அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

பொருளாதார பிரச்சினையும் தீர்வும் 12/09/2008

2007ம் ஆண்டு நான்காவது காலாண்டில் ஆரம்பித்தது இந்த பிரச்சினை. முதலில் (Real Estate because of Subprime loans) வீட்டு கட்டுமான துறை மற்றும் Mortgage வங்கியில் தான் ஆரம்பித்தது. அடுத்து நிதி மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதோடு நிற்காத இந்த புற்றுநோய் இப்போது மிக வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. Circuit City,  At&T, Sony,  Siemens, Citigroup, WaMu என பட்டியல் நீளுகிறது. பாதிப்பே வராது என்று நினைத்த Energy Sector-ம் (Chesapeake Energy)  அடி வாங்க ஆரம்பித்து விட்டது.

முதலில் அனைவரும் இதை ஒரு துறை சார்ந்த சறுக்கலாகத் தான் பார்த்தனர். அதனால தான் இது 7-8 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதும் வரும் வீழ்ச்சி என்றனர். அதன் பிறகு இது வேர்விட்ட போது தான் தெரிந்தது அது பெரிய ஆலமரம் என்று. கிட்ட தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு, இப்போ தான் அமெரிக்கா, தாங்கள் நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருப்பதாக ஒத்துக் கொண்டது, பலத்த காயத்துடன்.

இது அனைத்துக்கும் ஒரே காரணம் மக்களின் ஆசை தான். ”ஆசையே அழிவிற்ககு காரணம்” என புத்தர் ஆசையை ஒழிக்க ஆசை பட்டாலும். ஆசை தான் முன்னேற்றத்திற்கு அடிகோல் என்பது என் எண்ணம். ஆனால் மக்கள் கொண்டது பேராசை. அதன் பலன் தான் இந்த பீதி மற்றும் வீழ்ச்சி. 

உதாரணத்துக்கு, 2006 Jun-ல் எங்கள் ஊரில் ஒரு செண்ட் விவசாய நிலம் ரூ.2.5 ஆயிரம், அதே இடம் இப்போ ”ஒரு செண்ட் ரூ.23 ஆயிரம்” என்று ஏறிவிட்டது, இரண்டு வருடத்தில் அதன் விலை கிட்டதட்ட 10 மடங்கு. என்னதான் உருண்டு புரண்டு வேலை செய்தாலும் ஒரு ஏக்கரில் 30-40 நெல் மூட்டைக்கு மேல் விளையாது. பின்னர் எதனால் இந்த விலை? 

மதுரை நகரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் இடங்களை செண்ட் 5-10 லட்சத்திற்கு விற்று விட்டு அதே விலையில் அதிக நிலம் வாங்க ஆசைப்படுவது தான். நகரில் இருக்கும் நிலத்தை விற்பதற்கு வலை விரிப்பதில் இருந்து கிராமத்திலிருக்கும் நிலத்தை வாங்க தூண்டில் போடுவது வரைக்கும் (பாழாய்ப் போன) புரோக்கர்களின் பங்கு அளப்பரிது. காரணம் பேராசை. ரெண்டு (நாலு?) கமிஷன் கிடைக்குமே. அதே வேலையை தான் அமெரிக்காவில் Speculative Traders  செய்தனர். 

இவையாவும் நடந்து முடிந்து போன விசயங்கள், அதன் பலனாக நடந்து கொண்டிருப்பது ஆட்குறைப்பு மற்றும் திவால். காரணம் வாடிக்கையாளர்களுக்கு(மக்களுக்கு) உறுதியளித்த லாபத்தை கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இது தான் ஆயுதம். இதுவரை 533,000 பேர் வேலை இழந்துள்ளனர் அமெரிக்காவில் மட்டும். இது சரியான தீர்வா? என்னை பொருத்த வரையில் இது ஒரு மட்டமான தீர்வு தான்.

உதாரணத்துக்கு வேலையிழந்த ஒருவர் தன் வண்டி/வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போகலாம், அதனால் அவர் வீட்டை/வண்டியை இழக்க வேண்டியிருக்கும், அதனால் அவருக்கு கடன் கொடுத்த வங்கி பாதிக்கப்படும், அது வங்கி ஊழியர்களை பாதிக்கும், அப்படியே படிப்படியாக சங்கிலித் தொடர் போல் எல்லோரையும் பாதிக்கும். இதைத் தான் RIPPLE EFFECT  என்பார்கள். 

பிறகு என்ன தான் தீர்வு? நஷ்டத்தை பகிர்ந்து கொள்வது தான் எனக்குத் தெரிந்த சுமூகமான தீர்வு. ஊழியர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வரை பகிர்ந்து கொண்டால் இதை சமாளிக்க முடியும். இதையே தான் “பகிர்ந்துண்டால் பசி தீரும்.. தானாய் தின்றால் வீணாப் போகும்”  என்று பழமொழியாக எங்க ஊரில் சொல்வாங்க. 

உதாரணத்துக்கு 30% பட்ஜெட் குறைப்பு என்றால், ஆட்களைக் குறைக்காமல், சம்பளத்தை குறைக்கலாம். அதாவது 100% ஊதியம் வாங்கிய ஊழியர் 70% ஒத்துக் கொள்ளலாம். இங்கு நஷ்டம் பரவலாக்க படுகிறது. நீங்கள் கேட்பது புரிகிறது, இந்த 70% வைத்து கொண்டு, வீட்டு/கார் கடன் கட்டி குடும்ப வாழ்க்கை வாழ்வதெப்படி, நான் முன்னர் சொன்ன மாதிரி நஷ்டம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். வங்கிக் கடன் வட்டி குறைக்கப் பட்டு விட்ட்து. பெட்ரோல் விலையும் குறைந்து விட்டது, ரூ.50லட்சத்துக்கு விலை சொன்ன வீடு, ரூ.30லட்சத்துக்கும் கீழே வந்துவிட்டதே. $50க்கு விற்ற சிட்டி பேங்கின் பங்கு இப்போ $8 தானே, மற்ற விலைகளும் பரவலாக குறைய தொடங்கியுள்ளன. அதிர்ஷ்ட வசமாக சில நிறுவனங்கள் இதை கடைபிடிக்க தொடங்கியிருப்பது வரவேற்கதக்கது.

குறைந்தது ஆறு மாதத்திற்கான செலவு தொகையை சேமித்து வைத்துக் கொள்ளவும், ஆபத்தான காலங்களில் உதவலாம்.

Situation Song for Relaxation. 



அன்று - நேற்று – இன்று 12/06/2008

அன்று

வீட்டு வாசல்ல பஸ் வந்து நிக்குது... அதுல போகமட்டேன்.. சைக்கிள்-ல தான் போவேன்னு அடம்பிடிச்சு இந்த ஆடி காத்துல சைக்கிளை எத்தி பள்ளிக்கூடம் போறான்...

------  *****   ------

”டேய் நீ சொல்றது வட்ட கிணறு ரொம்ப சிறுசு.. நான் சொல்ற கிணறு ரொம்ப பெரிசு அதுலேயே ஆறேழு ரவுண்டு அடிப்பேன் தெரியுமா”

------  *****   ------

டேய்... மணி இப்பவே ரெண்டரையாச்சு...இன்னும் கா(ல்)மணி நேரத்துல படம் போட்டுவான்.. போகும் போது எல்லாம் ஏத்தம், வெயில் வேற மண்டைய பொளக்குது..என்ன சொல்ற..

இப்ப நான் ஓட்டுறேன்...வரும்போது நீ ஓட்டு. ஓங்கி மிதிச்சா சீக்கிரம் போயிடலான்டா..   

நேற்று

என்னடா Shirt கிழிஞ்சிருக்கு....?

White board-ல வந்தேன்டா..சரியான ஓட்டை வண்டி. அவன் மட்டும் தான் MIT stop-ல நிறுத்துவான்.. இல்லேன்னா.. குரோம்பேட்டையில இறங்கி நடந்து வரணும்..

------  *****   ------

Hey, இன்னைக்கு வாழைஇலை restaurant-க்கு போலாமா..?

போலாம்.. ஆனா, போகும்போது OneWay, Little India –ல இறங்கி நடக்கணும். அதனால Cab பிடிச்சா restaurant வாசல்லே இறங்கிக்கலாம்.. What do you say?

------  *****   ------

Hey, Wats up dude? Did you book that apartment.

No buddy! I am still thinking, because the Parking lot is little far way from that apartment. I am looking for an apartment which has parking lot closely.

இன்று

Hey you look trim and different

Oh..! really? Thanks.

------  *****   ------

What did you say??!!

Yes. Saturday we have visited Washington DC and Balitmore temple and Sunday Newyork full round. Monday Pennsylvenia downtown and Monday night Atlantic City and I dropped my friend in PA Airport, went to Apartment,had a shower and here I am.

Who drove the car?

All three days I was the only person who drove the car. Only one time in Newyork we took cab.

Oh.. my god. How did you get that energy buddy.

------  *****   ------

நெருங்கிய நண்பர் ஒருவரின் வற்புறுத்தலுக்கு இணங்க.. கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தன் விளைவு தான் இது. காலையில் எழும்போது அலுப்பு எதுவும் தெரிவதில்லை. நாள் முழுவதும் புத்துணர்ச்சி- யோட இருக்க முடியுது.

தினமும் ஒரு அரை மணி நேரம் உங்களால் முடிந்த எதாவது ஒரு உடற்பயிற்சி செய்யுங்க, இல்லேன்னா அந்த நேரத்துல ஏதாவது ஒரு வேலை பார்த்து பணம் சேர்த்து வைங்க, பின்னாடி மருத்துவ செலவுக்கு உதவலாம்.. நான் ஊத வேண்டிய சங்கை ஊதிட்டேன்... இனி உங்க பாடு பத்து லட்சம்.

உங்களின் உடற்பயிற்சி ஆர்வத்தை தூண்ட இளையராஜாவின் இந்த பாடலை பாருங்கள்.

Little Women - ஒரு பார்வை. 12/03/2008


வட அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலத்தில் (Massachusetts) உள்ள Concord –ல் நான்கு பெண்களைக்(Meg, Jo, Beth and Amy) கொண்ட குடும்பத்தின் கதை. எழுத்தாளாராக வரும் கதையின் நாயகியின்(Jo) பார்வையில் விரிகிறது கதை.  

இந்த நான்கு சகோதரிகளின் சின்ன சின்ன பனித்துளி போன்ற வாழ்வியல் நிகழ்வுகளை ஒன்றாக சேர்த்து உருவான ஒரு தெளிந்த நீரோடையைப் போல் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது புதினத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம். 

நான்கு பெண்களும் தங்களுக்கென ஒரு தனித்திறமையுடன் இருக்கிறார்கள். மூத்தவள்(Meg) பொறுப்பான/அன்பான/இரக்கமுள்ள பெண்ணாக வருகிறாள், இளையவள்(Beth) Piano   வாசிப்பதில் கெட்டிக்காரி. கடைக்குட்டிக்கு(Amy) ஓவியத்தின் மேல் தீவிர காதல்.

இது கிட்ட தட்ட Sense and Sensibility  ( இந்த படத்தின் தமிழாக்கம் தான் கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்..),  Price & Prejudice  படங்களை போல நகைச்சுவை/காதல் கலந்த குடும்ப்படம். Batman Begins, Dark Knight (முதன் முதலில் IMAX-திரையரங்கில் பார்த்து வியந்த படம்), Prestige and The Machinist போன்ற படங்களை பார்த்த பிறகு, Christian Bale நடித்த படங்களை தேடிப்பிடித்து பார்க்கும் போது கிடைத்ததுதான் இந்த Little Women. ஆனால் கதாநாயகி Winona Ryder  (Jo)  தனது அருமையான நவரச நடிப்பினால் மற்ற அனைவரையும் பின்னே தள்ளிவிடுகிறாள். அதற்கான வாய்ப்பை கதை அவருக்கு ஏற்படுத்தி தந்திருந்தது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்;  கேலி, கிண்டல் என்று நான்கு சகோதரிகளின் சந்தோசத்தில் ஆரம்பிக்கிறது படம். அவர்களின் வாழ்வில் சின்ன சின்ன சறுக்கல்கள், கோபங்கள், வருத்தங்கள், இழப்புகள் இருந்தாலும், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், Winona Ryder  வின் அழகான நடிப்பும் இப்படத்தின் அம்சம்.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் புத்தகம் செல்லும் திசை எனும் பதிவில் தன் புத்தகங்களை இழக்கும்போது அடையும் வருத்தத்தை மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். அது ஏற்படுத்திய பாதிப்பை- Jo தான் எழுதிய புத்தகங்கள் தீயில் எரிவதைக் கண்டு பதறி/தவித்து அழுகின்ற காட்சி ஏற்படுத்தியது.

பக்கத்து வீட்டு பையனுடன் Christian Bale (Laurie) விளையாட்டு/நாடகம் நடித்தல் என்று நட்புடன் பழக ஆரம்பிக்கிறாள் Jo.  தன் சகோதரியின்(Meg) கல்யாணத்திற்கு பிறகு, நண்பனாக பழகிய Laurie அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த, ”நாம் இருவரும் நல்ல நண்பர்கள் தான், என்னால் உனக்கு மனைவியாக முடியாது” என்று வருத்தத்துடன் மறுக்கிறாள் Jo. இதனால் ஏற்படும் மன உளச்சலை தவிர்க்க, எங்கேயாவது சென்று விடலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு பிடித்த ஐரோப்பா-விற்கு அவளுக்குப் பதிலாக தங்கையை(Amy)-ஐ அழைத்து செல்கிறாள் அவளது அத்தை.

வேறு வழியின்றி வாழ்வில் ஒரு மாற்றத்தை விரும்பி வேலைக்காக மக்கள் நெருக்கடி மிகுந்த நியுயார்க் செல்கிறாள். அங்கே ஜெர்மனியை சேர்ந்த ஆசிரியரை (Friedrich ) சந்திக்கிறார், இருவரின் முதல் சந்திப்பு ஒரு அருமையான காட்சி.

ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாததில் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதில் முடிகிறது அக்காட்சி. “Reading a good book is like being home again” – ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் சொல்லும் போது எழுத்தின் மீது அவருக்கும் இருக்கும் ஆர்வத்தையும், வீட்டை விட்டு பிரிந்திருப்பதின் துயரத்தையும் ஒரு சேர மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பாள் அந்த காட்சியில்.

இருவரும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் காதல் கொள்கிறார்கள். Friedrich  - மேல் உள்ள பாசத்தை/காதலை அவன் கொடுத்த ஆரஞ்சுபழத்தை ரசித்து சுவைத்து சாப்பிடுவதின் மூலம் Jo வெளிப்படுத்தியிருப்பது ஒரு கூடை கவிதை. 

இதனிடையே தன்னுடைய கதைகளை பிரசுரிக்கவும் முயற்சி எடுக்கிறாள். இவரின் படைப்புகள் Sentimental/Fairy tales கதைகளாக இருப்பதாகக்கூறி, பிரசுரிக்க மறுக்கிறார்கள். இதனால் மக்கள் விரும்பும் திகில், குற்றங்கள் நிறைந்த கதைகள் எழுத ஆரம்பிக்கிறாள். ஆனால் அந்த கதைகளில் அவளின் உள்ளுணர்வையும் தனித்தன்மையையும் காண முடியாத்த்தால் வருத்தம் கொள்கிறார் Friedrich . கதைகளை புனையாதே உன் வாழ்க்கையிலிருந்து/அடிமனதிலிருந்து எடு என்று அறிவுறுத்துகிறார், இதனால் இருவருக்கும் சிறு மனக்கசப்பு ஏற்படுகிறது. 

அதே சமயம் தன் தங்கை(Beth)யின் உடல்நிலை சரியில்லதாதால் அவரை பிரிந்து வீடு செல்கிறாள். அங்கே சுகமில்லாத தங்கைக்கு கதைகள் சொல்லி தெம்பூட்டுகிறாள், அவளும் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட தனிமை இவளை ஆட்கொள்கிறது. 

ஒருநாள் தங்கையின்(Beth) பெட்டியை திறந்து பார்க்கும் போது, அவள் சேகரித்து வைத்திருக்கும் சிறு வயதில் பயன்படுத்திய பொருட்களை கண்டு வியப்படைகிறாள். இந்த தனிமையை பயன்படுத்தி தனது வாழ்க்கை அனுபவங்களை ஒன்றாக புனைந்து ஒரு புதினம் எழுதி அதை Friedrich -க்கு அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் Laurie –க்கு தனது தனிமை குறித்து கடிதம் எழுதி அவனை வரவைக்கிறாள். அவனும் ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தியோடு Jo-வை சந்திக்கிறான்.

மூத்த சகோதரி இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி சந்தோஷமாக இருக்கிறாள். கடைக்குட்டியும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க தயாராகிறாள். இவள் மட்டும் வாழ்வில் அடுத்த் நிலையை அடையாமல் இருக்கிறாள். தனது அத்தை விட்டு சென்ற வீட்டை வைத்து பள்ளிக்கூடம் நட்த்தலாம் என்றிருக்கிறாள். 

அடுத்து அடிக்கிறது வசந்தகாலம் அவளின் வாழ்க்கையில்,”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல ,  பாருங்கள் இந்த 4 நிமிட இறுதி காட்சியில் அவரது நடிப்பையும் இயற்கை அழகையும்.


நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியது போல், இருவரும் தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் போது, மழையை இணைத்து, அந்த காதல் காட்சியின் உணர்வை மிகைபடுத்தியிருப்பது மிகவும் அருமை.

பார்ட்டியில் தன்னை வெறித்து பார்ப்பவனிடமிருந்து தப்பிப்பது/சகோதரியின் முடியை கருக்கி விட்டு வருந்துவது/தங்கையை அடித்த ஆசிரியரின் மீது கோபம் கொள்வது/ Laurie-ஐ தங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது/ தன்னை எழுத்தாளாராக காட்டிக் கொடுத்த கையில் இருக்கும் மையை (INK) எச்சிலால் தொட்டு அழிப்பது/ ஒருவித தயக்கம் கலந்த வெக்கத்துடன் Friedrich  தந்த காஃபியை அருந்துவது /Opera நிகழ்ச்சியின் போது முத்தமிடும்போது ஏற்படும் இடையூறின் போது காட்டும் நாணம், அதை தொடர்ந்து முத்தம் – என ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறப்பது போன்ற ஒரு துள்ளலான நடிப்பினால் ஆங்காங்கே தன்க்கெனெ ஒரு தனி முத்திரையை பதித்திருப்பாள், அதனால் சிறந்த நடிகைக்கான OSCAR விருதுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டாள்.

படத்தில் எனக்கு பிடித்த சில முத்தான வசனங்கள்:

Jo, எனக்கு எதுவும் எழுத முடியலியே என வருந்தும் தங்கை(Beth)யிடம், First rule of writing is, never write what do you know?

”You only need one, if he is the right one”  - முடி கருகியதால் தன்னை யாரும் பார்ட்டியில் கவனிக்க மாட்டார்களே என்று வருந்தும் Meg-டம் கடைக்குட்டி(Amy).

Jo  தனது கதையை விவரிக்கும் போது, Late at night, my mind would come alive with voices and stories and friends as dear to me as any in the real world. I gave myself up to it, longing for transformation. 

Friedrich -டம் தனது முதல் சந்திப்பில் Jo, Some books are so..... familiar. Reading them is like being home again.

மரணப்படுக்கையில் இருக்கும் Beth, Jo விடம் I love being home. But I don't like being left behind. Now I am the one going ahead

இறுதிகாட்சியில், 

Friedrich  அவளது புதினத்தைப் பற்றி, “Reading your book is like opening a window into your heart”

Friedrich  தயக்கத்துடன் Will you have me, பதிலுக்கு Jo முழு சந்தோசத்துடன் with all of my heart..

இதனைத் தொடர்ந்து 1993-ல் Martin Scorsese இயக்கத்தில் Daniel Day-Lewis -வுடன்( “The Unbearable Lightness of Being” -  படத்தில் இவருடைய “Take off your cloths” வசனம் மிக பிரபலம் ) நடித்த Age of Innocence பார்க்கலாம் என்றிருக்கிறேன்.


மழை - என் பார்வையில்...! 12/02/2008


மழை - பொதுவாக எல்லோருக்கும் பிடித்த சீதோஷ்ண நிலை. மழை என்றவுடனே எனக்கு நினைவுக்கு வருவதன்னவோ சுறுசுறுப்பு தான். மழை பெய்ய ஆரம்பிக்கும்போது, நெல்லை அள்ளி குவிப்பதிலாகட்டும், ஆடு/மாடுகளை கட்டுவதிலாகட்டும், குழந்தைகளை தேடுவதிலாகட்டும், புதிதாக நட்ட நாற்றுகள் பிறழாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சுவதிலாகட்டும், மக்களிடையே ஒரு தனி பரபரப்பை ஏற்படுத்திவிடும் இந்த மழை. அப்படி சுறுசுறுப்பு இல்லாத சோம்பேறிகளை “எருமை மாட்டுல மழை பெய்த”  மாதிரி நடக்குறான் பாரு-னு சொல்லி கிண்டல் செய்வது வழக்கம். அதனால் மழையை சுறுசுறுப்பின் வினையூக்கியாகவே பார்க்கிறேன்.

மழையையும் கடலையும் ( பெண்ணையும் :) தான் ) வர்ணிக்காத எழுத்தாளனோ கவிஞனோ இருக்கவே முடியாது. இது ஒட்டுமொத்த உலகத்துக்கே பொதுவான ஓர் அம்சம். அப்படி இருக்கையில் நான் மட்டும் விதியை மீற முடியுமா என்ன? 

ஒரே மழை, பெய்யும் இடம் மற்றும் நேரத்தை பொருத்து வெவ்வேறு பயனையும் பாதிப்பையும் தருகிறது. கிராமத்தில் இருந்தபோது, மழை எப்போது பெய்தாலும் எல்லொருக்கும் ஒரே விதமான விளைவு தான் இருக்கும், ஏனென்றால், எல்லோருக்கும் பொதுவான தொழில் விவசாயம் தான், ஒருவருக்கு பாதிப்பு என்றால் அது அனைவருக்குமே பொருந்தும். ஒரு விதமான ஒற்றுமை இருந்த்தது. அறுவடை சமயம் தவிர மற்ற நேரங்களில் வருகிற எல்லா மழையுமே எங்களுக்கு பயன் தரக்கூடியதே, இவ்விஷயத்தில் விவசாயிகளின் உற்ற தோழனாகவே மழையை நான் பார்க்கிறேன்.

என் கிராமத்து வாழ்க்கையில் மழை என்றுமே எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும்/ சந்தோசம் தரக்கூடியாதாகவும் தான் இருந்திருக்கின்றது. மழை பெய்தால், சீக்கிரம் பள்ளியில் இருந்து கிளம்பிடலாம் ( எங்கள் அளவீடு விளையாட்டு மைதானம் தான், விளையாட்டு மைதானத்திற்குள் தண்ணீர் நிரம்பினால் விடுமுறை தான்) , மறுநாள் மீன்பிடிக்க, ஈசல் பிடிக்க, காளான் மற்றும் கீரை பிடுங்க, ஆற்றுக்கு குளிக்க - இப்படி பலவகையான சந்தோஷங்களுக்கு மழை காரணமாக இருந்திருக்கின்றது.

மழையின் போது வெளிவரும் அந்த மண்ணின் மணம்,  நுகர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுவாசம் - ஒரு கோடி இன்பம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக சுத்தமான ஒன்றாக நான் கருதுவது மழைநீர் மட்டுமே. இதை விட சந்தோசமான விஷயம் வேறென்ன வேண்டும். இயற்கை அன்னை நம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் விருந்தினராகத்தான் நான் மழையை பார்க்கிறேன்.  

கோடை காலங்களில் மழை பெய்த மறுநாள் காலை நிலமானது பிறந்த குழந்தையின் பஞ்சு விரல்களைப் போன்றோரு மென்மையாய் இருக்கும். மழைக்காலங்களில் தட்டான், ஈசல், வண்ணத்துப்பூச்சி, ரயில் பூச்சி (உண்மையான பெயர் என்னனு தெரியல), நத்தை, தண்ணீர் பாம்பு உட்பட பல ஜீவராசிகளை தரிசிக்கலாம். மழைநீர் தான் ஒரே நாளில் இத்தனை ஜீவராசிகளாக உருமாறியதோ! போன்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்த தவறவில்லை. மழையை ஒட்டுமொத்த ஜீவராசிகளின் ஒரே தாயாக பார்க்கிறேன்.

தண்ணீர் எப்படி தானிருக்கும் பாத்திரத்தின் வடிவத்தையும் வண்ணத்தையும் பெறுகிறதோ, அதே தன்மை மழைக்கும் உண்டு, அதுமட்டுமல்லாமல் மழையால் நம் உள்மன உணர்வுகளை மிகைப்படுத்த முடியும். ஒரு சந்தோசமான பாடலையும், ஒரு சோகமான மரண நிகழ்வையும் – மழையுடன் இணைக்கும் போது அதன் வலிமை அதிகமாவது மறுக்கமுடியாத ஒரு உண்மை. 

வழக்கமாக அணை/ஆற்றிலிருந்து பாயும் வெள்ளத்திற்கும், மழையினால் பாயும் வெள்ளத்திற்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு வேற்றுமை உண்டு. மழை வெள்ளத்தில் ஒரு வீரியமும்/வசீகரமும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன், அதன் அலை வடிவமும் வித்தியாசமானதா இருப்பதாகவே நான் உணர்ந்திருக்கின்றேன், அதனால் தான் மழை வெள்ளம் ஓடுவதை பார்த்துகொண்டே இருந்தால், நேரம் போவதே தெரியாது. எங்கள் வீட்டு முன் இரண்டு தெருவின் மழைநீரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வெள்ளமாக செல்லும், மழை பெய்யும் போதும்/பெய்த பிறகும் பார்க்க பார்க்க அலுக்காத ஒரு அற்புதமான இயற்பியல் நிகழ்வு அது, காணக்கிடைக்காத கண்கொள்ளா காட்சி. இது மிகைப்படுத்தப்படாத உண்மை.

இப்படி பல வகைகளில் மக்களுக்கு பயன் தரக்கூடிய இந்த மழை செல்வத்தை நான் மிகவும் நேசிப்பதால்தான் என் தங்கை மகளுக்கு வர்ஷா (மழை) என்று பெயரிட்டேன். இந்த இயற்கையின் வரப்பிரசாதத்தை சரியான முறையில் சேமித்துக் கையாளாததால் தான் இன்று பலவிதமான தொல்லைகளை அனுபவித்து வருகிறோம்.

மழைநீரை சேமிப்போம். மகத்தான வாழ்வை அடைவோம்.

தொடர்புள்ள பதிவு : மழை - அரசியல்

காதலிக்க நேரமில்லை 12/01/2008


காதலிக்க நேரமில்லை - தமிழ் நகைச்சுவைத் திரைப்படங்களில், தனக்கென ஒரு தனியிடத்தை இன்றும் தக்க வைத்துக்கொண்டுள்ள படம். அதே பெயரைக் கொண்ட ஒரு சின்னத்திரை தொடரைப் பற்றிய பதிவு தான் இது. நமது சக பதிவர் ”கனா காணும் காலங்கள்” தொடரைப் பற்றி எழுதியிருந்தார். அவருக்கு நான் எழுதிய பின்னூட்டத்தில் எனக்கு பிடித்த “காதலிக்க நேரமில்லை” தொடரை பற்றி தெரிவித்தேன். அதை தொடர்ந்து இந்த பதிவு.

வெள்ளிக்கிழமை வந்தாலே போதும்,  சின்னத்திரை இயக்குநர்கள், தாய்மார்கள் வயித்துல புளியை கரைச்சுடுவாங்க. “அஞ்சலிக்கு என்னாயிருக்கும்”, “தொல்காப்பியன் தப்பிச்சுடுவார?”, “கஸ்தூரி நிலைமை அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சிடுமா?” இப்படி பல கேள்விகள் வார இறுதி நாட்கள் முழுவதும் அலை அலையா மனசுல ஓட வச்சுடுவாங்க. 

உதாரணத்துக்கு ஒரு வெள்ளிக்கிழமை இந்த மாதிரி ஒரு காட்சி கண்டிப்பா இடம்பெறும். அப்படியே அந்த பெண் ( கண்டிப்பா கதையின் நாயகியா இருப்பது சிறப்பம்சம்) மரணபயத்தில் வீட்டில் மெதுவா..மெதுவா( நீங்களும் கொஞ்சம் மெதுவா படிங்க) நடந்து வந்து சுமார் ஒரு 15 நிமிடம் நடந்ததுக்கு பின், குளியலறைக் கதவைத் திறந்து,  தாளிட்டு light switch on பண்ணி, திரும்புவாள்....... திரும்பி “ஆ...ஆ.....ஐயோ அம்மா” .... அலறலுடன் அன்றைய எபிசோட் முடிஞ்சுடும்... அப்புறம் திங்கட்கிழமை வந்து பார்த்தா.. அவ ஒரு சின்ன கரப்பான் பூச்சிய பாத்து பயந்து போயிருப்பா... நிறைய வெள்ளிக்கிழமைகள் இப்படி ரத்த களரியோட முடிஞ்சிருக்கு.

சரி விஷயத்துக்கு வருவோம்.. காதலிக்க நேரமில்லை - இப்படி கொடுமைகள் நிறைந்த “சின்னத்திரை தொடர்களில்” சற்று வித்தியாசமாக,  Vijay TV காதலிக்க நேரமில்லை/கனா காணும் காலங்கள்/கலக்க போவது யாரு/காஃபி வித் அனு. கவனிக்க பெரும்பாலான தொடர்கள் “க” வில்ஆரம்பித்தன. இதை ஒரு Sentiment-ஆகவே Vijay TV செய்ததாக கேள்வி. மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும், விஜய் தொலைக்காட்சி தனது தொடர்களை பரவலாக்கியது. Sterotype தொலைக்காட்சித் தொடர்கள் குறைய தொடங்கின. இதைப் பார்த்து பயந்து போன சன்,  விஜயின் தொடரை காப்பியடித்தது மட்டுமல்லாமல், கடத்தியும் (அசத்த போவது யாரு) வந்தனர். பணம் பத்தும் செய்யும். என்னத்த சொல்றது.

ஆமா, நான் என்ன சொல்ல வந்தேன்..ம்ம் காதலிக்க நேரமில்லை - என் நண்பர் ஒருத்தர் சொல்லித்தான் இந்த தொடரைப் பற்றி தெரிய வந்தது.  "First Impression is best Impression" - எனக்கு அந்த Title Song ரொம்ப பிடிச்சுப்போச்சு, அதன் பின் அந்த தொடரை youtube-ல தேடி பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு TV Serial பற்றி இருந்த எண்ணங்களை தவிடு பொடியாக்கியது அந்த தொடர். அதுக்கு முக்கிய காரணம் கதை களம் - சிங்கப்பூர். நம்ம சிங்கப்பூர். 

நான் வேலைக்காக வெளிநாடு சென்ற முதல் நாடு சிங்கப்பூர். ஆனா எனக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக பிடிக்கவில்லை. ”கலைஞ்சிருந்தா தான் வீடு.. இல்லேன்னா அது மியுசியம்.” - இப்படி சினேகா டயலாக் விட்டு எங்க ஊரு பெருமை பேசித் திரிந்தேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?” பாடலை ஒரு பத்து தடவையாவது கேட்டுட்டு தான் தூங்கிறது. இல்லாத போது தான் அதனோட அருமை தெரியுங்கிறது 100% சரியே. சிங்கப்பூர்ல இருக்கும் போது நம்மூர் சொர்க்கமா தெரிஞ்சுது, இப்போ அமெரிக்கா வந்தபிறகு சிங்கப்பூரும் சொர்க்கமா தெரியுது. இதுதாம்பா உலகம்/வாழ்க்கை.

வந்துட்டேன்..வந்துட்டன்ன்ன்.. காதலிக்க நேரமில்லை - இந்த தொடரின் கதாநாயகி ”சந்திரா லட்சுமணன்” (பெயர் சரிதானா?), இவளோட அந்த ரெண்டு பெரிய்ய்ய கண்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெக்கப்பட்டு “க்ணுக்”-னு சிரிப்பது பிடிக்கும். இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. இவளுக்கு ஜோடியா ஒருத்தன் வருவான் பாருங்க கண்டாலே சகிக்காது ( யாருப்பா அது “யோய்”-னு சவுண்டு விடுறது). ப்ரஜன் - அஞ்சலி தொடர்ல இவனோட நெகடிவ் கதாபாத்திரம் இவனுக்கு சரியா பொருந்தியது, அதுக்கு அப்புறம் அதை இரட்டை வேடமா மாத்தி கொடுமை பண்ணிட்டானுங்க. 

சிங்கப்பூரில் உள்ள இடங்களை ஐந்தே நாட்களில் பார்த்து விடலாம், தேக்கா மால், Esplanade Theatre,  Sun Tech, Little India, Orchard Road, Temples, Mustafa , Beach, Sentosa and Zoo. இந்த தொடரிலும் அப்படிதான் ஒரு 30 எபிசோடுக்குள் மொத்த சிங்கப்பூரையும் காட்டிட்டாங்க.  நாங்க சிங்கப்பூரை சுத்தி பார்த்ததும், படையெடுத்தது மலேசியாவுக்குதான். படம் பார்க்க் Johar Bahru-க்கு தான் போறது. 

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ”அந்நியன்” மலேசியாவுலதான் பார்த்தேன், இறுதி காட்சியில விக்ரம் எல்லோரையும் (என்னையும் சேர்த்து தான்)  உக்கார வச்சு (நிக்க வச்சுதானே கேப்பாங்க) கேள்வி மேல கேள்வி கேப்பாரு. அப்போ இந்தியாவை மலேசியா, சிங்கப்பூரோட ஒப்பிட்டு பேசுவாரு.. அதுல “மலேசியா”-னு சொல்லும் போது பின்னாடி இருந்து ஒரே சத்தம்/கூச்சல்/ஆர்ப்பாட்டம்/அலப்பறை..எனக்கு ஒன்னு புரிஞ்சுது நம்ம தமிழன் எந்த அளவுக்கு தமிழை நேசிக்கிறானோ அதே அளவு அவன் வாழ்கிற நாட்டையும் நேசிக்கிறானு.

சரி..சரி.. வர்றேன்.. ம்ம்ம்.. காதலிக்க நேரமில்லை - கதைனு பெரிசா சொல்ல ஒன்னுமில்ல, ஆனா கதையின் போக்கு ரொம்ப யதார்த்தமா ஒரு கவிதையா இருந்தது. ஒருவித மெலிதான உணர்வுடன் கூடிய சின்ன சின்ன கோபங்கள் அதனால் வருகிற ஊடல்கள், பின்னர் கூடும் போது காட்டுகிற பாசம் இப்படி எல்லாத்தையும் அழகா சொல்லியிருந்தாங்க. 

வழக்கமான கொடுமைக்காரன் கணவன்/ தறுதலை மகன், ஒருத்தர் முகத்தையே Slow Motion-ல ரெண்டு நிமிஷத்துக்கு காட்டுறது போன்ற கொடுமை எதுவும் இல்லாதது சிறப்பு. இன்னொரு முக்கியம்சம், நண்பனா வர்ற ஸ்ரீநாத்(?), அவர் பண்ற சேட்டை+எதுகை-மோனை/Timing காமெடி எல்லாம் சரவெடி தான் போங்க. இவருக்கும் பாண்டியராஜன் மாதிரி திருட்டுமுழி. உதாரணத்துக்கு இந்த Clip பாருங்க.  



கிட்டதட்ட ஒரு 50 எபிசோடு பார்த்தேன் அதுக்கு அப்புறம் காலநேரம் சரியா அமையல, நேரம் கிடைக்கும்போது திரும்பவும் ஒரு ரவுண்டு வரணும்.  Title Song - வரியை இந்த பதிவுல போடலாம்-னு இருந்தேன், அதுக்கு அவசியம் இல்லாம் போயிடுச்சு. இந்த லிங்க் அழுத்தி பாடல் வரிகளை பார்த்துக் கொள்ளுங்கள்.

 செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு”  என்னே ஒரு அருமையான வரி. நானும் செய்தி அனுப்ப தயார் தான் முகவரி இருந்தா கொடுங்களேன்.