
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
வாமா மின்னல்....!!! | 3/27/2009 |
இளைஞிகளின் விடிவெள்ளி, எதிர்கால மலேசியா, ஜிகினாஸ்ரீயின் அகில உலக தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக இந்த பதிவை தொடர்பாதிவாக சமர்ப்பிப்பது ப்ளேடு ரவி, துப்பாக்கி கணேசன், ஜிகினா ஜோசப், ஜிகினாவின் புகழ் எங்கள் உயிர் என எல்லாம் கூவலாம் தான். அப்புறம் குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா அதுனால சிம்பிளா, அன்ரீடபிள் மைண்ட் விஜியின் தொடர்பதிவு தான் இது என முழங்கி எனது முன்னுரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.
மாயி படத்துல”வரைஞ்ச மீசை” வடிவேலு பொண்ணு பாக்கபோகும் போது சொல்ற ”வாமா மின்னல்” டயலாக் ரொம்ப பாப்புலரா இருந்தாலும்.. அதுக்கப்புறமா வரும் “சாய்ச்சுப்புட்ட மச்சா” வசனத்தை ரொம்ப சாதாரணமா பயன்படுத்திருக்கோம், எப்போ எப்படி என்பதெல்லாம் உங்க யூகத்துக்கே விட்டுடுறேன்.
இண்டர்வியூக்கு போகும்போது பயபுள்ளைக நமக்கு எது தெரியாதோ அதுமட்டும் தான் வேணும்னு ஒத்த காலுல அடம்பிடிப்பானுவ, இண்டர்வியூ முடிச்சுட்டு ஃபிரண்ஸோட அரட்டை அடிக்கும்போது.. அவிங்களுக்கு “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம், பந்தம் எல்லாம் வேணாமாம்”னு வேலை கிடைக்காத வருத்ததை கூட செம ஜாலியா கொண்டாடி இருக்கோம். அதை தொடர்ந்து கவுண்டர் “கூட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் குடுக்கிற்தில்ல” என போட்டுத் தாக்கும் ஒன்லைன் செம அருமை.
“என் இனிய தமிழ் மக்களே, பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்”
போய்யா நீயும் உன் பாசமும்.. இப்ப்டி சொல்லிட்டு பொண்ண என்னை (கவனிக்க ”என்னை” ) மாதிரி ஒரு பச்சை தமிழனுக்கு குடுப்பேனு பாத்தா, இப்புடி ஏமாத்தி புட்டியே.. ”ஜனனி.. ஜனனி ஜனத்தால் இனி நீ”
ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
அடேய், நான் என்ன Lie Detector’a ?
நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி
அப்ப ”ஒரு தடவை”ங்கிறத எப்படி தான்ய சொல்லுவ?
சபாஷ் சரியான போட்டி (வஞ்சிகோட்டை வாலிபன், பி.எஸ் வீரப்பா)
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கிபுடுறாங்களே (படம்பேரும், நடிகர் பேரும் கண்டிப்பா சொல்லனுமா என்ன)
ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்
அப்புறம் ஏம்பா, மாமியா-மருமக சண்டை எல்லாம் வருது, பெண்மக்களே சொல்லுங்க ப்ளீஸ்.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?
ஏய்... நான் தனி ஆளு இல்ல
ஆமா. அவரு கூட நாங்க எல்லாம் இருக்கோம். (கலாய்க்க்லாம்னு தான் பாத்தேன், என்ன இருந்தாலும் நானும் ஒரு காலத்துல அவரோட ரசிகர், அந்த பழைய பாசம் என்னை குறுக்க ஒரு அணை கட்டி தடுக்குது J )
கல்யாண வாழ்க்கை | 3/20/2009 |


வனதேவன் - மரம் தங்கசாமி! | 3/18/2009 |
மரங்கள் நடக்கின்றன
Thanks: தளவாய் சுந்தரம் ; ராஜகுமார் மற்றும் மடப்பய மவன் உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!
தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...
“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.
அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.
மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.
ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.
திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.
இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.
இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.
எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.
நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.
எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.
பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.
விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.
மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.
நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.
உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.
செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”
விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”
(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில்நின்றுவிட்டது.)
நன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.
Mamma Mia! | 3/07/2009 |

கதை ரொம்ப சிம்பிள், பெண் தன்னோட திருமண நாளுக்கு தன்னோட அப்பா இருந்தா நல்ல இருக்கும்னு யோசிச்சு, அம்மாவின் டைரியில் ஒரு புலனாய் நடத்தி, ஒரு மூனு பேருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்புறா. ஒருத்தருக்கு தானே அனுப்பனும், ஏன்? ஏன்னு.. மண்டைய குடைய வேணாம்.. ஏன்னா அந்த மூனு பேர்ல ஒருத்தர் தான் அவளோட அப்பா, ஆனா அது யாருனு தெரியாதுங்கிறதுனால, போனா போகுதுனு மூனு பேரையும் திருமணத்திற்கு அழைக்கிறாள் அம்மாவுக்கு தெரியாமலே. இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு. உண்மையான அப்பா யாருனு கண்டு பிடிச்சாங்களா? கல்யாணம் நடந்துச்சா போன்ற விபரங்களை ரொம்பவும் நகத்த கடிக்க வைக்காம, அதிர்ச்சி அடைய வைக்காம, அழகா கவிதையா சொல்லி இருக்காங்க.
இது ஏற்கனவே மேடை நாடகமாக பல வருடங்களாக, பல்வேறு நாடுகளில் சக்கை போடு போடப்ட்ட கதையை தான் திரைப்படமாக்கியுள்ளனர், எந்தவித சிதைவும் இல்லாமல்
எனக்கு நீல நிறம்ன ரொம்ப பிடிக்கும் என்னோட வலையின் டெம்ப்ளேட்ட பாத்தாலே தெரியும். படம் முழுவதும் கடற்கரைத்தீவின் நடப்பதால், நீல நிறம் ஆக்கிரமிக்கிறது..(அய்யோ...அய்யோ.. நீல படம் நீல வண்ணத்துல இருக்கும்னு நெனச்சா நான் என்ன செய்றது ). கடற்கரை தொடர்பான காட்சிகள் அனைத்தும் Laguna Beach, Californiaவில் எடுத்துள்ளனர்.. வெள்ளை மணலும் நீலநிற கடல்நீரும் என்னா அழகு! அருமையாக காட்சிபடுத்தபட்டுள்ளது அத்துனை இயறகையழகும். மெரீல் ஸ்ட்ரைப் பல இடங்களில் நீல நிற உடை அணிந்து அம்சமா வர்றார்..ம்ம்.. வயசானாலும்.. அப்டியா தான் இருக்காங்க அம்மணி புதுப்பொலிவுடன்.

ஹாலிவுட் பாலா சொன்ன இசை தொடர்பான படங்களில் Enchanted மட்டும் பார்த்துள்ளேன்.. செம க்யூட்டான படம். அடுத்து நான் ரசித்து பார்த்தது CHICAGO, ரிச்சர்டு கியர் மற்றும் கேத்தரீன் ஸீட்டா ஜோன் நடித்த கிரைம் கலந்த இசைபடம். ஒரு ஆல்பத்துல பெயான்ஸிவை (Beyoncé Knowles) பார்த்துட்டு, ஆர்வக்கோளாரில் The Fighting Temptations, Dreamgirls இந்த ரெண்டு படத்தையும் எடுத்து பார்த்த எனக்கு, ரெண்டு படத்தையும் முழுசா முடிக்க முடியவில்ல.. ரொம்ப கடியா இருந்துச்சு.. ஆனா அந்த மாதிரி எந்த சோதனையையும் இந்த படம் தரவில்லை.
படத்தில் இசையை எவ்வளவுக்கெவ்வளவு முக்கியத்துவமா இருந்தததோ அதே அளவுக்கு முக்கியத்துவமா இருந்தது மெரீல் ஸ்ட்ரைப்பின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும். இந்த படத்தை பத்தி பேசிட்டு இவரை பத்தி பேசாம விட்டா அந்த பெண்(தேவதை) பாவம் என்ன சும்மா விடாது.
இந்த பதிவ எழுதுறக்கு சற்று முன்னே நான் பார்த்த படம் The Devil Wears Prada, படத்தை தேர்ந்தெடுத்தது என்னவோ Anne hathawayக்கு தான், ஆனா மெரீல் ஸ்ட்ரைப் அம்சமா எல்லாரையும் ஓவர்டேக் பண்ணியிருப்பார். மிடுக்கு, திமிர் கலந்த தோரனையில் அவர் சொல்லும் அந்த ஒருவரி வசனம் ”That’s All” அருமை. இந்த படத்திற்காகவும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
ரெண்டு வாரத்திற்கு முன்னே நான் பார்த்த, Prime என்றொரு படம் உமாவுடன் நடித்திருந்தார். மெரீல் ஸ்ட்ரைப், உமாவின் மனோதத்துவ ஆலோசகர். உமா, மெரீல் ஸ்ட்ரைப் மகனின் காதலி. மெரீல் ஸ்ட்ரைப் மகன், உமாவை விட பாதி வயதுக்கு சற்றே மூத்தவர். இந்த விசயம் தெரியவர மெரீல் ஸ்ட்ரைப் காட்டும் உணர்ச்சிகள் அபாரம், அதுவும் உமா அவருடைய மகனின் அந்தரங்கத்தை விவரிக்க, மெரீல் ஸ்ட்ரைப் நெளிவாரே பாக்கணும்.. அப்பப்பப்பா.. நடிகையர் திலகம்.
இவர் படங்களில் நான் முதலில் பார்த்தது Out of Africa , ஆஸ்காரை மயிரிழையில் Geraldine Page விடம் தவற விட்டிருந்திருக்கிறார் இந்த படத்திற்காக.
இவரை பத்தி பாலா ஏற்கனவே அதிகமா சொல்லிட்டார் இருந்தாலும் ஒன்னே ஒன்னு சொல்லிட்டு பதிவ முடிக்கிறேன் ( அரசியல் வாதி ரேஞ்சுக்குல பேசுறான் )
எப்படி தான் அழக மெயிண்டெயின் பண்றார்னு தெரியல, இந்தியாவில் இதே மாதிரி அழகை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஹேமா மாலினி மட்டுமே. நம்ம ரஜினி கமல் எல்லாம் தங்க பேத்திமார் த்ரிஷா, ஸ்ரேயானு கொஞ்ச வயசு பொன்னுங்க கிட்ட ஜோடி போட்டு (உனக்கேன்பா வயித்தெரிச்சல்.. பல்லு இருக்கவன் பக்கோடா திங்கிறான்.. ) யூத்தை காண்பிக்கிற மாதிரி இல்லாம, தன்னை விட நாலு வயது குறைந்த பியர்ஸ் பிராஸ்னனுக்கு ஜோடியா போட்டி போட்டு அசத்தியிருக்கிற ஒன்னே போதுமே அவரோட அழகையும் இளமையும் சொல்ல.
பி.கு : பாலா இந்த பதிவு, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் பொறுத்தருளவும்
மீ த ஃபர்ஸ்ட்...?! | 3/06/2009 |
சைதாப்பேட்டை ( பொண்ணுங்க சைதாபேட்’னு படிக்கவும்) பேருந்து நிறுத்ததில் என்ன மாதிரி ஒரு பதிவர் ( என்னையே ”நெனச்சு”கிட்டு படிக்கிறவங்க படிக்கலாம்.. மீக்கு நோ பிராப்ளம்), குரோம்பேட்டை (மறுபடியும் சொல்லணுமா என்ன?) போறதுக்கு காத்திருக்குபோது.
அந்த வழியே ஒரு இளம்பச்சை வர்ணத்தில் ஒரு பேருந்து, தாழ்தள பேருந்தாம், பேருந்தின் வெளித்தோற்றத்தை பாத்துட்டு வேகமா ஓடி போய் ஏறி, இடம் இருந்தாலும் உக்காரமா நின்னுகிட்டு (நம்மாளு தான் அரைபாடி மண் லாரியிலேயே கம்பிய பிடிக்காம நிக்கிறவராச்சே) ஒரு நோட்டம், யாரு யாரெல்லாம் இருக்காங்கனு ( குசலம் விசாரிக்கிற மாதிரி) பாத்துகிட்டு இருக்கும் போது,
நடத்துனர்: ”மொத மொத ஏறுன தம்பி, எங்க போகணும்னு சொல்லுங்க?” இவர்தான் மீ த ஃபர்ஸ்ட் போடுபவர்னு தெரியும் தானே
பதிவர்: இந்த பேருந்து எங்க போகுது?
நடத்துனர்: சரி தான், (போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?) போர்ட பாக்காமலே ஏறிட்டியா?
பதிவர் : எனக்கு டெம்ப்ளேட் பிடிச்சு இருந்துச்சா, அதான் கப்னு பிடிச்சு ஏறிட்டேன்.. கூட்டத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல. காத்தோட்டமாவும் இருக்கு. புதுவண்டிங்கிறதுனாலயா?
நடத்துனர்: மறுபடியும் பாருடா, சம்பந்தா சம்பந்தமில்லா பேசுறத, இந்த வண்டி பூந்தமல்லி போகுது. நீ எங்க போகணும்?
பதிவர்: அப்போ, இந்த வண்டி குரோம்பேட்டை போகாதா?.. ம்ம்ம். சரி.. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா? நான் ஏறுன இடத்துக்கே ஒரு டிக்கெட் குடுஙக
நடத்துனர்: ங்கொய்யால, டேய்... இதெல்லாம் ஒனக்கு ஓவரா தெரியல..அப்புறம் எதுக்குடா பூந்தமல்லி வண்டியில ஏறுன.... இதுல பஞ்ச் வேற.
பதிவர்: சார். ஏறுனது ஏறிட்டேன்.. இங்க இருந்து பூந்தமல்லிக்கு ஒரு டிக்கெட் பூந்தமல்லியிலிருந்து இங்க ஒரு டிக்கெட் குடுங்க எல்லாம் சரியாகிடும். நானும் நாலு ஸ்டாப்ல ஏறி, இறங்கி என்னோட அட்டெண்டஸ் போட்டுக்குவேன். (சொல்லிகிட்டே பக்கத்திலிருப்பவர்களிடம் நலம் விசாரிக்க ஆரம்பிக்கிறார்)
நடத்துனர்: நிஜமாவே நீ மொக்க பார்ட்டி தான் போல..
பதிவர்: ஆமா சார், பாருங்க ஒரே நேரத்துல ”போகாத ஊருக்கு” போக வர ரெண்டு டிக்கெட் எடுத்து இருக்கேன்.அதுனால
நடத்துனர்: அதனால...??
பதிவர்: பெரிசா ஒன்னும் இல்ல சார், நான் பதிவு போடும்போது அப்பப்போ
நடத்துனர்: அப்பப்போ...??
பதிவர்: அப்பப்போ இதே/என்னை மாதிரி, சம்பந்தா சம்பந்தமில்லாம வந்து கமெண்டிட்டு போங்க.. ச்சே இன்னிக்குனு பாருங்க 37 பஸ்ஸ் தான் ஏற முடிஞ்சுது. இன்னும் ஒரு மூனே மூனு பஸ் தான், கிடைச்சா ரவுண்டா 40 ஆகிடும். எனக்கும் ஒரு ரவுண்டு அடிச்சோம்னு நிம்மதியா இருக்கும். அப்போ நான் வரட்டா..

நாலஞ்சு மணி நேரம் கழித்து, எல்லா வண்டியிலும் ஏறி முடித்த பிறகு வேறு வழியே இல்லாம ஒரு ஓட்டை வண்டியில் முன் படியில் ஏறி தனது “பயணத்தை தொடர”..
நடத்துனர்: யாருப்ப ஃப்ரண்ட்ல ஏறுனது? டிக்கெட் வாங்கிட்டு போ..
பதிவர்: சார்.. இந்த பஸ்ஸ்...
நடத்துனர் : டேய்.. (அதிர்ச்சியுடன்) நீயா.. நீ இன்னும் உன் ஊருக்கு போகல????.. (அழாத குறையா) இப்போ இந்த பஸ்ஸ் டெப்போவுக்கு போகுதுடா..
பதிவர்: ஹிஹி...பரவாயில்ல இல்ல சார்.. இன்னும் ஒரு 7 தான் சார், செஞ்சுரிக்கு... எவ்வள....
(பேச்சை/மொக்கையை முடிப்பதற்குள்)சொத்தென்று மயங்கி சரிந்து விழுகிறார் நடத்துனர்.
அதீத சந்தோசத்துடன் விரைகிறார் பதிவர். (அடுத்த பதிவுக்கு தீனி கிடச்சாச்சுல)
புழுதி புயலுக்குள் ஒரு யுத்தம் | 3/04/2009 |
|
புதுவருசத்துக்கு பொல்லாதவன் பாத்தது தான் அதுக்கப்புறம் பாத்தது இது தான். பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் வரிசையில் அடுத்து ஒரு மண்வாசனை கலந்த படம் வெண்ணிலா கபடி (கபாடி) குழு. படமும் அதே வரிசையில் வைக்ககூடிய தரம்.
ஆரம்ப பேருந்து பயணத்தில் தொடங்குகிற பெயர் சொல்லாத/தெரியாத கதாநாயகி (சரண்யா மோகன்) பச்சை கலர் தாவணியில் அம்சமாக அறிமுகம் ஆகிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அதே புன்சிரிப்பு உச்சிவரை நேர் வகிடெடுத்த தலையுடன் படம் முழுக்க வந்து பல்லாங்குழி ஆடுறா (மனசுல தான்). பேருந்தில் முதலில் பிச்சிப்பூ வச்சு வர்ற அம்மணி, பின் மல்லிகையயும் சேர்த்து வச்சு, கடைசியில் பிச்சியை விட்டுட்டு மல்லிகையையும் மட்டும் வச்சுகிட்டு செதுக்கி வச்ச சிலை மாதிரி அம்சமா இருக்கா, திருவிழா முடிந்து போகும் போது வெள்ளை தாவணியில் தேவதை போல ஜொலிக்கிறார் ( இருங்க துண்டை எடுத்துட்டு வர்றேன்).
பச்சை கலர்
(இள)மஞ்சள்
வெள்ளை
கருப்பு
அடர்/இளம் கத்திரி ஊதா பூ
என கலர் கலரா தாவணியில் வந்து, ஒரே தாவணி சாம்ராஜ்யம் நடத்தியிருக்கா, நல்லாவும் பொருந்தியிருந்தது (துண்டு பத்தாது நினைக்கிறேன்.. பெட்ஷீட் வேணும் போல).

”பட படவென பறந்திட” பாட்டுல நீல கலரில் தாவணியும் அதே கலரில் பாவடையும் அணிந்து சும்மா செம க்யூட்டா இருந்தது. அதே பாட்டில் வரும்
விரல் பிடித்து நடக்கும் போது
வலிகள் யாவும் மறைக்கிறதே
வரிகள் அருமை.
படத்திலிருந்த ”நச்” வசனங்களில் சில
“எடுபட்ட பய”,
“ஒரு பாயிண்ட்ல தோத்துட்டோம்”,
“குருட்டு கோழி தவிட்டு முழுங்கிட்டு போன மாதிரி”
”நமக்கு ஆடியன்ஸ் இருக்காங்கண்ணே பதினோரு பேரு கைதட்டுனாங்கண்ணெ”
இடைவேளைக் காட்சி,
ஐயப்பன் கபடியாட, யானை சீரியல் பல்பை காண்பிப்பது
ஊரே திருவிழாவில் மூழ்கி இருக்க, யாருமே இல்லாத ( கெழடுகள் மட்டும் ) தெருவில் காதலை பாடலில் ஆரம்பித்தது நன்றாக இருந்தது, ஏன்னா அதுதான் பல காதல் அரும்ப ரொம்ப சரியான தருணம் – இயக்குநரின் கிராம உணர்வு நல்லாவே தெரிந்தது அந்த காட்சியில், அதை தொடர்ந்த அந்த வரிகள் செம ஷார்ப் அண்ட் டச்சிங்
மொதல்ல பாத்தது கனவுல, நான்
முழிச்சு பாத்தது தெருவுல
நெருங்கி பாத்தது நெனப்புல, நான்
தொலஞ்சு போனத சொல்ல தெரியல
திருவிழாவில் கோலப்போட்டி மிஸ்ஸிங், கதாநாயகி உள்ளூர் இல்லை என்பதலா? உண்மையில் முட்டி உடைக்கும் போட்டியின் போது, அடி தப்பா விழுவது மாதிரி இருந்தால் கம்பை பிடுங்கிவிடுவர். காமெடிக்காக சில விசயங்கள் சேர்த்திருந்தாலும் நல்லாவே இருந்தது. திருவிழா விளையாட்டின் போது ரேடியோவில் கமெண்ட்ரி சூப்பர். பருத்திவீரன் படத்துல வர்ற ஆரம்ப்ப பாட்டு அளவுக்கு இதுல கிராமிய வாசமில்லை இருந்தாலும் ”பச்ச உடம்புக்காரி” பாட்டுக்க்கு குலுக்கல் அருமையாக தான் இருந்தது.
மதுரையை காண்பிக்கும் போது, வைகை ஆற்றின் A.V மேம்பாலமும் தெப்பகுளம் மாரியம்மன் கோவிலை மட்டும் தான் காட்டியுள்ளனர், அரசு மருத்துவமனை சத்தியமா அது மதுரை பெரிய ஸ்பத்திரியே இல்ல. வழக்கமான மதுரையின் லேண்ட் மார்க்கான கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்கள் மிஸ்ஸிங்.
கபடி ஆடும்போது ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் விளையாடி வருவார்கள் அதுவும் கபடியின் ஒரு சிறப்பு எனலாம்..
கபோட்ஸ்.. கபோட்ஸ்..
கபோடி..கபோடி..
பல்லிஞ் சடுகுடு.. பல்லிஞ் சடுகுடு...
கபடி கபடி..கபடி
படி..படி..படி (இங்க “க” சைலெண்ட்) இப்படி பல.. ஆனா இந்த படத்துல ரெண்டே ரெண்டு முறையை மட்டும் பயன்படுத்தியிருந்தது கொஞ்சம் உறுத்தலா இருந்தது.
பொங்கல் மற்றும் திருவிழாவை காரணமா வச்சு, ஊர்ல இருக்கிற எல்லா வீடும் வெள்ளை எல்லாம் அடித்து ரொம்ப சுத்தமா இருப்பதால், கிராம உணர்வு/வாசனை லைட்டா மிஸ்ஸிங். படத்தில் கொலைமுயற்சி ட்விஸ்ட் அருமையா இருந்துச்சு. முடிவு சோகமா இருந்தாலும், படம் முடிந்தவுடன் நெஞ்சம் கொஞ்சம் கனத்தது.
படத்தின் தலைப்பு வெண்ணிலா கபாடி குழு என்று தான் வர வேணும். அது கபடி இல்ல கபாடி.
பத்தாவது பொதுத் தேர்வு முடிந்தவுடன் ஒரே ஒரு நாள் கணக்கம்பட்டிக்கு போயிருக்கிறேன், இந்த கதாநாயகி மாதிரி, அதனாலேயே இந்த படத்து மேல தனியா ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு போச்சு, கணக்கம்பட்டியில் இருக்கும் போது ஒரே நாள் பழகிய ராணிக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ராணி நீ எங்க இருந்தாலும் புருஷன் புள்ள குட்டியோட பெயருக்கேத்த மாதிரி ராணி மாதிரி வளமோட வாழ்க
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..... | 3/02/2009 |
இந்த வார படங்கள் | 3/01/2009 |
வகை:
சினிமா
|


