அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

இந்த வார படங்கள் 3/01/2009

இந்த வாரம் பார்த்த ரெண்டு படங்களை பற்றிய பதிவு இது. FILMMOVEMENT  என்றொரு அமைப்பு வணிக அதி தீவிர விளம்ப்ரங்களினால் வெளிவர முடியாம சிக்கி த்விக்கும் சில நல்ல சினிமா , குறும்படம், கல்வி தொடர்பான படங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாக 
கொண்டு செல்கின்றனர்.

இந்த வாரம் இதிலிருந்து சுமார் ஆறு படங்களை பார்த்த எனக்கு, இரண்டு படங்கள் மிகவும் பிடித்து போயின, அதை பற்றிய பதிவு தான் இது. 

முதல் படம் The Great Match. சகல வசதியுடன் வாழும் நாம் உலகத்தின் நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் தொலைக்காட்சியின் வாயிலாக வீட்டிலிருந்தே கண்டுகளிக்க முடிகிறது, உதாரணத்துக்கு தற்போது (இதை எழுதும்போது) நடை பெற்று கொண்டிருக்கும் ஆஸ்கார் விருது விழா. 2002ல் பிரேசில்-ஜெர்மனிடையே நடக்கும் உலக கால்பந்தாட்ட இறுதி போட்டியை,  உலகத்தின் மூன்று வெவ்வேறு தட்பவெட்ப/புவியியல் அமைப்பில் வாழும் மக்கள் என்ன செய்து அப்போட்டியை காண்கிறார்கள் என்பதை மிக மிக துல்லியமாக, எவ்வித உயர்த்திகாட்டுதலுமில்லாமல் படம் பிடித்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்டவை தான் அந்த மூன்று பிரதேசங்கள்

1. ALTAI (ICE) Mountains  - Mangolia
2. TENERE Desert  - Niger
3. AMAZON Jungle - Brazil


படத்தின் ஆரம்பமே அமர்க்களம். கழுகின் பார்வையில் விரிகிறது படம். ஒரு கழுகு மேலே பறக்கும் போது அதன் பார்வையில் என்ன தோன்றுமோ அதை கண் முன்னெ நிறுத்தியிருந்தனர், அதுனூடே வரும் அந்த மங்கோலிய இசை அப்பப்பா.. மிக அருமை. பத்து நிமிடம் நீடிக்கிறது இந்த மங்கோலிய பனிமலை காட்சி. அடுத்து நம்மை Niger உள்ள பாலைவனத்து அழைத்து செல்கின்றனர், அரேபிய இசையுடன். அடுத்து பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் உள்ள் காட்டுவாசிகளின் ( செவ்விந்தியர்கள்) கூடாரத்திற்கு அழைத்து செல்கின்றனர் டிரம்ஸ் இசையுடன்.

இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விசயம், அனைத்து ரசிகர்களும் பிரேசிலுக்கே தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் ஜெர்மனியை ஆதரிக்கின்றனர் வலுக்கட்டாயமாக, அரசியல் காரணங்களுக்காக.

அமெரிக்கர்களிடையே குமார் என்ற பெயர் இந்தியர்களுக்கு மட்டும் பொதுவான பெயர் என்ற கருத்து உண்டு, இதில் மங்கோலியர்களிலும் குமார் என்று பெயர் வைத்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

காடானலும் சரி, நாடானும் சரி. பெண்கள் ”மேக்-அப்”க்கிற்கு ரொம்ப்பப... முக்கியத்துவம் தருகிறார்கள்.

ஆண்டென்னாவை ஒருவர் மரத்து மேல அமர்ந்து கொண்டு எரும்பு கடிகளுக்கிடையே பிடித்து கொள்ள, கீழே இருந்து ஒருவர் ரன்னிங் கமெண்ட்ரி குடுக்க, அந்த ஓட்டை டிவியில் திரைக்கொசுகளுக்கிடையே அவர்கள் பார்த்து ரசிக்கும் கால்பந்தாட்டம் மிக யதார்த்தமாக படம்பிடிக்க பட்டிருந்தது.
தொலைகாட்சியில் போட்டியை பார்க்க மர-அரவை மில்லிற்கு ஓடும் காட்டுவாசிகளின் ஓட்டத்தை கால்பந்தாட்ட வீரர்களின் ஓட்டத்திற்கு ஒப்பிட்டது அருமையாக இருந்தது. 

பாலைவனத்தில் டிவி வைத்திருப்பவர் முன்னாடி தான் உக்காருவேன் என அடம்பிடித்து பேட்டரி வைத்திருப்பவருடன் சண்டையிட்டு சமாதானம் ஆவது, பேட்டிகிடையே ஒருவர் மஞ்சள் பத்திரிக்கையின் படம் விற்பது, போட்டியை காணமுடியாமல் ஒட்டகத்தை காவல் காக்கும் ஒருவர் ஒட்டகத்தோடு போட்டியை பார்க்க போன அனைவரையும் சபிப்பது என அனைத்து காட்சியுமே இயல்பாக இருந்தது. பாலைவனத்திலிருக்கும் அந்த இரும்புகம்பியை, மரம் என்று சொல்லி விளக்கம் தருவது காமெடி

அடுத்து பார்த்த படம் Arranged. முஸ்லீம் - நசீரா மற்றும் யூத- ரேச்சல் (Jews) இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் நட்பை விளக்கும் படம். 

ஒரே பள்ளியில் புது ஆசிரியர்களாக ஆசிரிய பணியை தொடங்கும் இவ்விருவரும் தங்களின் வாழ்க்கைத் துணையை பெற்றோரின் உதவியோடு தேடுவதையும், அவர்களின் நட்பையும், மெல்லிய நகைச்சுவை கலந்து யதார்த்தமான பயணத்துடன் விவரித்திருப்பது சிறப்பு. அடுத்தடுத்த காட்சிகள் அனைத்தும் யூகிக்கும்படி இருந்தாலும், ரசிக்கும்படியாகவே இருந்தது.

யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஜென்மபகை. இருவரும் கீரியும் பாம்பும் போல ( யார் பாம்பு, யார் பூனை என்று கேட்காதீர்கள்) எனவே நசீராவும் ரேச்சலும் நண்பர்களாக இருக்க முடியாது என ஒரு மாணவன் வாக்குவாதம் செய்ய அவனுக்கு இவ்விருவரும் சேர்ந்து கொடுக்கும் பதில் அருமை. 

அதே போல, மத உணர்வை வெளிப்படுத்துகிற மாதிரி உடை அணிந்து உங்களை கஷ்டபடுத்தி கொள்ளாமல், என்னை மாதிரி நவநாகரீக உடை அணிந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்து ஆசிரியர்க்கு ரேச்சல் கொடுக்கும் பதிலடி அதிர்ச்சி வைத்தியம்.

நசீரா அவனது வருங்கால கணவன் தன்னை தொட்ட அந்த ஸ்பரிசத்தை ரேச்சலின் காதருகில் வந்து மெல்லிய ஹஸ்கி குரலில்... He is ... kind of.... touched me.. என சொல்லி நாணப் புன்னகை சிந்தும் அந்த காட்சி அருமையிலும் அருமை.

மீட்டிங்கிலிருந்து தப்பிக்க முத்தான பத்து வழிகள் 2/24/2009

ரிசஷன் வந்தாலும் வந்துச்சு, ஆளாலுக்கு மீட்டிங் போட்டு தாக்குறாக. ரெண்டு மூனு மெயில் அனுப்பி பேசி முடிக்க வேண்டிய சின்ன வேலையா இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, தலைக்கு மேலே தொங்கும் கத்தியிலிருந்து தப்பி ஒப்பேத்திக்கிறோம்.

இதுக்கிடையில இந்த மீட்டிங் என்னை கூப்பிடல உன்ன கூப்பிடல என உப்புப் பெறாத பாலிட்டிக்ஸ் வேறு. மொத்த எட்டுமணி நேர வேலையில் அஞ்சாறு மணி நேரம் மீட்டிங்கிலேயே கழிக்கும் என்னை போன்ற அப்பாவிகள் படும் துன்பம் சொல்லி மாளாது. இந்த மொக்கையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்கையில் (அப்பப்போ இதெல்லாம் செய்வேன்) தோன்றியது தான் இந்த பதிவு. ஒகே ஸ்டார்ட் மூசிக்.

1. தூக்கம் வந்தால், கண்ணை மட்டும் திறந்து வைத்து கொண்டு தூங்க முயற்சி செய்யலாம், இல்லையேல், கண்ணை மூடி, கீழே குனிந்து, நோட்பேடில் சீரியஸாக எதாவது கிறுக்கலாம், நெற்றியில் கைவைத்து கண்ணை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைப்பது உசிதம்.

2. தூக்கமும் வரல, மொக்கையும் தாள முடியலேன்னா, கூச்சமே படாம “Excuse Me” என மெதுவா கூவி வெளிநடப்பு செய்துட்டு, மீட்டிங் முடியுறதுக்கு ஒரு அஞ்சு பத்து நிமிசதுக்கு முன்னாடி லேசா வயித்த தடவிய படியே இருக்கையில் அமர்ந்து கொள்ளாலாம், இதற்கு வசனம் தேவையில்லை

3. அப்பப்போ அவ்வை ஷண்முகியை பார்த்துட்டு மேலே வானத்த பார்க்கும் டெல்லி கணேஷ் மாதிரி, மேலே ஒரு தடவை பார்த்துட்டு, எல்லார் முகத்தையும் ( கொஞ்ச சிரிச்ச முகத்தோட) பார்த்து ஆக்டிவ் அட்டெண்டன்ஸ் போடலாம். ஆர்வக்கோளாரினால் ரொம்ப அளவுக்கதிமா சிரிச்சு, ஏற்கனவே தூக்கத்துலிருக்கும் சில் ஆன்மாவை எழுப்பி, சாபத்துக்குள்ளாகாதீர். 

4. வெறுமனே பார்த்து சிரித்து கொண்டிருந்தால் போதாது, அப்பப்போ தெளிவா பேசணும், கேள்வி கேக்கணும். ரொம்ப கஷ்டபடாமல் சுருக்கமாக I agree என்று ஆரம்பித்து, ஒருவர் பேசிய அதே வாக்கியத்தை திரும்ப பேசலாம், இதை அவருக்கும் உங்களுக்கும் ஒரு சுமூக உறவு ஏற்படுத்து ஒரு வெள்ளை கொடியாக பயன்படுத்தலாம். பரீட்சையில் கேள்வியையே பதிலாக பக்கமா பக்கமா எழுதுற மாதிரி ரொம்ப சுலமான விசயம் தான், ஒரு தடவை பழகிட்டா பின்ன விடவே மனசு வராது.

5. மீட்டிங்கில் இருப்பவர் எதிர்கட்சியை சார்ந்தவர் எனில், I disagree with you  என்று ஆரம்பித்து உங்களுக்கு தோன்றுவதை (மொக்கை போட சொல்லியா தரணும்) பேசலாம், இடையிடையே Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துக் கொண்டால், நீங்கள் டெக்னிக்கலில் பெரிய "கை" என்ற விளம்பரம் ஃபிரியா கிடைக்க வாய்ப்பு உண்டு, பிசினஸ் மக்கள் இருக்கும் போது இவ்வார்த்தைகளை பயன்படுத்தினால், மக்கள் வாயில் ஈ ஆடாமல் கேட்பதற்கான சாத்தியக்கூறு அதிகம், சமீபத்தில் பிரச்னையாக இருக்கும் சில வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளுவது புத்திசாலித்தனம்.

6. சில சமயம் மீட்டிங்கில் எல்லாரும் சீரியஸாக எதாவது எழுதுவார்கள் ( அல்லது முயற்சிப்பார்கள்), உங்களுக்கு எழுத எதுமே கிடைக்க்வில்லை ( கவனிச்சிருந்தா தானே கிடைக்கும்) எனில் சமீபத்தில் கேட்டு முனுமுனுக்கும் எதாவது ஒரு பாட்டின் வரியை ஆங்கிலத்தில் எழுதலாம். அதையே வலைப்பதிவில் ஏற்றி ஒரு பதிவின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

7. சில சமயங்களில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு மேலே சில மொக்கசாமிங்க மொக்க போட்டு தாக்கிகிட்டு இருப்பார்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மொபைல் போனில் மீட்டிங் முடியும் நேரத்திற்கு ( 5-7 கழித்து) அலாரம் செட் பண்ணி வைத்து கொள்ளலாம், அலாரம் அடித்தவுடன் உடனே எடுத்து மிகவும் சீரியஸாக.. “Yeah, I am in meeting now, Its kind of getting delay,  I will be able to finish that data issue after coming out of meeting, sorry for the inconvenience caused” னு பரபரப்பா பேசி, எல்லாரையும் ஒரு தடவை கொஞ்சம் வெறிச்சு பார்த்துட்டு.. “I think, We are good now, Shall we wind it up now?”  ஒரு கேள்வியையும் அப்பாவியா கேட்டுட்டா கைமேல் பலன் கிடைக்கும்.  மீட்டிங்க்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வார்த்தைகளை முன்ன பின்ன போட்டு சமாளிக்க உங்களுக்கு சொல்லியா தரணும்.

8. வெள்ளம் வருவதற்கு முன்னே அணை போடனுங்கிற மாதிரி, இந்த மாதிரி மீட்டிங்கை எல்லாம் முளையிலே கிள்ளி எறிய ஒரு வசதியுள்ளது. உங்க MS Outlook calendarல் Lunch, T Time, Timesheet Submission/Approval, Status document preparation இது போன்ற வழக்கமான வேலைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது நம்ம ரொம்ப ”பிஸ்ஸ்ஸீ”னு ஃபிலிம் காட்ட உதவும், அதையும் மீறி மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டா, பல வேளைகளுக்கிடையே இந்த மீட்டிங் அட்ட்ண்ட் பண்றேன் சொல்லி, இருக்கிற கொஞ்ச நெஞ்ச இமேஜை உயர்த்தி கொள்ள்லாம், ஆர்வக்கோளாறில் bloggingக்கு தனியே நேரம் ஒதுக்கி, உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணினால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.

9. சில சமயங்களின் நாம் பேசுவது சிலருக்கு புரியாது, நமக்கே பல சமயம் புரியாதுங்கிறது வேறு விசயம். அந்த மாதிரி சமயங்களில், பக்கத்துல இருக்குற போர்டில் உஙகளுக்கு தெரிஞ்ச எல்லா ஷேப்பையும் ( வட்டம், சதுரம், செவ்வகம், நீள்சதுரம், நீள்வட்டம், முக்கோணம்) வரைந்து அதுக்குள்ள சில ஆங்கில வார்த்தையை எழுதி, உங்களுக்கு தெரிந்த Conjuctions words எல்லாம் பயன்படுத்தி மிச்சத்தை ஒப்பேத்தலாம். பேசி முடிச்ச பிறகு, ”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this”  என ஒரு பிட்டை போட்டு, நக்கலா லேசா முன்முறுவல் செய்தால், யாருக்கு தான் தன்னை கேனையன் ஒத்துக்க மனசு வரும் சொல்லுங்க, எவனாவது கேள்வி கேப்பான்?

10. அப்படியும் ராகு காலத்துல பிறந்த சில பிசாசுங்க எதாவது புத்திசாலிதனமா கேள்வி கேட்டுச்சுன்னா ஒன்னும் பயப்பட்த்தேவையில்லை. கேள்வி கேட்ட ஆள், உங்களுக்கு வேண்டிய ஆள் எனில், “Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum”  ஆரம்பிச்சாலே அந்த ஆள் உச்சி குளிர்ந்து பேச்சு மூச்சு இல்லாம உக்காந்துடுவான், அப்புறமென்ன வழக்கமான மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான். கேள்வி கேட்ட ஆள் நமக்கு வேண்டாத ஆள் எனில் , நக்கலா ஒரு தடவ சிரிச்சுட்டு, “It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.

11. மீட்டிங் அரேஞ்ச் பண்றவங்ககிட்ட TeleConference நம்பர் அடம்பிடிச்சு வாங்கி, டயல் பண்ணி அட்டெண்டஸ் போட்டுட்டு, ”மியூட்”ல போட்டுட்டு உங்க வேலைய (எதாவது இருந்தா) பாக்க வேண்டியதுதான். ஆனா இதுல அப்பப்போ ஆக்டிவ் அட்டெண்டஸ் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம், நீங்க அமைதியா இருந்தா தூங்கிட்டதா நெனச்சுக்குவாங்க – பாம்பின் கால் பாம்பறியும் தானே, ஸோ கேர்ஃபுல்.

12. இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்.. நம்ம தான் கேடினா, நமக்கு மேல ரெண்டு மூனு கேடிங்க இருப்பானுவ. அவிங்க எல்லாம் எப்படி சமாளிக்கிறாய்ங்கனு பாத்து பழகலாம், ஜஸ்ட் கட் காபி பேஸ்ட் பண்ற மாதிரி தான், மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்து தரணுமா என்ன? ஆனா, நீங்க காப்பி அடிக்கிற/பழகிற விசயம் அவிங்களுக்கு தெரியாம பாத்துக்கனும், அதனால அவுக இல்லாத மீட்டிங்கா பாத்து உங்க “தனி”திறமைய தைரியமாக காண்பிங்க.

ப்பூ இதென்ன பெரிய வித்தை.. நாங்கெல்லாம்....” என ஆரம்பிக்கிறவங்க உங்க வித்தையெல்லாம் இங்கே கொட்டிவிட்டுட்டு போங்க, என்னை மாதிரி சில அப்பாவிகளுக்கு பயனுள்ளதா இருக்கும்.

என்னாடா இது 10 வழின்னு சொல்லிடு அதிகமா இருக்குன்னு கிளர்ச்சியடைய வேண்டாம், மண்டைய போட்டு குடையவேண்டாம், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். வழக்கம்போல கூட ரெண்டு ரன்னு எக்ஸ்ட்”ராவா” அடிச்சுட்டேன் ஆர்வகோளாறு மிகுதியில், அவ்ளோ தான் மேட்டர். அப்போ நான் வர்ட்டா.

பி.கு 1:  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு

பி.கு 2:  நான் எழுதினதுலேயே ரொம்ப்ப்ப்ப ந்நநீநீளமான பதிவு இது தான்.

எதிரெதிர் துருவங்கள் 2/22/2009

என்ன? எதோ பேசனும்’னு வரச் சொல்லிட்டு அமைதியா இருக்க?

ஏன் நான் அமைதியா இருந்து நீ பாத்தது இல்லியா? இல்ல என்னோட அமைதி உனக்கு பிடிக்கலியா?

இல்லே எப்பவும் வந்தவுடனே கோவை சரளா மாதிரி வள வள’னு சரளமா பேசிகிட்டு இருப்பே.. இன்னைக்கு என்ன இவ்ளோ அமைதின்னு.. கேக்க...

ஒனக்கு நான் கோவை சரளாவா.. நேத்து என்னவோ நேட்டலி போட்மேனு’னு சொன்ன.. 

இல்ல, காமெடியா பேசுவ அப்டினு சொல்ல வந்தேன்..

அதான் சொல்லிட்டியே.. இன்னும் என்ன வந்தேன்.. போனேன்.. நின்னேன்’னு கத சொல்ற..

சரி நீ கோபமா இருக்க போல..

(இ)தோடா.. கண்டுபிடிச்சுடுச்சு கொரங்கு, ஒரு நாயா பொறந்திருந்தாலும், பேவ்லோவ் ஒன்ன வச்சு conditioned reflex கண்டு பிடிச்சுருப்பாரு.. நீதான் கொரங்காச்சே. அதுவும் மனுச கொரங்கா பொறந்து தொலச்சுட்ட..நாயே..நாயே..

ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு.. 

ஒனக்கு கொலஸ்ட்ரால் அதிகம்தான்டா... இவ்ளோ திட்டுறேன், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, ஆடாம..அசையாம் நிக்குறியே.. வெக்கமாயில்ல?

சரி விடு என்ன பிரச்னை இப்போ? என் கோபம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.

இது தான் பிரச்னையே.. எதாவது வாக்குவாதம் வந்தா, உடனே பம்முறியே ஏன்?

ஏன்னா ( ”தேவா என் ஃபிரண்ட்” ஸ்டைலில் படிக்கவும்) நீ என் காதலி.. நீ தோக்குறது எனக்கு பிடிக்காது செல்லம்.

மண்ணாங்கட்டி.. நல்லா வருது வாயில... நான் கோபத்துல இருக்கும் போது கொஞ்சல்ஸ் பண்ணா கெட்ட கோபம் வரும். ஆமா

சரி.. சரி.. கோவிச்சுக்காத செல்லம்..

மறுபடியும் பாருடா சேட்டைய.... எனக்கு சுத்தமா பிடிக்கல,, என்னையே நீ சுத்தி வர்றது.. நான் நினைக்கிறது (கேக்குறதுக்கு முன்னாடியே)  வாங்கி குடுக்கிறது... கேக்குற கேள்விக்கெல்லாம் கேனையன் மாதிரி தெளிவா/நேரடியா பதில் சொல்றது..மொத்ததுல நான் எதிர்பாத்த மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ஒரு த்ரில் இல்ல.. சேலஞ்ச் இல்ல.. சரி விடு.. இவ்வளவு ஏன் ஒரு பொய்யாவது உருப்படியா சொல்ல தெரியுதா உனக்கு.?You are such a SQUARE. I dont like this and you.

Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh (always)

நான் இவ்ளோ சீரியஸா பேசுறேன்,  நீ என்னடானா எதுகை மோனை வச்சு கவுஜ சொல்லி காமெடி பண்ற.

நீ தானே சேலஞ்ச் பண்ண சொன்ன

நீ சொல்லி திருந்திற ஜென்மம் இல்லடா..இப்படி கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேரு..காதல் இல்லாடா.. .அய்யோ..படுத்துறானே

கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.

அய்யோ ராமா... இந்த கொடுமைய நான் எங்க கொண்டு போய் தொலப்பேன்??. அய்யோ என்ன விட்டுடேன்... என்னை விட்டுடு.. ஒனக்கும் எனக்கும் ஒத்து வராது.. புரிஞ்சுக்கோ..

நீ சொன்னா சரிதான்.. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்..

(கிழிஞ்சது போ).. கொஞ்ச நாளைக்கு மெயில் SMS அனுப்பி தொல்ல பண்ணாம இரு.  Good Bye..

பாத்தியா... நம்ம பேசி முடிக்கும் போது, கோபமா இருந்தாலும் Good Bye சொல்லாம, Bye சொல்லுவியே..

அய்யோ என் அறிவு கொழுந்தே... ஆள விடு சாமீ.. நான் வர்ரேன்....ஸ்ஸ்ஸ்ஸ் போயிட்டு வர்ரேன்( இல்லேன்னா இத வச்சு ஒரு ஜிகா பைட்டுக்கு டயலாக் பேசுவான்)

வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு.. ச்சே..இனிமேல் இறங்கி போகவே கூடாது. ஏறி தான் போகனும் ( இப்போ திருப்பதியாயிட்டான்)

கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, மம்மி வச்ச பேர மாத்தி... (நன்றி: சுந்தரபுருஷன்)  புதுசா ஒரு ஐ.டி கிரியேட் பண்ணி, ORKUT, FRENSTER,  FACEBOOK, HI5, BLOGGER, WORDPRESS என எல்லாத்துலேயும் ஒரு வெட்டி புரஃபைல் உருவாக்கி.. ஒரு நாயகன் உதயமாகிறான் ( தாவணிகனவுகள் )  பாடலின் பேக்ரவுண்ட் மியுசிக் இல்லாமல் புது நாயகனாக பருவமாறி, உருவமாறி.. ஒரு கிளியை பிடிச்சுட்டான்..

நீங்க ரொம்ப கோபபடுறீங்க...

அது என் கூட பொறந்தது.. சும்மா சும்மா கேள்வி கேட்டு தொன தொனக்காத சரியா.. நேத்து நான் வர சொன்னே நீ ஏன் வரல?.. ஒனக்கெல்லாம் ரொம்பதாண்டி திமிரு...என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுல??

உங்களை தான் நெனச்சுகிட்டு இருந்தேன்.. (லைலா மாதிரி லூசாட்டம் சிரிச்சுகிட்டே)

நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. ஏண்டி வரலேன்னு கேட்டா.. பைத்தியாமாதிரி சிரிக்காம பதில் சொல்லுடி.

அத சொல்ல தான் போன் பண்ணேன்.. நேத்து தாய்மாமா பையனுக்கு பொண்ணு பொறந்துச்சு.. அதான் வர முடியல ஹாஸ்பிடல்ல இருந்ததுனால... போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..ஸாரி பா.

(ஓ.. நீயும் வரலியா.... ).. பையங்கிற.. பொண்ணுங்கிற... என்னடி உளர்ற??

யேய்.. இல்லபா.. தாயமாமா இருக்காருல.. அவரோட பையனுக்கு குழந்தை பொறந்திருக்கு. அது பொண்ணு’னு சொல்ல வந்தேன்.

அய்யோ.. உன் கோனார் நோட்ஸ் உரையெல்லாம்.. கொஞ்சம் கம்மி பண்ணுமா.. நாளைக்காவது நான் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ல வந்துடு.. லேட் பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா, சொல்லிட்டேன்

மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.

பி.கு 1: ”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்” என்பன போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றன :)

பி.கு 2: இது என்னுடைய 50வது பதிவு 

தெரியுமா சேதி?.. 2/16/2009

போன வாரம் அடிச்ச புயலே இன்னும் அடங்கல அதுக்குள்ள இன்னொரு புயல். நம்மளும் எத்தனை இடியைத்தான் தாங்குறது. இப்போ என்ன ஆச்சா?, நல்ல கேக்குறாங்கய்யா டீட்டெய்லு.  போன சேதியாவது நிச்சயதார்த்தம் பத்தி, இந்த சேதி அதுக்கு மேல, கல்யாணம் பத்தி, அதுவும் ரகசியம் கல்யாணம், அதுவும் வெல் பிளான்டு ரகசிய கல்யாணம். யாருக்கும் தெரிவிக்காம கரெக்டா “காதலர் தினம்” அன்று கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வேற யாரு, நம்ம மெக்ஸிகோ புயல் தான். “Frida" புகழ் “Salma Hayek” தான் அவர்.

அதே அமெரிக்க நண்பர் தான் மறுபடியும் மெயில் அனுப்பி தகவல் தந்தார். என்னத்த சொல்றது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? இவரை பற்றி தெரிந்து கொண்டதே ஒரு சுவாரஸ்யமான விசயம் தான். வழக்கம் போல படங்களை பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது, அந்த அமெரிக்க நண்பரின் பேச்சு சல்மாவின் பக்கம் திரும்பியது. நான் யாரு சல்மா?’னு தெரியாம கேட்டு புட்டேன். மனுசன் என்ன ஒரு புள்ள பூச்சிய பாக்குற் மாதிரி பாத்துட்டு, வாழ்க்கையில் பாதிய இழந்துட்ட, மிச்சத்த இழக்கிறதுக்கு முன்னாடி போய் “Frida"  படம் பாருன்னு அறிவுறுத்தி அனுப்பிச்சார். 

படம் பார்த்த ரெண்டு மூனு நாளுக்கு எங்க பாத்தாலும் சல்மா தான் என் கண்ணுக்கு தெரிந்தார். படத்த ஒரு ரெண்டு மூனு தடவ பாத்து DVDஐ தேய் தேய்னு தேச்சுபுட்டேன். ஸ்பானிஷ் வாசனை கலந்த வசனத்திலும்,ஸல்ஸா நடனத்திலும், நடிப்பிலும் பின்னி பெடல் எடுத்திருந்தா,  இந்த படம் ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது. இவரே நடித்து தயாரித்துமிருந்தார். இந்த படத்தில் நடித்ததறகாக சிறந்த நடிகைக்கான ஆஸகார் விருதுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார்.

அதுக்கு அப்புற்ம் அவரோட நடிப்பில் மிரண்டு போய்,  தொடர்ந்து அவரது படங்களை தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தேன் Desperado , Once Upon a Time in Mexico (இது Desperado வின் இரண்டாம் பாகம்). இந்த இரண்டு படங்களும் டிபிக்கல் தமிழ் படம் மாதிரி தான், நாயகன் Antonio Banderas ( The Mask of Zorro படத்தின் கதாநாயாகன்), கதையில் நாயகிக்கு முக்கியத்துவமில்லாத போதும், சதையில் இருந்தது.  

அடுத்தபடியாக After the Sunset , Lonely Hearts - உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட இந்த படத்தில் வில்லிவேடம் இவருக்கு, கொடூரத்தனத்தை இந்த அளவுக்கு கேசுவலாக நடித்து பார்த்ததில்ல. அருமையான நடிப்பு. 

அடுத்து Bandidas -இந்த படத்தை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி இன்னொரு சைடு ரீல் ஒன்னு ஓட்டியாகனும். திருப்பதி’னா லட்டு , திருப்பாசேத்தி’னா அருவா, மதுரை’னா வெட்டு’ இதெல்லாம் எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி Salma பத்தி பேசுனா,Penélope Cruz பத்தி பேசியே ஆகணும், இல்லேன்னா தெய்வகுத்தம் ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல. இவுக ரெண்டு பேரும் நெருங்கிய தோழியர், மலேசியாவின் இரட்டை கோபுரம் மாதிரி ( அமெரிக்கவுல இருந்தததான் இடிச்சுபுட்டாக’ல).

இவர் ஸ்பெயினில் பிறந்தவர், ரெண்டு பேருக்கும் ஸ்பானிஷ்தான் தாய்மொழி. இதை தவிர பல ஒற்றுமைகள் உண்டு இவர்களுக்கிடையே. Volver தான் நான் பார்த்த முதல் படம், படம் செம சூப்பர், மூன்று தலைமுறை பெண்கள் சம்பந்தபட்ட கதை. கதை சொல்ல பட்ட விதம் மிக மிக அருமையாக இருந்தது, முழுக்க முழுக்க பெண்களே நடித்திருந்த இந்த படத்தில் கடைசி அரைமணி நேரத்தில் நடக்கும் மொத்த கதை சுருக்கம் அருமை. இதே இயக்குனரின் (Pedro Almodóvar) முந்தைய படமான ¡Átame!  வும் பார்த்தேன், ஆனால் அது Volver  ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

இவரது நடிப்பில் மயங்கி ( உண்மை தானுங்க) , இவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது Bandidas. இவுக ரெண்டு பேரும் நடித்த சும்மா காமெடிப்படம், ஆனா நான் ஒன்ன எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். மத்தபடி படம் , இன்னொரு தமிழ் படம் மாதிரி தான் இருந்தது.

Bandidas கொஞ்சம் என்னை ஏமாற்றினாலும் அதற்கு அடுத்து நான் பார்த்த Captain Corelli's Mandolin, என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செயதது. இந்த படம் கிட்டதட்ட “இயற்கை” படம் மாதிரி தான். படம் முழுக்க தன்னுடைய நடிப்பை அள்ளி இரைச்சிருந்தார் Penélope .


இன்னொரு சேதி தெரியுமா? இன்னொரு இளஞ்சிட்டு (அப்டி தான் இதுவரைக்கு நெனச்சு கிட்டு இருந்தேன்) Feb 11ந்தேதி தன்னோட பிறந்த நாளை கொண்டாடிச்சு. இவர் நடித்த Friends என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் மிக பிரபலம். சில குடும்ப பிரச்னையால் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்த புயல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தனது கலைப்பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்திலிருக்கும் இவரையும், இவரது வயதையும் கண்டு பிடித்து தருவோருக்கு, இவர் கையெழுத்திடாத போட்டோ ஒன்று, ஒரு டாலர் வீதம் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கபடும்.

பி.கு : உருப்படியா இன்னும் வேகண்டா இருக்கிறது என்னோட தலைவி மட்டும் தான். (Touchwood பண்ணிக்கிறேன் )

நான் சந்திக்க விரும்பும் நபர் 2/15/2009

பில்கேட்ஸின் தொழில் வித்தைகளையும், வெற்றியையும் விலாவரியாக விவரிக்கும் நம்மில் பெரும்பாலோனோர், தனது பக்கத்து தெருவிலோ, ஊரிலோ அதே போன்றொரு சாதனையை நிகழ்த்தி வருபர்களை கண்டு கொள்வதே இல்லை என்பது கசப்பான உண்மை மேலும் “குண்டூசி விக்கிரவெனல்லாம் தொழிலதிபராம்” என்று கவுண்டமணி ஸ்டைலில் கிண்டல் வேறு. 

கரகாட்டகாரன் படத்தில் தவக்களை ”பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்” என்று கூவிக்கொண்டே அந்த தகர டப்பா வண்டியை சுற்றி வரும் நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. கிராமத்திலிப்பவர்கள் இதுபோன்ற ஒரு வியாபாரியை வாரத்தில் ஒரு நாளாவது சந்திப்பர். எனக்கு இன்னைக்கு வரையிலும் அந்த பழைய பொருட்களை என்ன செய்வார்கள்? என்று தெரியாது, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கேட்கவேண்டும். 

அதே போல மதுரை அலங்காநல்லூரை ஒட்டியுள்ள பாலமேடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இதே தொழிலை செய்து வந்தனர். பாலமேடு அலங்காநல்லூரை ஒட்டியிருந்தாலும், முல்லை பெரியாறு கால்வாய்க்கு வடக்கே (மேலே) இருப்பதால், பெரியாறு கால்வாயால் எந்த பயனும் இல்லை. சாத்தையாறு அணை அருகில் இருந்தாலும் அதனாலும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யகூடிய வானம் பார்த்த பூமி.

இப்படி பட்ட சூழலில் இந்த இன மக்கள் 90ன் ஆரம்பத்தில் ”பேரீச்ம்பழம் விற்பது போன்ற தொழிலை விட்டு” சிறிய அளவில் பால்பண்ணை தொழிலை ஆரம்பித்தனர். முதலில் ஒரு சிறு அளவில் தொடங்கப்பட்ட இந்த பால்பண்ணை கூட்டுறவாக விரிவடைந்து பாலமேடு அல்லாது அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களுக்கும் பால் விநியோகம் செய்யபட்டது. அதனின் அடுத்த கட்டமாக கூட்டுறவு பால்பண்ணை பக்கத்து ஊர்களுக்கும் விரிவடைந்தது. 2000ம் வாக்கில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி, ஒரு திரையரங்கு மற்றும் மதுரை மாநகரின் பால் தேவையையே (50% மேலிருக்கும் என்பது என் யூகம்) நிறைவு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.  அரசரடி, குரு தியேட்டர் வழியாக பயணம் செய்பவர்கள் “பத்திரகாளியம்மன் பால்பண்ணை” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை கண்டிப்பாக பார்த்திருக்க முடியும். இது ஒரு அசுர வளர்ச்சியே.

இந்த தொழில் உத்தியை பற்றியோ, வெற்றியை பற்றியோ இதுவரை கட்டுரை எதுவும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை.

தூரத்தில் இருக்கும் நிலவை பார்த்து ஏங்கும்/வர்ணிக்கும் நாம் பக்கத்திலிருக்கும் அகல் விளக்கின் அருமையை உணராமல் இருப்பது வருந்ததக்க விச்யமே. அன்னை தெரசாவை பற்றி பக்கம் கட்டுரை எழுத தெரியும் ஆனா தன் சொந்த தாயாரின் விருப்பு/வெறுப்புகளை பற்றி அற்வே தெரியாது. இதே போன்று பல உதாரணங்களை சொல்லலாம். 

ஜனவரி மாதம் முதல் வாரம் எனது பிறந்த நாளை முன்னிட்டு “Slumdog Millionaire" படம் பார்த்துவிட்டு, என்னுடைய சக ஊழியரின் வீட்டுக்கு போய் விடுமுறையை களித்தேன். அங்கே ”தென்றல்” என்றொரு இதழ் சாப்பாடு மேஜையின் மேல் இருந்தது, வழக்கம் போல சாப்பாடை மேய்வதை விட்டு புத்தகத்தை மேய, அதில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பேட்டி இருந்தது எனது ஆர்வத்தை இன்னும் அதிகபடுத்தியது, சக பதிவராச்சே. இருந்தாலும் சூழ்நிலை கருதி என்னால் நுனிப்புல் மட்டுமே மேய முடிந்தது. 

நான் விரும்பி படிக்கும் வலைதளங்கள் பல இருந்தாலும் எனக்கு மிகவும் கவர்ந்த வலைப்பதிவு தலைப்புகள்/பெயர்கள் மூன்றே மூன்று. 

1. எண்ணங்கள் ( பத்ரி சேஷாத்ரி ) 
2. தனி
மையின் இசை (அய்யனார்) 
3. பிச்சைபாத்திரம் (சுரேஷ்கண்ணன்)

எண்ணங்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களை விவரிக்கும் பத்ரியை, எனக்கு ஒரு சக பதிவராகத்தான் தெரியும் இந்த தென்றல் இதழின் பேட்டியை படிப்பதற்கு முன். 

அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டில் கிழக்குபதிப்பகத்தை தொடங்கி அதை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு முன் cricinfo.com என்ற தளத்தையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார்.

எதோ ஒரு படத்தில் விவேக் இரட்டை வேடத்தில் வருவார், அதில் தமிழை வளர்க்க எளிமையான வழியை மிக அழகாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருபபார், “தமிழை வளக்க ரொம்ப எல்லாம் கஷ்டபட வேண்டாம்டா,  ஏட்டுல இருக்கிற தமிழை கம்ப்யூட்டர்ல ஏத்துடா, அதுக்கப்புறம் அதுவா வளந்துடும்” என்று பொருள்படும்படி ஒரு நகைச்சுவை காட்சி. நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், ஆழமான கருத்து அது. 

அதே கருத்தை செயலில் காட்டி இன்று பெரும்பாலான (ஆதாரம்: இட்லிவடை) பதிவர்கள் தமிழில் பதிவிட (இந்த பதிவு உட்பட)  NHM Writer மென்பொருளை உருவாக்கி ராமருக்கு அணில் உதவியது போல தமிழ் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதொரு காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார். ஏட்டில்/மனதில் மட்டுமே இருந்த தமிழ் இன்று இணையத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு இவர் மட்டுமே ஒரு காரணம் என்று சொல்லவில்லை இவ்ரும் ஒரு முக்கிய காரணம்.

பேட்டி முழுவதும் வியாபித்திருந்த, தமிழின் மீதும் தமிழ் படைப்புகளின் மீதும் இவர் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையுடைய கருத்துகளை கண்டு மெய்சிலிர்த்து போனேன்.  நசிந்து போய் கிடந்த பதிப்பகத்துறையில் கால்பதித்து வெற்றி பெற்றதோடு,  தமிழில் பல்துறைகளிலும் பல படைப்புகள் உருவாக முனைப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். நிறைய இளம் எழுத்தாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். உருவாக்க காத்துக் கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த புத்தகக்கண்காட்சியின் வெற்றியில் இவரின் பங்கும் முக்கியமானது என்றால் அது மிகையல்ல.

பெயருக்கு முன்னே ஒரு பட்டம் இல்லாமல்,  தமிழ் என் மூச்சு, என் பேச்சு என வெற்று கூச்சல் எதுவுமில்லாமல், தாய் மொழியான தமிழ்வளர்ச்சிக்கு மட்டுமன்றி அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த சில நல்லகாரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.