொண்டாட்டி-ங்கிறதுனாலாயா?” என்று. என்னத்த சொல்றது, நம்ம ஒன்னு சொன்னா, அவங்க வேறொன்னு நினைக்கிறாங்க..அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் உவமைக்கதை இது தான்.

ஒரு பையன் தன் அப்பாவிடம்,
”அப்பா, நான் பின்னாளில் கண்ணதாசன் மாதிரி வரணும்னு ஆசைப்படுறேன்” என்றான்.
அப்பாவோ, மிக உற்சாகமடைந்து, “நல்லது மகனே, நிறைய புத்தகங்களை இப்பவே படி” என அறிவுறுத்தினார்.
பையன் நக்கலா ” அவர் மாதிரி புட்டி/குட்டிகளோடு குடியும் குடுத்தனமும இருக்கணும் ஆசை பட்டேன்”  என்று சொன்னானாம்.

ஆலயமணி படத்தில் முருகனின் அண்ணன் நடித்து அறுபடை வீடுகளுடனே ஆறுகட்டளைகளை விளக்கும் ஒரு அருமையான பாடல் இங்கே: 




காற்றுள்ள போதே தூற்றிக் கொள் 12/17/2008



"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" இந்த பழமொழி விவசாயியால்(விவசாயிக்காக) சொல்லப் பட்டிருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இதையே Seize the Moment என்பார்கள். இது தொடர்பான ஒரு நகைச்சுவை கதை இங்கே.

வங்கியை கொள்ளையடித்தவன், காசாளரை சுட்டு கொன்ற பின், அங்கு வரிசையில் நின்ற ஒரு முற்போக்கு பதிவரை ( உள்குத்து எல்லாம் இல்ல ஆமா சொல்லிட்டேன்)  ”இந்த கொள்ளையை பார்த்தாயா?” என்றான்.

அதற்கு அந்த பதிவர், ”ஆமா, நான் பார்த்தேன், இதை பற்றி நாளை ஒரு பதிவும் போட போறேன்” என்றார் துடிப்போடு.

“டமால், டுமீல்”,  ரத்த வெள்ளத்தில் பதிவர்.

அடுத்து பக்கத்துல மஃப்டியில் இருந்த காவலர் தம்பதியரை பார்த்து கேட்டான் கொள்ளையன், “நீங்க பார்த்தீங்களா?”.

இவர் தான் சட்டகல்லூரி வளாகத்தில் நடந்ததையே சட்டை செய்யாமல் வேடிக்கை பார்த்தவராயிற்றே. அதே பழக்கத்தில் , “இல்லை.. பார்க்கவே இல்லை” என்று தன் தொப்பை மேல் அடித்து சத்தியம் செய்தார்.  

உடனே மறுபடியும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, “நான் பாக்கல தான், ஆனா என் பொண்டாட்டி பார்த்துட்டா” என்றாராம் சமயோசிதமாக பொழைக்க தெரிந்த அந்த மனுசன்(காவலர்).


Fortune Cookie அடைமொழி வாசகம் 12/16/2008

வருஷம் முழுவதும் நம்மள போட்டு பார்க்கிற Project Damager-ஐ நம்ம போட்டு பார்க்கிற நேரம் தான் இது. That is PARTY TIME! வருச கடைசி ஆயிடுச்சு வாங்க கொண்டாடுவோம்-னு எதாவது ஓர் உணவகத்துக்கு Damager-ஐ கூட்டிட்டு போய் மொய் எழுதிட வேண்டியது. ஏதோ பொருளாதார முன்னேற்றத்துக்கு எங்களால் முடிந்த ஒரு சிறு முயற்சி.

எங்களுக்கும் அப்படி வாய்ப்பு அமைந்தது இன்று. எங்க Damager கூட நாங்க போன இடம் P.F.CHANG’s.  இது ஒரு சங்கிலி தொடர் சீன உணவகம்( Chain of Chinese Restaurent).  சீன உணவு வகைகளை அமெரிக்க தரத்துடன் தருவது இந்த உணவகத்தின் சிறப்பு.

எல்லா சீன உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பிடித்தபிறகு, பில்லோடு சேர்த்து Fortune Cookie-யும் தருவார்கள், அதில் ஒரு அடைமொழி (எதிர்காலம் குறித்து) வாசகம் இருக்கும், பொதுவா அந்த வாசகம், நல்ல விசயமாகத்தான் இருக்கும் (வியாபாரத் தந்திரம் தான்).

என் நண்பர், என்னிடையே இதை படிப்பது பற்றி விளக்கினார். அதாவது எல்லா வாசகத்திற்கு பிறகும் “in bed”  சேர்க்க சொன்னார். என்ன ஆச்சர்யம் “in bed”  சேர்த்து படிச்சு பார்த்தா செம காமெடியா இருந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்து அடைமொழி வாசகங்களும் கீழே:

Hope is the most precious
treasure to a person.

Honesty and friendship
bring you fortune.

You are known for being quick
in action and decisions.

Do not mistake 
temptation for opportunity

படத்திலிருக்கும் அடைமொழியை மறுபடியும் திரும்ப படிங்க.


வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததா? 12/15/2008


ரஷ்யாவிற்கு எதிரான ஆஃப்கன் முஜாகிதீன்களின் போரில், அமெரிக்காவின் அப்போதைய Texas Representative, Charlie Wilson-ன் பங்கு முக்கியமானது. போதுமான ஆயுதங்கள் இல்லாமையால் ரஷ்யாவின் போர் ஹெலிகாப்டர்களின் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பேரிழப்பை சந்திக்கின்றனர் ஆஃப்கன் முஜாகிதீன்கள். இதனால் நாட்டை இழந்து பாகிஸ்தானின் எல்லையில் அகதிகளாக வாழ்கின்றனர் ஆஃப்கன் மக்கள். அப்போதைய அமெரிக்க அரசாங்கம் 5மில்லியன் அமெரிக்க டாலர்களை தந்து உதவுகிறது. ஆனால் அது ”யானை பசிக்கு சோளப்பொறி” மாதிரி என்பதை நேரில் பார்த்த சார்லி உணர்கிறார்.

பின்னர் தன்னுடைய திறமையினாலும் மற்றும் தோழியின் உதவியினாலும் பல எதிர்ப்புகளை தகர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக உதவித் தொகையையும் போர்க்கருவிகளையும் அதிகப் படுத்துகிறார். ஆஃப்கன் முஜாகிதீன்கள் அவ்வுதவியை பயன்படுத்தி தொடர் வெற்றிகளை குவிக்கின்றனர், இதனால் 5மில்லியன் உதவித் தொகை படிப்படியாக உயர்ந்து 500 மில்லியனாக மாறுகிறது. இறுதியில் முஜாகிதீன்கள் ரஷ்யாவை -“அமெரிக்கர்களின் எதிரியை” விரட்டியடிக்கிறார்கள் அமெரிக்காவின் துணையுடன். அதோடு பட்த்தை முடித்திருந்தால் ”பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு” –னு ஆகி இருக்கும். ஆனால், வெற்றிக்குப்பின் அமெரிக்கா செய்த தவறையும் இந்த படம் தெரிவிக்கிறது தான், இப்படத்தின் சிறப்பம்சம்.

பின்லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய போது எல்லோரும் ”வளர்த்த கிடா மார்ல பாய்ஞ்சுடுச்சு” –னு சொன்னாங்க.. ஆனால் இப்படத்தின் மூலம் தெரியவருவது.. பாய்ந்தது வளர்த்த கிடா அல்ல.. வஞ்சிக்கப்பட்ட கிடா என்று.

Mike Nicholas இவர் இயக்கிய The Graduate, Dustin Hoffman-க்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த, பொருந்தா காமம்/காதலை விளக்கும் படம், இதே கதையின் தொடர்ச்சியாக (இரண்டாம் பாகம் மாதிரி) Jennifer Aniston நடித்த Rumor Has It… என்ற நகைச்சுவை படம் வெளி வந்தது. அதன் பின் அவர் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்தது (பார்த்தது) Working Girl. Harrsion Ford, Sigourney Weaver and Melanie Griffith நடித்த நகைச்சுவை படம், இதில் Melanie- திறமையை அழகாக வெளிப்படுத்திருப்பார், அதன் காரணமாக சிறந்த நடிகைக்கான Oscar விருதுக்கும் பரிந்துரை செய்ய பட்டார். Melanie-க்கு அப்படியே அவர் அம்மா Tippi Herden-ன் ( இவரும் நடிகையே, The Birds - பார்க்க வேண்டிய படம்) முகம் மற்றும் (கொஞ்சலான)குரல். அடுத்து பிடித்தது Closer, Natalie இந்த படத்தில் Julia Roberts உடன் போட்டி போட்டு நடித்திருப்பார். அதை தொடர்ந்து 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் Charlie Wilson’s War.

மூன்றே மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் தான், Tom Hanks, Julia Roberts and Seymour Hoffman. Tom Hanks, Charlie Wilson ஆக வருகிறார். புட்டி..குட்டி என அஜால்.. குஜாலாக தொடங்குகிறது படம், மதப்பற்றில்லாத, சமூக அக்கறையுள்ள ஒரு பெண்பித்தர் கதாபாத்திரம் இவருக்கு.

Julia Roberts, கிறிஸ்தவ மதத்தை பரப்பும் பெண்ணாக வருகிறார். அரசியலில் மதம் எவ்வளவு கலந்திருக்கிறது என்பதற்கு இவருடைய பாத்திரப் படைப்பே சாட்சி.

அடுத்து CIA Agent ஆக Seymour Hoffman , படத்தில் இவருடைய ஆரம்பமே அருமை. நல்ல Counter Attack வசனங்களை கொண்ட அருமையான காட்சி அது. உள்ளே கன்னா பின்னா-னு திட்டி விட்டு வெளியில் வந்து Typist-டம் “How was I ?“ என விமர்சனம் கேட்பது செம நக்கல். இறுதிகாட்சியில் ஆஃப்கன் நலனுக்காக Tom –மிடம் வார்த்தையால் மோதும் போது அவர் காட்டும் உணர்ச்சிகள் கன கச்சிதம். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான Oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்த மூன்று ஜாம்பவான்களுக்கிடையே தன்னாலும் ஜொலிக்கமுடியும் நிரூபித்திருக்கிறார் Amy Adams – Tom Hanks-ன் செக்கரெட்டரி. “Catch Me If You Can” படம் அவருக்கு சரியான திருப்புமுனையை தரவில்லையென்றாலும். அதற்கு முன் நடித்த “Cruel Intention II” குரூரம் நிறைந்த அந்த திமிரான இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அதற்கு நேரெதிராக இப்படத்தில் Tom-மின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒரு மென்மையான செக்கரெட்டரி கதாபாத்திரம். Tom போதை வழக்கில் மாட்டிக் கொள்ளும் போது இவர் தவிப்பதிலாகட்டும், Tom-ன் சாமர்த்தியத் தனமான பேச்சை கேட்டு ரசிப்பதிலாகட்டும் ஒருவித ஒருதலைக் காதல் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்.

அவ்வளோ பணம் செலவழிச்சு ஆஃப்கன் முஜாகிதீன்களை வைத்து ரஷ்யர்களை விரட்டிய அமெரிக்கா, போர் முடிஞ்சதும் சிதலமடைந்த ஆஃப்கனையும் அந்நாட்டு மக்களின் நலனைப் ப்ற்றியும் சிறிதும் கவலை படாமல் அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டது. போர் முடியும் போது ஆஃப்கன் மக்கள் தொகையில் பாதிப்பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள், போரினால் மனதால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் நலனுக்காக 1 மில்லியன் அமெரிக்க அரசிடம் கேட்டு போராடி தோற்றுப்போகிறார் சார்லி. அப்போது அவர் கூறும் ஒரு ”நச்” வசனம். The ball keeps on bouncing. அது தான் நடந்தது 2001ல்.

பொதுவா போர் தொடர்பான படங்களில் நகைச்சுவை அவ்வளாக இருக்காது. ஆனால் இந்த படத்துல அப்படி ஒரு குறை இல்லை.

எனக்கு பிடித்த சில முத்தான வசனங்கள்...

செக்கரெட்டரி Amy , Tom-மிடம். Why can’t you wait for newspapers like everybody else?
பதிலுக்கு Tom – ஒருவித புத்திசாலிதன தோரனையுடன் Because I think it’s productive to know today’s news today. And it makes me one day smarter than you, which I enjoy as well.

Creche பிரச்சினையை பற்றி பேச Tom-ன் அலுவலகத்துக்கு வரும் Larry, Receptionist-டிடம் - It seems to me, looking around, that it’s almost all women working here, and that they’re all very pretty. Is that common?
பதிலுக்கு Receptionist, Congressman Wilson, he has an expression. He says, “You can teach them to type, but you can’t teach them to grow t*ts.”

Seymour Hoffman ஆரம்ப காட்சி

Seymour –ன் மேலாளர் அதிகார தோரனையுடன், I am not looking to humiliate you or exact a price in anyway, so why don’t you just apologize?
Seymour ரொம்ப நக்கலா பதிலுக்கு Excuse me, what the f*** are you talking about?
மேலாளர் -Claire George was said you were coming in here to apologize.
Seymour மறுபடியும் தெனாவெட்டா, No. I’m supposed to come in here so you could apologize to me.
மேலாளர் கோபத்துடன் According to whom?
Seymour ரொம்ப சாதாரணமா, Claire George
மேலாளர் மறுபடியும் தீராத கோபத்துடன் You told me to go f*** myself. I’m supposed to apologize to you?

பாகிஸ்தான் அதிகாரி: So do you understand the situation on our border
Tom புஷ் மாதிரி அசடு வழிய Yes sir , I think I do And I think it’s terrible

Tom, Seymour –டம் Were you standing at the goddamn door listening to me? மீண்டும் பரிதாபமாக That’s thick door
Seymour ரொம்ப கூலா, I wasn’t standing at the door, I bugged the Scotch bottle

இஸ்ரேல் ஆயுத வியாபாரி: We just got done fighting a war with Egypt and every person who has ever tried to kill me and my family, has been trained in Saudi Arabia.
Seymour ரொம்ப சாதாரணமா,That’s not entirely true, ZVI. Some of ‘em trained by us

Tom-ன் போதை வழக்கு விடுதலைக்கு பிறகு..

Julia மதப் பற்றுடன், He may be in trouble with the press, but he stayed out of jail. You don’t see God’s hand in this?
Seymour வழக்கம் போல ரொம்ப கேஷுவலா, Well, reasonable people can disagree, but I don’t see God anywhere within miles of this. On the other hand, If you slept with me tonight, I bet you I could change my mind in a hurry.

Seymour, Tom-மிடம் இறுதி காட்சியில் You are not stupid. You are just in congress

ATM மெஷின் பொய் சொல்லுமா? 12/13/2008

ATM மெஷின் பொய் சொல்லுமா???..

சொல்லிடுச்சே.. இப்போ தான் படம் (Love Me If You Dare)  பார்த்துட்டு, அந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்ததால அதைப்பத்தி ஒரு பதிவும் போட்டுட்டு.. நேரமாயிடுச்சே, அப்டியே போய், இந்த வாரத்துக்குரிய காய்கறி/மளிகை சாமான் வாங்கிட்டு, ATM-லேயும் போய் பணம் எடுத்துட்டு வரலாம்னும் கிள்ம்புனோம்.

ATM கார்டை செருகி, பின்-னை அழுத்தி, $50 வேணும்-னு சொல்லிட்டேன். கொஞ்ச நேர உருட்டல்/புரட்டல் சத்ததிற்குப்பிறகு, “பணத்தை எடுத்துக்கோங்க” அப்டினு சொல்லிச்சு, ஆனா அங்க பணத்தை காணோம்யா.. காணோம்... ஆனா பில்லு மட்டும் வந்துடுச்சு பல்ல காட்டிகிட்டு....

உடனே குடல் வரைக்கும் அடிக்கிற இந்த குளிர்ல ஃபோன் அடிச்சேன் வங்கிக்கு, ஒருத்தனும் இல்ல( குடும்பத்தோட குற்றாலம் போயிருப்பானுங்களோ?)...திங்கட்கிழமை தான் மறுபடியும் முயற்சி பண்ணனும்.

எனக்கு பணம் வந்து சேரலைங்கிறதுக்கு மூனே மூனு சாட்சி தான் இந்த உலகத்துல இருக்கு.. ஒன்னு நான்( ஆனா, நம்ம நாட்டாமை மாதிரி, "செல்லாது..செல்லாது"-னுல சொல்லுவானுங்க).. அப்புறம் என் ROOMMATE.. கொய்யால, மனுசன எவன் நம்ப போறான்?. அதுக்கு தான் இருக்கே மூனாவதா.. அந்த கேமிரா... 

சரி விடு, நம்மள மாதிரி ஒருத்தன் தான் Program எழுதியிருப்பான். Programmer வாழ்க்கையில இதல்லாம் சகஜம் தானே..

பி.கு: அந்த பில்லை மட்டும் தான் போட்டோ எடுக்கலாம்-னு இருந்தேன். அப்டியே நம்ம தங்க தலைவியையும் கவர் பண்ண வேண்டியதா போச்சு.... ஹி..ஹி...

காதலித்துப்பார்.. முடிந்தால்.! 12/13/2008



அட ..அட.. காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு அருமையான படம் Love Me If You Dare

ஹீரோ பேரு -Julien, ஹீரோயின் Sophie. இவஙக ரெண்டு பேருக்கும் வெளியில ஒரு உலகம் இருக்குங்கிற நெனைப்பே சுத்தமா கிடையாது. Fancy Box யார்கிட்ட் இருக்கோ அவங்க வைக்கிற விளையாட்டுல ஜெயிச்சு அந்த Box-ஐ வாங்கணும், அதுக்காக என்ன வேணும்னாலும் செய்ய ரெண்டு பேரும் ரெடி. ஒரே அதகளம் தான். 

இந்த படத்த நாலு பாகமா பிரிச்சு இருக்காஙக.. 

1.Game ( பிஞ்சு வயசு விளையாட்டுகள்/சேட்டைகள்)
2.Set (விடலை பருவம் ஊடல்/கூடல்/காதல்/கலாட்டா)
3.Match(கல்யாண வயசு.. ஒருத்தரை ஒருத்தர் பார்க்க ஏங்குவது)
4.The Dare  of Dares ( கிழம் ஆன பிறகு, அந்த பிஞ்சு வயசு சேட்டகளை கண்டினியூ பண்றது)

பாகம் ரெண்டு, மூனுல தான் Julien, Sophie வர்றாங்க.. எல்லா ரொமான்ஸ் படத்துல வர்ற மாதிரி, இதுலேயும் ஹீரோயின் செம க்யூட். நடிப்பிலேயும் அம்மணி குறை வைக்காம பின்னி பெடல் எடுத்திருக்கா..

Box வேணுமா.. அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட தோடு வாங்கிட்டு வா. Box வேணுமா.. Class-க்கு சூப்பர் வுமன் காஸ்ட்யூம் ல போ... இப்படி பல.. ஒன்னொன்னும் சரவெடி தான்..அடி/தடி..ஊடல்/கூடல்.. இப்படி போகுது படம்.. 

அவனுக்கு கல்யாணம் அங்கு வர்ற Sophie, Box வச்சுகிட்டு (கல்யாண) பொண்ண வேணாம்-னு சொல்லுங்கிறா.. அத Julien மறுக்க இனி 10 வருசத்துக்கு நாம் சந்திக்கவே கூடாது-னு சொல்லிட்டு போயிடுறா.. இதுக்கிடையில ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆயிடுது தனித்தனியா... ஆனா LOVE மட்டும் சும்மா நாளுக்கு நாள் Strong ஆகிட்டே இருக்கு... கரெக்டா பத்தாவது வருசம், அவனுக்கு அந்த Box தபால் அனுப்பி வைக்கிறா... அவளை தேடி வர்றான்..மறுபடியும் ஆரம்பிக்குது அவங்க விளையாட்டு.. நீண்ட இடைவெளிக்கப்புறம் விளையாட்டு ஆரம்பிச்ச சந்தோசத்த மனுசன் .... ஒரு LIST போடுறான்.. அதெல்லாம் விட ரொம்ப சிறப்பானாதாம்/சந்தோசமானதாம்.. படம் பார்த்த எனக்கும் அப்டி தான் இருந்துச்சு.

The game is better than..

Pure 
Raw 
Explosive pleasure
Drugs
Smack
Ganja
marijuana
Blotter acid
ecstasy
S**
Head
6*
Orgies
M*******tion
Tantrism
Kamasutra
Thai *****-style
Banana milk shake
George Lucas
Trilogy
Muppets and 2001
Emma Peel
Marilyn
Lara croft
Cindy Crawford’s beauty mark
B-Side of Abbey Road
Hendrix
First man on the mooon
Space mountain
Santa claus
Bill gate's fortune
Dalai Lama
Lazarus raised from dead
Schwarzenegger's testosterone shots
Pamela Anderson's lips
Woodstock
Raves
de Sade
Rimbaud
Morrison
Castaneda
Freedom
Life

நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் சொன்னது போல, இங்கும் இறுதி காட்சியை மழையுடன் இணைத்து காதலுணர்ச்சியை மெருகேற்றியிருப்பார்கள்..